சமீபத்தில் எல்லாம் இல்லை. எல்லா காலங்களிலும் இருந்திருக்கிறது. முகநூல் மட்டும் என்றுமில்லை. சமூகத்தின் எல்லா தளங்களிலுமே புறம் பேசுதல் இருந்திருக்கிறது. மனிதனின் புத்தி அது. ஆதலால்தான் மனிதனை பிரதிபலிக்கும் முகநூல் அப்படி இருக்கிறது. நாமும் வழக்கம்போல், மனிதனை விடுத்துவிட்டு முகநூலை பழி சொல்கிறோம்.
புறம் பேசித்தான் மனிதன் பரிணாமம் வளர்த்தான். வரலாறு என்பதே ஒரு மிகப்பெரிய புறம் பேசுதல்தானே!
பழி பேசத்தான் பெரும்பாலும் மனிதன் புறம் பேசத் தொடங்கினான். புகழ் பேச அவன் விரும்பியதே இல்லை. ஓரளவுக்கேனும் அவன் புகழ்கிறானெனில், அவனுக்கு நெருக்கமாக இருப்போரை தான் புகழ்வான். அதுவும் ஓரளவுக்குதான். அதுவும் காரியத்துக்குத்தான். ஆனால் பழி பேசுதலை மிக இயல்பாகவும் அதிகமாகவும் செய்வான். ஏனெனில் அவனையே அவன் பழியாகத்தான் நினைப்பான்.
வார்த்தையில் தன்னை புகழ்ந்து மனிதன் பேசுவது தன் மீது கொண்ட மோகத்தால் அல்ல. கர்வத்தால் அல்ல. தாழ்வு மனப்பான்மையால்! தன்னைத்தானே பழியாக எண்ணிக் கொள்வதால்தான் அடுத்தவரும் தன்னை அப்படி நினைக்காமலிருக்க, தன்னை புகழ்ந்து அவரையும் தன்னை புகழ நிர்ப்பந்திக்கிறான். அவருக்கு தன்னை பற்றி அவன் விரும்பும் வகையில் feed செய்கிறான்.
தன்னையே பழியாகவும் தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் அடுத்தவரை எப்படி பொருட்படுத்துவான், மதிப்பான்?
பழி பேசுவதுதான் மனித இயல்பு!
தன் மீதே தாழ்வுணர்ச்சி கொள்ளாதவர்கள் மட்டும்தான் அடுத்தவரை பழி பேச மாட்டார்கள். தன்னளவில் தன்னை ஓர் இருப்பாக மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். மேலும் மேலும் மேம்பட முனைந்தபடி மேம்பட்டுக் கொண்டிருப்பார்கள். அதனாலேயே பிறரையும் அவர்கள் இருப்புகளாக பார்க்கும் தன்மை பெற்றிருப்பார்கள். ஆதலால் பிறரை பழி பேசும் அவசியம் அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களைத்தான் சான்றோர், கற்றோர், மேன்மக்கள் என்றெல்லாம் சொல்கிறோம்.
எனில் விமர்சனமே பண்ணக்கூடாதா? விமர்சனமே பழித்தல்தானே என கேட்கலாம். விமர்சிக்கலாம். விமர்சனம் பழி ஆகாது. விமர்சனம் தனி நபரை பற்றி பேசுவதாக மாறுகையில்தான் பழியாகிறது. நன்றாக கவனித்தால் இந்த வேறுபாடு புரியும். ஒருவர் கொள்ளும் கருத்தை விமர்சித்தல் வேறு. அந்த கருத்தை கொண்டு அவரை அடையாளப்படுத்தி, அந்த அடையாளத்திலிருந்து அவரது தனி நபர் வாழ்க்கையை சுட்டி சிலர் பேசுவார்கள். அவர்கள்தான் பழி பேசும் ரகம். மற்றோர் விமர்சனத்தை கருத்தின் மீது வைப்பார்கள். அவர்கள் விமர்சிக்கும் கருத்துகள் கொண்டோர் அவரின் நண்பர்களாகவே இருப்பார்கள். விமர்சனத்துக்கு பின்னும் அவர்கள் நண்பர்களாகவே இருப்பார்கள். ஏனெனில் விமர்சனம் அவர்களை காயப்படுத்தி இருக்காது. ஏனெனில் விமர்சனம் பழி பேசியிருக்காது.
ஒருநாள் உங்களின் நடவடிக்கைகளையே கூர்ந்து பாருங்களேன். எத்தனை பேரை பழி பேசுகிறீர்கள் என தெரியும். அது தெரிந்து உங்களை உள்ளுக்குள்ளிருந்து கவனிக்க தொடங்கி பண்படுகையில்தான் உங்களிடம் இருந்தும் அனைவரிடம் இருந்தும் மாற்றம் உருவாகும்!
எனினும் நாம் புறம் பேசியும் பழி பேசியும் மட்டுமே அழிந்துவிடுவோம் என்றும் அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை