முரசொலி தலையங்கம்

பழனிசாமியின் ஆட்சியே குட்கா ஆட்சி தான்! : அ.தி.மு.க.வின் ஊழல்களை எடுத்துரைத்த முரசொலி!

“பழனிசாமியின் ஊழல்கள்” எனத் தலைப்பிட்டு, அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டுள்ளது முரசொலி நாளிதழ்!

பழனிசாமியின் ஆட்சியே குட்கா ஆட்சி தான்! : அ.தி.மு.க.வின் ஊழல்களை எடுத்துரைத்த முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஊழல்கள் பற்றி பேசத் தொடங்கி இருக்கிறார் அ.தி.மு.க.வின் பழனிசாமி. அதற்கான அருகதை அவருக்கு இருக்கிறதா என்றால் இல்லை!

பழனிசாமி மீது அவர் முதலமைச்சராக இருந்தபோதே டெண்டர் வழக்கு பாய்ந்தது. உடனடியாக உச்சநீதிமன்றம் போய் தடை வாங்கினார். யோக்கியர் என்றால், அந்த வழக்கை முறையாக நடத்தி இருக்க வேண்டும். ஆனால் பதற்றமாகி உச்சநீதிமன்றம் போனார்.

இடைக்காலத் தடை வாங்கினார். அதனால் தான் முதலமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடித்தார். “உங்கள் மீது ஊழல் புகார் சொல்லப்படுகிறதே?” என்று நிருபர்கள் டெல்லியில் வைத்து அவரிடம் கேட்டார்கள். “யார் மீது தான் ஊழல் புகார் இல்லை” என்று சொன்னவர் தான் பழனிசாமி. அவருக்கு ஊழலைப் பற்றி பேச அருகதை இருக்கிறதா?

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றாகவும் இது குறித்து பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி 2018 ஆம் ஆண்டே வழக்கு தாக்கல் செய்தார்.

இவைகளை தனது உறவினர்களுக்கே டெண்டராகக் கொடுத்துக் கொண்டார் பழனிசாமி என்பதுதான் குற்றச்சாட்டு. இதன் மூலம் பழனிசாமி, தனது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என ஆர்.எஸ் பாரதி மனுவில் தெரிவித்து இருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி 2018 அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தது. அந்த வழக்கு அப்படியே கிடந்தது.

பழனிசாமியின் ஆட்சியே குட்கா ஆட்சி தான்! : அ.தி.மு.க.வின் ஊழல்களை எடுத்துரைத்த முரசொலி!

ஆட்சி மாறியது, காட்சியும் மாறியது. தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையிடப்பட்டது. “இவ்வழக்கு கடந்த நான்கு ஆண்டு காலமாக உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு நிலுவையில் உள்ளதால் வழக்கின் விசாரணை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும்” என முறையிட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா விரைந்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி, சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த வழக்கு மீண்டும் வேகம் எடுத்தது.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையே இப்போது விசாரணை நடத்தி வருகிறது. இத்தகைய பழனிசாமி தான் ஊழல்கள் குறித்து வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

பழனிசாமியின் ஆட்சியே குட்கா ஆட்சி தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

சென்னையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக 2017ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் குற்றச்சாட்டு எழுந்தது.

குட்கா வியாபாரிகளிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்துகிறது. அப்போது தங்களது வியாபாரத்துக்கு துணை நின்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் யார் யார் என்பதை டைரி எழுதி வைத்திருந்தார்கள் வியாபாரிகள். அந்த நிறுவனத்தில் இருந்து 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது அ.தி.மு.க. ஆட்சியில்.

இது தொடர்பான வழக்கில் மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதிலில், “டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஏராளமான குட்கா பொருள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை விற்பதற்காக 55 கோடி வரை ஹவாலா முறையில் பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது. வருமான வரித்துறையும் இதனை வலிமைப் படுத்துவது மாதிரியான ஆதாரங்களைக் கொடுத்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

பழனிசாமியின் ஆட்சியே குட்கா ஆட்சி தான்! : அ.தி.மு.க.வின் ஊழல்களை எடுத்துரைத்த முரசொலி!

40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றது தொடர்பாக வருமான வரித்துறை அ.தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் அ.தி.மு.க. ஆட்சி காலத்து அமைச்சரான விஜயபாஸ்கர், இரு டி.ஜி.பிக்கள் பெயர்கள் இருந்தன. ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் இவர்கள் பெயர் இடம் பெறாத வகையில் பழனிசாமி இவர்களை காப்பாற்றினார். சில ஊழியர்களை மாட்டி விட்டு அ.தி.மு.க. அமைச்சர்களை தப்பிக்க வைத்தார் பழனிசாமி.

அ.தி.மு.க. அமைச்சர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கொண்ட ஒரு கோப்பு ஒன்றை வருமான வரித்துறை அனுப்பி இருந்தது. அந்த ஆவணங்களையே காணாமல் ஆக்கினார்கள் பழனிசாமி ஆட்சியில்.

குட்கா வழக்கை விசாரித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி. மஞ்சுநாதா திடீரென்று மாற்றப்பட்டார். அவர் இருந்தால் இந்த வழக்கை முறையாக நடத்தி விடுவார் என்று பயந்து தூக்கி அடித்தார் பழனிசாமி.

உயர் நீதிமன்ற ஆணையின்படி விஜிலென்ஸ் ஆணையராக நியமிக்கப்பட்டு குட்கா வழக்கை விசாரித்து வந்த வி.கே. ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ். 5 மாதங்களில் பழனிசாமியால் மாற்றப்பட்டார்.

குட்கா வழக்கில் தொடர்புடைய சிவக்குமார், செந்தில்முருகன் ஆகிய இரண்டு அரசு ஊழியர்கள் மீது ‘வழக்குத் தொடர’ சி.பி.ஐ. அனுமதி கோரியது.

அதற்கு பழனிசாமி அரசு அனுமதி தரவில்லை. திரும்பத் திரும்ப கேட்ட பிறகு 20 மாதங்கள் கழித்து அனுமதி அளித்தார் பழனிசாமி. அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீதான நடவடிக்கைக்கு பழனிசாமி இறுதிவரை அனுமதி தரவே இல்லை.

எந்த அதிகாரிகள் மீது புகார் எழுந்ததோ, அவருக்கே பணி நீட்டிப்பு தரப்பட்டது பழனிசாமி ஆட்சியில். தன் மீதான குற்றச்சாட்டுக்கு பரிகாரம் தேட வழக்கு போட அவருக்கே அனுமதியும் தரப்பட்டது. பழனிசாமி ஆட்சியில் குட்கா மட்டுமல்ல, ஊழலும் தலைவிரித்தாடிய காட்சிகள் ஆகும். இந்த வழக்கு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து பேசத் தொடங்கி இருக்கிறார் பழனிசாமி.

banner

Related Stories

Related Stories