அரசியலை பெரும்பான்மையானோர் குறை கூறுவதேன்/
Nihilism என ஒரு சிந்தனை பாணி இருக்கிறது. எல்லா தத்துவங்களையும் சிந்தனைகளையும் வாழ்க்கை போக்குகளையும் நிந்திக்கும் பாணி! எல்லாவற்றிலும் அவநம்பிக்கையுடன் பேசிக் கொண்டே இருப்போம்.
இன்றைய காலகட்டத்தில் இந்த பாணி மிக அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் 'அரசியலே ஒரு சாக்கடை, எல்லாருமே திருட்டுப்பயல்' என நாம் நம்ப வைக்கப்படுகிறோம். உண்மை என்ன தெரியுமா? அப்படி நம் அனைவரையுமே நம்ப வைப்பதற்கு பின்னும் ஓர் அரசியல் இருக்கிறது.
Nothing is perfect என்பதே இயற்கையின் நியதி. அனைத்தையும் இயக்கும் இயற்கைக்கே இதுதான் நியதி என்றால் இயற்கையில் இருந்து விலகி செயற்கையாக கட்டப்பட்ட சமூகமும் அதை கட்டிய மனிதனும் மட்டும் எப்படி perfect-ஆக இருக்க முடியும்?
நாம் எல்லாரும் குறை கொண்டவர்களே!
நீங்கள் அழகு என நினைக்கும் பெண்ணை சில மணி நேரங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள். அவள் அவ்வளவு அழகு கொண்டவளாக தோன்ற மாட்டாள். நாம் கொண்டாடும் விஷயங்களே சில காலத்துக்கு பின் வெறுப்பு உமிழும் விஷயங்களாக மாறிப் போகும். இதுதான் சமூக யதார்த்தம். இவற்றையெல்லாம் பார்த்து பழகும் நம் ஆழ்மனம் பிற்பாடு எதையுமே நம்ப மறுக்கிறது. எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிக்கிறது.
இதைத்தான் முதலாளித்துவமும் கார்ப்பரெட்டும் apolitical ஆக இருப்பதே சிறப்பு என பேசி நமக்குள் வளர்த்தும் விடுகிறது.
உங்களுடன் பழகும் சக மனிதன் சாக வேண்டும் என நீங்கள் விரும்புவீர்களா? அவனை வேறோருவர் அடிப்பதையோ சுரண்டுவதையோ வாழ அனுமதிக்காமல் இருப்பதையோ நோகடிப்பதையோ பார்த்துக் கொண்டு கோபம் கொள்ளாமல் இருப்பீர்களா?
நிச்சயம் இருக்க மாட்டீர்கள். ஏனெனில் மனிதனின் அடிப்படை பண்பு அதுதான். அதற்கு பின் உருவாக்கப்படும் நம்பிக்கைகளும் தத்துவங்களும்தான் நம்மை மாற்றுகின்றன. ஆக, எந்த தத்துவம் மனிதத்துக்கான தத்துவம், அறிவுக்கான தத்துவம் என பாருங்கள். படியுங்கள். தேடுங்கள்.
ஆக இங்கு இருக்கும் அரசியலை புரிந்து கொள்ள வேண்டுமானால், படிக்க வேண்டும். விவாதிக்க வேண்டும். எது சரி என புரிய வேண்டும்.
குறைகள் இருக்கும் மனித சமூகத்தில், அதிகபட்சம் நாம் செய்யக்கூடியது, அதிகக் குறைகள் இல்லாதவர்களை தேடுவதும் அதிக குறைகளை ஏற்படுத்த விழையாத தத்துவங்களை தேடுவதும்தான்.
தத்துவங்கள் பல மூளைகளை தாண்டி வருபவை. ஆக தத்துவங்களை படியுங்கள். தத்துவம் பேசுபவர்களை பார்க்காதீர்கள். அவர்கள் மனிதர்கள்தான். மனிதனுக்கு உண்டான எல்லா பலவீனமும் அவர்களுக்கு இருக்கும். அவற்றை கொண்டு தத்துவத்தை எடை போடக்கூடாது.
லெனின் சொன்னதுதான். ‘அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால், அரசியல் உங்கள் வாழ்வில் தலையிடும்’. அரசியலை குறை கூறுவது அரசியலில் தலையிடுவதாக ஆகாது.
எனவே நிறையப் படியுங்கள். விவாதியுங்கள்.