விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி யுமான தொல்.திருமாவளவன், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம் என்றார். நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு தமிழக மக்கள் மகத்தான ஆதரவை வழங்கியுள்ளனர் என்று கூறினார்.சிதம்பரம் தொகுதியில் என்னை வீழ்த்த 50 முதல் 100கோடி வரை செலவு செய்திருக்கிறார்கள், அவதூறு பிரச்சாரம் செய்தார்கள் ஆனால் மக்கள் ஆதரவுடன் வென்றுள்ளேன் என்றார்.
சங் பரிவார் போன்ற அமைப்புகள் ராகுல்காந்தி உள்ளிட்டோரை இந்துக்களுக்கு எதிரி என்பது போல காட்டினார்கள் என்று கூறினார். மேலும், தேசிய அளவில் எது நடக்கக் கூடாது என நினைத்தோமோ, அது நடந்து விட்டது என்றும் வட மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுவதில் அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்தது, ஐயத்தை ஏற்படுத்தியது என்றார். குளம்,குட்டைகளில் வேண்டுமானால் தாமரை மலரலாம், தமிழ் நிலத்தில் ஒரு போதும் தாமரை மலராது என்றார். மேலும் தமிழ்நாடு சமூகநீதிக்கான மண், சாதி மத சக்திகளுக்கு இங்கு இடமில்லை என மக்கள் நீருபித்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.