அரசியல்

“இப்படியொரு வேட்பாளரை நிறுத்திவிட்டு பயங்கரவாதத்தை ஒழிக்கப்போகிறாரா மோடி?” - வைகோ கேள்வி! 

“பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி வருவதாக பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால், பா.ஜ.க சார்பில், வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளவர்களின் பின்னணி அதிர்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார் வைகோ.

“இப்படியொரு வேட்பாளரை நிறுத்திவிட்டு பயங்கரவாதத்தை ஒழிக்கப்போகிறாரா மோடி?” - வைகோ கேள்வி! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி வருவதாக பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால், பா.ஜ.க சார்பில், வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளவர்களின் பின்னணி அதிர்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார் வைகோ.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

“நடைபெற்றுக் கொண்டிருக்கும் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி வருவதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். ஆனால், பா.ஜ.க சார்பில், வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு உள்ளவர்களின் பின்னணி அதிர்ச்சி அளிக்கிறது.

மத்தியப் பிரதேச தலைநகர் போபால் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கை எதிர்த்து, சாத்வி பிரக்யா சிங் என்பவரை, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நிறுத்தி இருக்கின்றது.

2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் நாள், குஜராத், மராட்டிய மாநிலங்களில் 3 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. பத்து பேர் உயிர் இழந்தனர்; 80 பேர் காயம் அடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்து பயங்கரவாத அமைப்புகள் இருப்பதாக, புலன் விசாரணையில் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர்தான் சாத்வி பிரக்யா சிங்.

இவர், 1997 -ம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிசத் அமைப்பில் இணைந்தவர். இன்று அக்கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவர். வன்முறை, வெறுப்பு உணர்வை விதைக்கின்ற வகையில் பேசி வருபவர். ஆனால், “சாத்வி பிரக்யா சிங் இந்தியப் பண்பாட்டுக்கும், பழம்பெருமைக்கும் அடையாளமாகத் திகழ்பவர்” என்று பிரதமர் மோடி புகழ்ந்து உரைத்துள்ளார்.

அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்திய ஆட்சிப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற 71 அதிகாரிகள் ஒன்றாகச் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், “மாலேகான் குண்டு வெடிப்பிற்காக என்னைக் கைது செய்தபோது, ஹேமந்த் கர்கரே என்ற காவல்துறை அதிகாரி, விசாரணையின் போது என்னைத் துன்புறுத்தினார். அவருக்கு நான் சாபம் கொடுத்தேன். அதன் விளைவாக, மும்பையை பயங்கரவாதிகள் தாக்கியபோது, ஹேமந்த் கர்கரே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சாத்வி பிரக்யா சிங் பேசி இருக்கின்றார்.

பயங்கரவாதிகளிடம் இருந்து அப்பாவிப் பொதுமக்களைக் காப்பதற்காகப் போராடி உயிரை ஈந்த கர்கரேவைப் இந்திய அரசு பெருமைப்படுத்த வேண்டும். அதற்கு மாறாக, அவரை இகழ்ந்து பேசிய ஒருவரை, வேட்பாளராக நிறுத்தி இருப்பதோடு மட்டும் அல்லாமல், பிரதமர் மோடி அவரை இந்தியப் பண்பாட்டின் அடையாளம் என புகழ்ந்து பேசி இருப்பது, எங்களைப் போன்ற அரசுப் பணியாளர்களைப் பெரிதும் புண்படுத்தி இருக்கின்றது என அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். சாத்வி பிரக்யா சிங்கை வேட்பாளராக நிறுத்தக் கூடாது” என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில முதல்வர் புபேஷ் பாகேல், “சாத்வி பிரக்யா சிங் எந்நேரமும் ஒரு கத்தியைக் கையில் வைத்து இருப்பவர்; பிலியாகர் என்ற இடத்தில், 2001 -ம் ஆண்டு சைலேந்திர தேவகன் என்ற இளைஞரின் நெஞ்சில் கத்தியால் குத்தியவர் பிரக்யா சிங் என, நேற்று ஒரு திடுக்கிடும் குற்றச்சாட்டைக் கூறி உள்ளார்.

குற்றப்பின்னணி கொண்ட சாத்வி பிரக்யா சிங்கை வேட்பாளராக நிறுத்தி, அவர் இந்தியப் பண்பாட்டின் அடையாளம் என்று புகழ்ந்து உரைக்கின்ற பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை ஒழிக்கப் போவதாகக் கூறுவது ஏமாற்று வேலை.

நியூசிலாந்து மசூதியில் தாக்குதல் நடத்தி 50 பேர்களைக் கொன்ற வெள்ளை இனவெறி ஆகட்டும், இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆகட்டும், மாலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய சங் பரிவார் கும்பல் ஆகட்டும், பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும், அதை எதிர்த்துப் போராடுவதே பொதுமக்களின் கடமை.” எனத் குறிப்பிட்டுள்ளார் வைகோ.

banner

Related Stories

Related Stories