உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிடும், தனது தாய் சோனியா காந்திக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வருகிற 6ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி, அமேதி உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையொட்டி, ரேபரேலி தொகுதியில் உள்ள ஹன்சாகா புர்வா கிராமத்துக்கு சென்ற பிரியங்கா காந்தி அங்கு உள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.அதன் பின்னர் அங்குள்ள பாம்பாட்டிகளை சந்தித்து அவரிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது, அவர்கள் வைத்திருந்த பாம்புகளை கையில் தூக்கி விளையாடினார். வாய் தைத்த பாம்பாக இருந்தாலும், பிரியங்கா காந்தி சற்றும் பயமில்லாமல் இருந்தது அங்கிருந்தவர்களை வியப்படைய செய்தது.
அப்போது பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் - பாரதிய ஜனதா கட்சி இருவேறு துருவங்கள். நாங்கள் எப்போதும் அவர்களை எதிர்த்து போராடுவோம், அவர்கள் அரசியலில் முக்கிய எதிரி.
எந்த விதத்திலும் பாஜக பயனடையும் வகையில் செயல்படமாட்டோம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். நாங்கள் கடுமையாக போராடுகிறோம், எங்கள் வேட்பாளர்கள் வலுவாக உள்ளனர் என கூறினார். பா.ஜ.க விரும்புகிறது உண்மையான பிரச்சினையிலிருந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்ப, கட்டுக்கதைகளை உருவாக்க பா.ஜ.க விரும்புகிறது என்றும் பிரியங்கா காந்தி பேசினார்.