Money Heist தொடர் உலகளவில் வெற்றி பெற்றதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அடிப்படையான காரணம் அது ஒரு வங்கிக் கொள்ளையைப் பற்றியது என்பதுதான். சாமானியனையோ அல்லது பணக்காரனையோ கொள்ளை அடித்தாலும் அவற்றுக்குப் பின் பாதிக்கப்பட்டவனின் துயர் நம்மை நெருடும். ஆனால் வங்கிகள் அப்படியல்ல. ஏனெனில் வங்கிகளைப் பற்றிய நம் பார்வை அத்தகையது.
வங்கிகள் யாருக்கானவை?
வங்கிகள் ஒரு காலத்தில் பெரிய கவுரவமாக பார்க்கப்பட்டிருக்கிறது. வங்கிகளில் கணக்கு வைத்திருந்தவர்கள் உயர்வாக மதிக்கப்பட்ட காலம் இருந்தது. பெரும்பான்மையான மக்களுக்கு வங்கிகள் பணக்காரர்களின் இடமாகவே தெரிந்தது. அந்த தயக்கமே பல பேரை வங்கிகளுக்கு வராமலும் வைத்திருந்தது.
கடந்த சில வருடங்களில் அதிகமாக வங்கிகள் தொடங்கப்பட அரசுகள் அனுமதித்தன. நிறைய சலுகைகளுடன் புது வங்கிகள் தொடங்கப்பட்டன. வீடுகள்தோறும் வாடிக்கையாளர்களை பிடித்துக் கொள்ளுமளவுக்கு வங்கிகளுக்கு சலுகைகளை அரசுகள் வழங்கின. பெரும்பான்மை மக்களின் பணம் வரவில்லையெனினும் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்களின் பணம் வங்கிகளை வந்தடையும் சூழல் உருவாக்கப்பட்டது. வங்கிக் கணக்கு என்பது இயல்பான ஒரு விஷயமே என்கிற நிலை ஓரளவுக்கேனும் மக்கள் எட்டும் காலத்தை நாடுகள் அடைந்தன.
வங்கிகள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு விஷயமாக ஆக்கப்பட்ட பின் பிரச்சினை தொடங்கியது.
வங்கிகளில் ஒரு சேமிப்பை நாம் வைத்துக் கொள்வது வாழ்க்கைக்கு உகந்தது என சொல்லப்பட்டிருக்கிறோம். பல நேரங்களில் வங்கிகளில் இருக்கும் பணம் நம் பணம்தானா என சந்தேகப்படுமளவுக்கு அதே வங்கிகளால் நடத்தவும் படுகிறோம். நாம் இருப்பில் வைக்கும் பணத்தை அள்ளி முதலாளிகளுக்கு தொழிலதிபர்களுக்கும் கடனாக வழங்கி அவர்களை தப்பியோடவும் விட்டுவிட்டு, அந்த பணத்தை மீட்பதற்கான சுமைகளையும் நம் தலைகளிலேயே அரசுகள் சுமத்துகின்றன. நாம் வாங்கும் சிறு கடன்களை அடைக்க முடியாமல் போகும்போது மட்டும் தப்பியோடிய தொழிலதிபர்களுக்கு காட்டப்பட்ட இரக்கத்தில் சிறு அளவு கூட காட்டப்படாமல் வங்கிகள் நம் மீது பாய்ந்து பிறாண்டுகின்றன.
வங்கிகள் யாருக்கானவை?
வங்கிகள் ஒரு காலத்தில் பணக்காரர்களுடையதாக பார்க்கப்பட்டு பிறகு மக்களுக்கானதாகவும் பார்க்கப்படக்கூடிய சூழல்கள் இருந்தன. ஆனால் இப்போது வங்கிகள் திருட்டுக் கும்பலாகவும் வட்டிக்கடைக்காரனாகவும் பணக்காரத் திருடர்களுக்கு உதவும் கொள்ளைக்கூட்டமாகவும் பார்க்கப்படுகிறது. உலகம் முழுக்க அரசுகளும் வங்கிகள் அப்படி இருக்க உதவுகின்றன. இன்று சாமானியனுக்கு வங்கியை பார்க்கும்போது தயக்கம் இருக்கிறது. எப்போது கையை விரித்து ‘பணமில்லை’ எனச் சொல்லும் என்கிற பதைபதைப்பு இருக்கிறது. வாங்கியக் கடனுக்கு சாவின் விளிம்பு வரை விரட்டும் என்ற அச்சம் இருக்கிறது. சேமிப்புக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கி, இருப்பு குறைந்தால் கட்டணம், மாதக் கட்டணம், வருடக் கட்டணம், இருப்பு அட்டைக்குக் கட்டணம் என வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் வங்கி நம் பணத்தை அடிக்கிறது.
வங்கி சாமானியனுக்கான இடமில்லை என்ற கட்டம் உருவாக்கப்பட்டு விட்டது. அங்கு இருக்கும் பணம் யாவும் தன்னிடம் அடித்து பிடுங்கப்பட்ட பணம் என்கிற புரிதல் அவனுக்கு இருக்கிறது. அந்தப் பணம் யாவும் தனக்கு சேர வேண்டிய பணம் என்ற தெளிவும் அவனுக்கு இருக்கிறது. ஒரு சாமானியன் விரும்பும் நிம்மதியான வாழ்க்கைக்கு தடையாக வங்கிகள் இருக்கின்றன.
