அரசு ஊழியர்களுக்கு ஆபத்பாந்தவரைப் போல வேடமிட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவரது தலைவி ஜெயலலிதா ஆட்சிக் காலமாக இருந்தாலும், அவரது ஆட்சிக் காலமாக இருந்தாலும் - மொத்தத்தில் அ.தி.மு.க. ஆட்சியே அரசு ஊழியர்களை வேட்டையாடிய ஆட்சிதான் என்பதை அரசு ஊழியர்களும், தமிழ்நாட்டு மக்களும் மறந்திருக்க மாட்டார்கள்!
24-7-2001 அன்று திருவல்லிக்கேணியில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் சங்கக் கட்டிடத் திறப்பு விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, “அரசுக்குக் கிடைக்கின்ற மொத்த வரி வருவாயில் 94 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கே செலவாகிறது” என்று உண்மைக்கு மாறான தகவலைச் சொன்னார்.
2002ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அன்று, “அரசு ஊழியர்களுடன் எத்தனை முறை பேச்சு நடத்தினாலும் நான்கு சதவிகித அகவிலைப் படிக்கு மேல் வழங்க முடியாது. அரசின் மொத்த வருவாயில் 94 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கே சென்று விடுகிறது. மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதமே உள்ள அரசு ஊழியர்களுக்கு 94 சதவிகிதம் செலவு என்றால், மீதி உள்ள 6 சதவிகித வருவாயில் வளர்ச்சிப் பணிகளுக்கு என்ன இருக்கிறது?” என்று சொன்னவரும் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாதான்.
அரசு அலுவலர்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதும் ஜெயலலிதா ஆட்சியிலே தான். இந்தச் சட்டத்தை மீறி வேலை நிறுத்தம் செய்பவர்கள், மற்றும் அதைத் தூண்டுபவர்கள் ஆகியோருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை அல்லது ரூபாய் 5000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டதும் அ.தி.மு.க. ஆட்சியிலேதான்.
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23-10-2002 அன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தார்கள். “அந்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் அளிக்கப்பட மாட்டாது” என்றெல்லாம் எச்சரிக்கை செய்தவர்தான் முதல்வர் ஜெயலலிதா.
வேலை நிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும். இல்லை என்றால் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. அரசின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஜெயலலிதா அரசாங்கத்துடன், 2002 ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தால், போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அரசு அலுவலர் சங்கத் தலைவர்களை இரவோடு இரவாக 'எஸ்மா' சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டவர் ஜெயலலிதா. அரசு ஊழியர்களின் வீடுகளுக்குள் புகுந்து காவல் துறையினர் கைது செய்தார்கள்.
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் 2003 ஜூலை 2-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை விசாரணை நடத்தாமல் டிஸ்மிஸ் செய்யும் 'எஸ்மா' சட்டத்தை 04-07-2003-ல் பிறப்பித்தார் ஜெயலலிதா. 20க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தவர் ஜெயலலிதா.
‘எஸ்மா' சட்டத்தின்படி தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் என 1 லட்சத்து 70 ஆயிரம் பேரை ஒரே உத்தரவின்பேரில் கூண்டோடு டிஸ்மிஸ் செய்து கொடூரத்தின் உச்சத்தை நிகழ்த்திக் காட்டியவர் ஜெயலலிதா.
போனஸ் கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையிலே தள்ளப்பட்டதும் ஜெயலலிதா ஆட்சியிலேதான். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஒடுக்குவதற்காக 2,575 தற்காலிகத் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். 17 நாட்கள் போராட்டம் நடைபெற்றது.
2001-ஆம் ஆண்டு, 1.20 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள், 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் என, இவர் அனைவரது வேலையையும் ஒரே நேரத்தில் பறித்த கொடூரக் காட்சிகள் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் நடந்தது.
ஆசிரியர், அரசு அலுவலர் போராட்டத்தில் கலந்துகொண்டு மறியலில் ஈடுபட்ட பொள்ளாச்சி நம்பியமுத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் காசிப்பாண்டியன் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து மாண்டார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவதானப்பட்டி மஞ்சளாறு அணைப்பகுதியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அப்துல் சத்தார், அ.தி.மு.க. அரசின் அராஜகத்தைக் கண்டித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு குடும்பங்களுக்கும் தி.மு.க. அறக்கட்டளை சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி அளிக்கப்பட்டது. இவை எல்லாம் ஜெயலலிதா ஆட்சிக் காலத்து நிகழ்வுகள் ஆகும்.
அடுத்து வந்தார் பழனிசாமி. அவரும் 'அம்மா' வழியில் பயணம் ஆனார்.
தொடக்கப் பள்ளி ஆசிரியர் வாங்கும் சம்பளத்தைக் குறிப்- பிட்டு “இவ்வளவு சம்பளமா?” என இழிவுபடுத்தியவர்தான் பழனிசாமி. அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பார்த்து, “அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா?” என்று கேட்டவர் தான் பழனிசாமி.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான 'ஜாக்டோ-ஜியோ' 2019 ஜனவரியில் போராட்டத்தை நடத்தியது. அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார், அரசு ஊழியர்களை மிரட்டினார். “கோரிக்கையை ஏற்க முடியாது. பணிக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை பாயும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர, மக்களிடம் கூடுதல் வரி விதிக்க வேண்டி வரும்” என்று சொன்னார்.
அரசு ஊழியர் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது 2019 ஜனவரி 27- ஆம் நாள் அனைத்து நாளிதழ்களிலும் முக்கால் பக்கத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரில் விளம்பரம் வெளியிட்டவர்தான் இந்த பழனிசாமி அரசு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சம்பளப் பட்டியலை வெளியிட்டு, இது தமிழ்நாடு அரசின் வரி வருவாய்த் தொகையில் 70 சதவீதம் என்று தெரிவித்திருந்தார் ஜெயக்குமார். 'பிற தனியார் நிறுவனத்தைக் காட்டிலும் அதிகச் சம்பளத்தை அரசு ஊழியர்கள் பெறுகின்றனர். தனியாரைவிட அரசு ஊழியர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் அவர்களுக்கு எதற்குப் போராட்டம்?' எனக் கொச்சைப்படுத்தியவர்தான் இந்த பழனிசாமி.
பழனிசாமி ஆட்சியில் அரசு ஊழியர்கள் போராடினார்கள். 85 ஆயிரம் பேருக்கு விளக்க விசாரணைக் கடிதம் அனுப்பியவர்தான் இந்த பழனிசாமி. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மீது குற்றக் குறிப்பாணைகள் (17B), இடமாற்றம், பணியிடைநீக்கம், வழக்கு போன்ற ஒடுக்கு முறைகளை ஏவியவர்தான் இந்தப் பழனிசாமி. இப்போது பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறாரே அதே பழனிசாமிதான்.