ஹிதேஷா என்கிற ஒரு பெண் ஒரு காணொளி பதிவிடுகிறார். உணவு ஆர்டர் செய்ததாகவும் அதை டெலிவரி செய்ய வந்தவர் தாமதமாக வந்ததாகவும் அதன் காரணமாக Zomato Customer Care-ல் புகாரளித்து விட்டு பதில் வரும் வரை உணவு கொண்டு வந்தவரை காத்திருக்க சொன்னதாகவும் அது விவாதமாக டெலிவரி கொண்டு வந்தவர் அவர் மூக்கில் குத்தி விட்டதாகவும் மூக்கில் ரத்தம் வடியும் காட்சியையும் உள்ளிட்டு பேசியிருந்தார்.
ஹிதேஷா சமூக தளங்களில் influencer ரகத்தை சேர்ந்தவர் என்பதால் காணொளி வைரல் ஆகியிருக்கிறது. சில மணி நேரங்களிலேயே புகார் கொடுக்கப்பட்டு டெலிவரிக்கு வந்திருந்த காமராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
டெலிவரிக்கு சென்றிருந்த காமராஜ் வேறு கதை சொல்கிறார். போக்குவரத்து நெருக்கடியால் தாமதமானது உண்மை என்றும் ஹிதேஷாவிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அவரோ கோபத்துடன் பேசி செருப்புகளை எறிந்துதாகவும் தொடர்ந்து அவரை அடிக்க வந்தபோது தடுக்கும் முயற்சியில் ஹிதேஷா கையிலிருந்து மோதிரம் அவரது மூக்கில் கீறிவிட்டதாகவும் பிரச்சினை வளராமல் இருக்கும் பொருட்டு அங்கிருந்து கிளம்பி விட்டதாகவும் சொல்கிறார் காமராஜ்.
இவற்றுக்கு இடையில் காமராஜ்ஜை வேலையிலிருந்து இடைநீக்கம் செய்திருக்கும் Zomato நிறுவனம், தொடர்ந்து ஹிதேஷாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் மறுபக்கத்தில் காமராஜ்ஜின் சட்டரீதியான செலவுகளையும் ஏற்றிருப்பதாகவும் குறிப்பிட்டு இறுதியில் காமராஜ்ஜை பற்றியும் குறிப்பிடுகிறது.
காமராஜ் இதுவரை 5000 முறை உணவை கொண்டு சென்று வாடிக்கையாளர்களுக்கு கொடுத்திருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் அவருக்கு கொடுத்திருக்கும் சராசரி மதிப்பீடு என்பது நான்கு நட்சத்திரங்களுக்கு மேல் என்றும் அந்த மதிப்பு முன்னணியில் இருக்கும் பணியாளருக்கான மதிப்பு என்றும் குறிப்பிட்டிருக்கிறது Zomato.
இதில் யார் பக்கம் தவறு இருக்கிறது?
ஹிதேஷா கார்ப்பரெட் பெமினிச அடையாள அரசியலால் பிரபலமாகி இருப்பவர். இயல்பாகவே உழைக்கும் வர்க்க மக்கள் மீது முதலாளித்துவ செயற்பாட்டாளர்களுக்கு இருக்கும் வெறுப்புணர்வும் அவர்களின் சிறு தவறை கூட ஏற்றுக் கொள்ளாமல் வாழ்க்கையையே அழிக்கத்தக்க பாடத்தை புகட்டும் எல்லைக்கு செல்லும் தன்மையும் இருக்கலாம். கிட்டத்தட்ட 'ஐயப்பனும் கோஷியும்' படத்தை போல்.
மறுபக்கம் காமராஜ்ஜின் வாழ்க்கை போக்குவரத்து நெருக்கடிகளுக்குள்ளும் கடிகார முள்ளை விரட்டி ஓடும் நிலையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. நாம் வண்டி ஓட்டி செல்லும்போது குறுக்கே விழுந்து நம் கெட்ட வார்த்தைகளுக்கு ஆட்பட்டு வேகமாக வண்டி ஓட்டிச் செல்லும் பரிதாப சிகப்புச் சட்டைக்காரர்கள் இவர்கள். வயது கிடையாது. பாலினம் கிடையாது. ஊர் கிடையாது. உடல், உணர்வு, மனிதம் என ஒரு மனிதனின் எல்லாவற்றையும் ஈவிரக்கமின்றி சுரண்டப்படும் வேலையில் அமர்த்தப்பட்டிவரே காமராஜ். உச்சபட்சமாக அவர் கூறுவது போல் ஹிதேஷா ஒருவேளை செருப்பை வீசி, அடிக்க முயன்றிருந்தாலும் அதற்கான இயல்பான எதிர்வினை கூட மறுக்கப்பட்டிருக்கும் வேலை அவருடையது.
மறுபக்கத்தில் Zomato. அந்நிறுவனத்தின் அறிக்கை ஒரு இயேசுவோ மார்க்ஸ்ஸோ எழுதிய அறிக்கை போல் தென்படலாம். அதே நிறுவனம்தான் பசியோடு மதிய உணவு நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பும்போது குறைந்தபட்சம் 250 ரூபாய்க்கு ஆர்டர் செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்தும் உன்னத நிறுவனம். வெறும் ஜூஸ் மட்டும் குடிக்க நீங்கள் நினைத்தாலும் கூடுதலாக ஒரு 150 ரூபாய்க்கு ஆர்டர் செய்தால்தான் ஜூஸ் குடிக்க முடியுமென கட்டாயப்படுத்தும் நிறுவனம். இத்தகைய நிறுவனம் தன்னிடம் வேலை செய்யும் பணியாட்களுக்கு எத்தகைய உதவிகளை செய்யும்? சங்க வைப்பதற்கான வாய்ப்பை கூட வழங்காது.
இதில் யார் பக்கம் தவறு இருக்க முடியும்?
தனக்கும் தனக்கு உணவு கொண்டு வந்து தரும் நபருக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக அந்த பெண்ணையும் அந்த பெண்ணே எதிரி, நிறுவனம் தன்னை காப்பாற்றும் என அந்த ஆணையும் நம்ப வைக்கும் Zomato போன்ற நிறுவனங்களின் பிரித்தாளும் முதலாளித்துவமே இங்கும் எங்கும் தவறாக இருக்கிறது.