உலகின் மிகப்பெரும் வட்டிக்கடையான அமெரிக்காவின் பொருளாதாரம் சரியத் தொடங்கியபின், வங்கிகளும் சரியத் தொடங்கின. வங்கிகளை பற்றிய மக்களின் பார்வையும் சரியத் தொடங்கியது. வங்கிகளுக்கான பிரச்சினை என ஒன்று நேரும்போதெல்லாம் அது மக்கள் மகிழும் தருணமாக மாறியும் போனது.
வங்கிகள் நிச்சயமாக நம் அனைவரின் கண்களையும் உறுத்துபவை. உடல் வருத்தி வாழ்க்கை வெறுத்து நாம் சம்பாதிக்கும் பணத்தை அபகரிக்க காத்திருக்கும் ஓநாய்கள், வங்கிகள். அவை கொண்டிருக்கும் பணமும் அதிகாரமும் சாமானியனுக்கு எப்போதுமே கிடைத்திட முடியாதவை.
ஓர் அரசு அதன் மக்களை கூட பட்டினி போட்டு சாகடிக்க தயாராக இருக்கும். ஆனால் வங்கித்துறையையும் அதன் லாபத்தையும் இழக்க எப்போதும் சம்மதியாது. மக்களின் பணம் கொண்டு தனியார் வங்கிகள் லாபம் கறக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை எல்லாவற்றையும் செய்ய அரசு கூசவே கூசாது. வங்கிகள் அரசுக்கு அத்தனை செல்லப்பிள்ளைகள்.
பணம் கொள்ளையடிக்கப்பட்டால் வங்கிகள் என்ன செய்யும்?
எதுவும் செய்யத் தேவையில்லை.
வங்கிகளில் இருக்கும் கஜானாவில் வைக்கப்படும் பணத்துக்கு என ஓர் அளவு இருக்கிறது. அதிகபட்சமாக குறிப்பிட்ட அளவுக்கான பணத்தை மட்டுமே வங்கிகள் கஜானாவில் எந்த தினத்தின் போதும் வைத்திருக்க முடியும். அந்த அளவு, லட்சங்களில் இருக்கலாம். அல்லது கோடிகளிலும் இருக்கலாம். வங்கியின் தன்மையையும் இருக்கும் சூழலையும் பொறுத்து அளவு மாறும்.
ஒவ்வொரு வங்கியும் அதன் கஜானாவுக்கு வரையறுக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச தொகை அளவுக்கு காப்பீடு வைத்திருக்கும். அதாவது கொள்ளையடிக்கப்படும் பணம் வங்கிக்கு கிடைத்துவிடும். அந்த காப்பீடு சமயங்களில் இன்னொரு பெரிய தனியார் நிறுவனம் வைத்திருக்கும். பல சமயங்களில் அரசே கூட கொண்டிருக்கும். சிறிய அளவிலான பணமாக இருக்கும் பட்சத்தில் காப்பீடு தனியார் நிறுவனத்தில் இருக்கும். இழந்த பணத்தை நிறுவனம் வங்கிக்கு கொடுத்துவிடும். பெரியளவு பணம் என்றாலும் தனியார் காப்பீடே உதவ முடியும். சமயங்களில் அரசே அச்சுமையை எடுத்துக் கொள்ளும். சிறிய அளவிலான பணம் என்பது சில நூறு கோடிகள். பெரிய அளவிலான பணம் என்பது பல்லாயிரம் கோடிகள்.
காப்பீடு நிறுவனம், அரசு என சுற்றிச் சுற்றி செல்லும் நூலை பிடித்து பின்தொடர்ந்து சென்றால், வங்கி இழக்கும் பணத்துக்கான ஈடு பொதுமக்களின் தலைகளிலேயே வரிகளாக விடியும்.
தொழிலதிபர்கள் கட்டாமல் செல்லும் கடன்களாக இருந்தாலும் கொள்ளையடிக்கப்படும் பணமாக இருந்தாலும் மக்களே பலி.
வங்கிகளுக்கு அரசு கொடுக்கும் உத்தரவாதத்தை சாமனியர்களுக்குக் கொடுப்பதில்லை. வங்கிகள் திவாலாகாமல் இருக்கக் கவலைப்படும் அரசுகள், சாமானியன் திவால் ஆவதை பற்றி கவலைப்படுவதில்லை.
மொத்தத்தில் வங்கிக்கும் நஷ்டம் இருக்காது. அரசுக்கும் பிரச்சினை இருக்காது. சரியாக சொல்வதெனில் கொள்ளையடிப்பவர்களையும் விட பெரிய கொள்ளையை நிகழ்த்துவது வங்கிகளும் அரசுகளுமே.
விவசாயி தற்கொலை செய்ததாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வங்கி முதலாளி தற்கொலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?