முரசொலி தலையங்கம் (12-11-2024)
நல்லாட்சியல்ல, பொய்யாட்சி !
மக்கள் அனைத்தையும் மறந்திருப்பார்கள் என்று நினைத்து பொய்ப் பேட்டிகளை வண்டி வண்டியாக அவிழ்க்கத் தொடங்கி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. நாசகார ஆட்சியைத்தான் இவர் கொடுத்தாரே தவிர, நல்லாட்சியைத் தரவில்லை. “2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் சிறந்த ஆட்சியை அ.தி.மு.க. தந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது நிறையத் திட்டங்களைக் கொண்டு வந்து, அதனால் மக்கள் பயன்பெற்றுள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் சிறப்பான ஆட்சி செய்தேன்” என்று சிரிக்காமல் பேட்டி அளித்துள்ளார் பழனிசாமி.
தனது சொந்தத் தொகுதியில் கூட எந்த அடிப்படை பிரச்சினையையும் பழனிசாமி தீர்க்கவில்லை. பிறகு எப்படி தமிழ்நாட்டில் மற்ற தொகுதிகளில், அம்மக்களின் பிரச்சினையை பழனிசாமி தீர்த்திருப்பார்? சுமார் 10 ஆயிரம் பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளார்கள் எடப்பாடி தொகுதியில் மட்டும். அவர்களது அனைத்து விண்ணப்பங்களையும் கட்டுக்கட்டாக அடுக்கி எடுத்து வந்து பொதுவெளியில் காட்டினார் தி.மு.க. தலைவர். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அனைத்துத் தொகுதியிலும் கிராமசபைக் கூட்டங்களை நடத்தினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அப்போது, எடப்பாடி தொகுதியில் நடந்த கிராம சபையில் பேசிய பெண்கள் அனைவரது உரை- யும் கண்ணீரையும் கோபத்தையும் வரவைத்தது.
அரசாங்க அலுவலகத்துக்கு போனால் எந்த இடத்தில் எவ்வளவு லஞ்சம் தர வேண்டி இருக்கிறது என்றார் ஒரு பெண். நெசவாளர் நிறைந்த அந்தப் பகுதியில் நெசவாளர் துயர் துடைக்க எதுவும் செய்யவில்லை என்றார் இன்னொருவர். டாஸ்மாக் கடைகள் மூலமாக ஏற்படும் சட்டம் -ஒழுங்கை இன்னொருவர் சொன்னார். படித்த தன்னைப் போன்றவர்க்கு வேலை கிடைக்காத கொடுமையை இன்னொருவர் சொன்னார். 'ரோடு போடுவதைத் தவிர எதுவும் செய்யவில்லை, அதுவும் போட்ட ரோட்டையே திரும்பத் திரும்பப் போடுகிறார்கள்' என்று சொன்னார் மற்றொருவர். முதலமைச்சர் பதவியில் இருந்த பழனிசாமி தனது சொந்தத் தொகுதியைக் கூட எவ்வளவு கேவலமாக வைத்துள்ளார் என்பதைப் படம் பிடித்தது எடப்பாடியில் நடந்த கிராமசபை!
1. எடப்பாடி தொகுதியில் ஜவுளிபூங்கா
2. நெருஞ்சிப்பேட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம்
3. கொங்கணாபுரத்தில் தொழில்பேட்டை
4. மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் பயன்பாடு
5. எடப்பாடி அரசு மருத்துவமனை மேம்பாடு
6. கொங்கணாபுரம் கூட்டுறவு வங்கி விவகாரம்
7. மின் மயானங்கள்
8. தேங்காய், மா.பருத்தி, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றுக்கு ஆதார விலை
9. பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம்
10. நிலக்கடலை விவசாயிகளுக்கு தனிகூட்டுறவு சங்கம்
- இவை அனைத்தும் பழனிச்சாமி, எடப்பாடித் தொகுதிக்குச் செய்து தருவதாகச் சொன்ன வாக்குறுதிகள். இதனை நிறைவேற்றித் தரவில்லை என்றுதான் அந்தத் தொகுதி மக்கள் குற்றம் சாட்டினார்கள்.
