அனைவருக்கும் காதல் தேவை, ஆனால் நிலைக்காது. கிடைத்தாலும் நிம்மதி இருக்காது. கிடைக்கவில்லை என்றாலும் நிம்மதி இருக்காது. தொடர்ந்தால் சந்தோஷம் நீடிக்காது. தொடரவில்லை எனில் மனம் துவளும். வாய்க்கவில்லை எனில் மனம், தாழ்வு கொள்ளும். வாய்த்தால் மனம், பதற்றம் கொள்ளும். எதிர்பார்ப்பு நிறைய இருக்கும். ஆனால் எதுவும் நடக்காது. எதிர்பார்ப்பு இல்லை எனில், அலுப்பு நிறையும்.
கிட்டத்தட்ட எஸ்.ஜே.சூர்யாவின் ‘இருக்கு, ஆனா இல்ல’ பாணிதான் நம் சமூகத்தின் காதலுறவுகளுக்கு எப்போதும் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் நம் சமூகம்தான்.
காதலை சுற்றி குடும்பம் தொடங்கி நம் சமூகம் கட்டியெழுப்பி இருக்கும் கட்டுப்பாடுகள் பல. ஆனாலும் இயல்பாக மனித உயிருக்கு எழும் காதலுணர்வை சமூகம் ஏற்கவென அரசியல்கள் நிகழ்த்தப்பட்டு ஓரளவுக்கு சமூக ஏற்பை கொண்டு வந்திருக்கிறோம். எனினும் காதலை பற்றி சமூகம் உருவாக்கியிருந்த கட்டுப்பாடுகள் நம் மனங்களில் உணர்வுநிலைகளாக கெட்டி பெற்றிருக்கிறது. சமூகக் கட்டுப்பாடுகளும் மனம் கொள்ளும் உணர்வுநிலைகளும் நமக்குள் பல வகை முரண்களை உருவாக்குகிறது. அந்த முரண்களுக்கான சமூக பிரதிபலிப்பு உருவாகுகையில்தான் மேற்குறிப்பிட்ட குழப்ப நிலைகள் நேர்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கத்தில் சமூக ஊடகம்.
சமூக ஊடகத்தின் அடிப்படையான இயக்கமே அடுத்தவருக்கான நுகர்வாக நாம் ஆவதுதான். அடுத்தவரின் பொருட்படுத்தலும் ஏற்பும் ரசிப்பும் அடிப்படையில் லைக்குகள், ஹார்ட்டின்கள், பகிர்வுகள், ரீட்வீட்டுகளால்தான் நேர்கிறது. சமூக ஊடகத்தில் பிரதானமே கவன ஈர்ப்புதான். அடுத்தவர் நம்மை கவனிக்க, நாம் நம்மை விற்க வேண்டும். முன்னிறுத்த வேண்டும். தொடர்ந்து முன்னிறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
ஆட வேண்டும், எழுத வேண்டும், பாட வேண்டும், சிணுங்க வேண்டும், சிரிக்க வேண்டும், அரசியல் பேச வேண்டும், அபத்தம் பேச வேண்டும், காதல் பேச வேண்டும். என்னன்னவோ செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் ஒன்று போல் செய்யக் கூடாது. சமூக ஊடகம் அலுப்பை சீக்கிரம் ஒரு விஷயத்தில் ஏற்படுத்தவல்லது. எனவே எப்போதும் புதிதாகவும் தினுசாகவும் அடாவடியாகவும் எள்ளலாகவும் எழுத வேண்டும். புகைப்படங்கள், காணொளிகள் என எவருக்குமில்லாத வாழ்க்கை கொண்டவர்களை போல நம்மை நாம் முன்னிறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
இத்தகைய பின்னணியில் காதலை முன் வைக்க விரும்புபவர்களின் நிலைமையை யோசித்து பாருங்கள்.
ஒரு நபர் கொள்ளும் காதலுறவு எத்தனை கேவலமானதாக இருந்தாலும் எத்தனை விந்தையாக இருந்தாலும் எப்படியாக இருந்தாலும் அதை ரசிப்பதற்கென ஒரு திரள் இருக்கும். ஏனெனில் சமூக ஊடகம் வெகுஜனம் இல்லை. அது சமூகத்திலிருந்து விலகி தனித்து தொக்கி நின்று கொண்டிருக்கும் ஓர் elite தளம். அதில் சமூகம் கொண்டிருக்கும் விஷயங்கள் சில இருக்கலாம். ஆனால் சமூகத்தின் மொத்தத்தையும் சமூக ஊடகம் பிரதிபலிப்பதில்லை. ஏனெனில் சமூகத்தை பிரதிபலிப்பதால் சமூக ஊடக நிறுவனங்களுக்கு அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனப்படாது.
ஆகவே சமூகம் பற்றிய ஒரு செயற்கையான கற்பனை சமூக ஊடகங்களில் தினம் தினம் அழித்து புதிதாக உருவாக்கப்படுகிறது. எதற்குமே இங்கு இடம் உண்டு. கெட்ட வார்த்தைகள், ஆபாசம், வெறுப்புணர்வு, அருவருப்பு, கொச்சைதன்மை, மலினம் என எதுவுமே இங்கு செல்லுபடியாகும். எதுவுமே இங்கு சமூக ஊடக நிறுவனத்துக்கான கச்சாப்பொருள்தான்.
இங்கு ஒரு நபர் தன் காதல் சார்ந்த உணர்வை வெளிப்படுத்த முயலுகையில் என்னவாகும்? அது அதீதமாகவே இருக்க வேண்டும். அதீதமாக இருந்தால் மட்டுமே லைக்குகள், ஹார்ட்டின்கள், பகிர்வுகள் எல்லாம்.
காதலின் வலியை அதீத வார்த்தைகள் கொண்டு கோர்க்கும்போது அது அழகாகிறது. புனிதத்தன்மை பெறுகிறது. பலரும் தங்களின் காதலை அதில் கண்டு துய்த்துக் கொள்கின்றனர். காதல் தோல்வியை கிரேக்க துயரம் போல் எழுதுகையில் அது இன்னும் மகிமை பெறுகிறது. அழகுறுகிறது. அதில் அனைவரும் தங்களின் காதல் தோல்விகளை மீட்டுருவாக்கி ஒரு கணம் வாழ்கின்றனர்.
இத்தகைய கவித்துவ எழுத்துகளிலிருந்து பாடம் பெறும் பிறர், பாசாங்காக இச்சூழல்களை போர்த்திக் கொள்கின்றனர். இல்லாத காதலை அதீதமாக்குகின்றனர். பிறன் மனை காதலை கவிதையாக்கி அழகூட்டுகின்றனர். இருக்கும் காதலுக்குள் புரட்சியை அள்ளிக் கொட்டுகின்றனர். பிரிவையும் அதீதமாக்குகின்றனர்.
சமூக அழுத்தம் என்கிற நிலையிலிருந்து சமூக ஊடக அழுத்தம் என்கிற இடத்தை அடைந்து விட்டோம்!
யாருமே வாழாத வாழ்க்கையை தான் வாழ்வதாக காண்பிப்பதே சமூக ஊடகத்தில் இயங்குவோரின் அடிப்படை பண்பாடு. அது இயல்பாகவே exclusivity-யை நோக்கியே செல்லும். Exclusivity என்பது சமூகத்திலும் அரசியலிலும் கூடவே தவறு என பேசிக் கொண்டிருக்கும் போது அச்சமூகத்தின் உறுப்பினர்களையே exclusive ஆகும் போக்கை சமூக ஊடகம் உற்பத்தி செய்கிறது. ஊக்குவிக்கிறது.
பிரத்யேகதன்மை, பொய்யாய் வரிந்து கொண்ட தனித்துவம், பாசாங்கு யாவும் நாளடைவில் சமூக ஊடகத்தில் இயங்குபவரின் சிந்திக்கும் பாணியாக மாறி அவரது சிந்தையாகவும் மாறி விடுகிறது.
ஒரு கட்டத்துக்கு மேல், சமூக ஊடகத்தை தனி நபர் இயக்குகிறார் என்பது மாறி சமூக ஊடகம் தனி நபரை இயக்குவதாக மாற்றம் நேர்ந்து விடுகிறது.
இதே கோணத்தில் பார்த்தீர்களெனில், காதல் சமூகதளத்தை இயக்குவதிலிருந்து மாறி சமூகதளம் காதலை இயக்குகிறது என்பதில் இருக்கும் உண்மையை புரிந்து கொள்ள முடியும். இந்த முக்கியமான விஷயத்தையும் உள்ளடக்கி ‘லவ் டுடே’ பேசியதில்தான் அப்படத்தின் பெருவெற்றி அடங்கியிருக்கிறது.
இன்றைய காதலில் அந்நியோன்யம் என்ன தெரியுமா? பாஸ்வேர்டுகளை இருவரும் தெரிந்து வைத்துக் கொள்வதுதான். பரஸ்பர மதிப்பு என்ன தெரியுமா? இருவரின் பாஸ்வேர்டுகளையும் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான்.
மற்றபடி சமூக ஊடகம் சித்தரிப்பது போல காதல் என்பது யதார்த்ததில் குதிரைக் கொம்பெல்லாம் ஒன்றும் இல்லை.
யதார்த்தத்தில் காதல் எளிமையானதுதான். அதை ஒடுக்கும் சமூகம் மட்டும்தான் யதார்த்தத்தில் பிரச்சினை. அதை சரி செய்ய யதார்த்தத்தில்தான் கம்பு சுற்ற வேண்டும். சமூக ஊடகத்தில் அல்ல!