நங்கவல்லி டவுன் பஞ்சாயத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் பொதுப்பணத்தை மோசடி செய்தார். இது கண்டு பிடிக்கப்பட்டது. அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால் விசாரணை நாடகம் நடத்தி, இழப்பை மட்டும் பதிவு செய்து அவரை காப்பாற்றிவிட்டார் பழனிசாமி. அ.தி.மு.க. உள்ளூர் தலைவர்களும் பழனிசாமிக்கு நெருக்கமான உதவியாளர்களும் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
பொங்கல் பரிசுகளாக விநியோகிக்கப்பட்ட கரும்பில் பழனிசாமியின் நெருங்கிய கூட்டாளிகள் கமிஷன் பார்த்துள்ளார்கள். தேங்காய் வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவும் அப்போது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுதான். ”எடப்பாடியில் உள்ள கொங்கணாபுரத்தில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில், கர்நாடக குழாய் இணைப்பு இங்கு போலல்லாமல் நெடுஞ்சாலைகள் வழியாகச் செல்கிறது. ஆனால் இங்கு ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விவசாய நிலங்களையும் சேதப்படுத்துகிறது” என்றும் அப்போது பொதுமக்கள் சொன்னார்கள்.
அ.தி.மு.க. அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெரியநாச்சியூர் கிராமத்தில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை இடித்தது. 2021 வரை அதைக் கட்டித் தரவில்லை. மக்கள் எதற்கெடுத்தாலும் எடப்பாடி நகரத்துக்குத்தான் செல்ல வேண்டி உள்ளது. தூய்மையான பஞ்சாயத்து விருதை கொடுத்துள்ளார்கள். ஆனால் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஒன்றரை ஆண்டுகளாக சுத்தம் செய்யவில்லை என்று மக்கள் சொன்னார்கள். இதுதான் அவர் நல்லாட்சி நடத்திய லட்சணம் ஆகும்.
கிராமசபைக் கூட்டம் நடந்த பஞ்சாயத்தில் 52 சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் உள்ளன. 3 ஆண்டுகளுக்கு முன்பு இதில் 40 தொட்டிகளில் இருந்து மோட்டார் அகற்றப்பட்டது, அவை 2021 முதல் பொருத்தப்படவில்லை. கிராமசபைக் கூட்டம் மைதானத்தின் நுழைவாயிலில் ஒரு சின்டெக்ஸ் தொட்டி உள்ளது, அதில் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் இல்லை. இதுதான் பழனிசாமியின் தொகுதியின் அன்றைய நிலைமை! 'ஆனால் கழிவறை கட்டுவதில் கமிஷன் அடித்துவிட்டார்கள். ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய வீட்டு கழிப்பறை திட்டத்தில் சேர 2 ஆயிரம் ரூபாய் கமிஷனாக அ.தி.மு.க. பிரமுகர்கள் வாங்கி இருக்கிறார்கள்.தனிப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புக்கு 4000 ரூபாய், -5000 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள். காசு கொடுத்தால்தான் டெண்டர் என்று பழனிசாமி நடந்து கொள்வதைப் போலவே அவரது கட்சிக்காரர்களும் காசு கொடுத்தால்தான் இது போன்ற அரசின் பயனை பெற முடியும் என்ற நிலைமைதான் எடப்பாடி தொகுதியில் இருக்கிறது” என்று அப்போது மக்கள் சொன்னார்கள். இதுதான் அவர் நல்லாட்சி நடத்தியதா? எப்போதும் சேலத்தில் போய் பதுங்கிக் கொள்ளும் பழனிசாமி, சேலம் மாவட்டத்துக்காவது ஏதாவது செய்துள்ளாரா என்றால் அதுவும் இல்லை!
-தொடரும்!