முரசொலி தலையங்கம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எந்தச் சக்தியாலும் வீழ்த்தவும் முடியாது, சிதைக்கவும் முடியாது - முரசொலி !

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எந்தச் சக்தியாலும் வீழ்த்தவும் முடியாது, சிதைக்கவும் முடியாது - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (24-10-24)

மதச்சார்பின்மையை வலியுறுத்திய உச்சநீதிமன்றம்!

"மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உறுப்பு ஆகும்” என்று உச்சநீதிமன்ற அமர்வு சொல்லி இருக்கிறது. மதச்சார்பின்மை என்பது வெளிநாட்டுச் சரக்கு என்று சொல்லித் திரிபவர் இந்தத் தீர்ப்பைக் கவனிக்க வேண்டும். சுப்ரமணிய சுவாமி, உச்சநீதிமன்றத்தில் மதச்சார்பின்மைக்கு எதிராக ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார். மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய சொற்களை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. அவரைப் போலவே பல்ராம் சிங், அஸ்வினி குமார் ஆகியோரும் இதே கோரிக்கையை வைத்திருந்தார்கள்.

“இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது, 'இந்தியா ஒரு சோசலிச, மற்றும் மதச்சார்பற்ற நாடு' என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. ஆனால் இடையில் இந்த சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 1976 ஆம் ஆண்டு செய்யப்பட்ட 42 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாக இதனைச் சேர்த்துள்ளார்கள். எனவே மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய இரண்டு சொற்களையும் நீக்க வேண்டும்" என்பதுதான் இவர்களது கோரிக்கை ஆகும்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் மிகத் தெளிவாக தங்களது கருத்துகளைச் சொல்லி இருக்கிறார்கள். "திருத்தத்தின் மூலமாகச் சேர்க்கப்பட்ட சொற்கள், தனித்தனியாக அடைப்புக்குறிக்குள் தான் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே இவை 1976 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டவை என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். மதச்சார்பற்ற, சோசலிச என்ற சொற்களோடு தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகிய சொற்களும் சேர்த்துத்தான் சேர்க்கப்பட்டுள்ளன. ஏன் இதனை மட்டும் எதிர்க்கிறீர்கள்?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளார்கள். "இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?" என்றும் நீதிபதிகள் கேட்டுள்ளார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எந்தச் சக்தியாலும் வீழ்த்தவும் முடியாது, சிதைக்கவும் முடியாது - முரசொலி !

"மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒரு பகுதியாகும். உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மதச்சார்பின்மையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டம் முன் வைக்கும் சமத்துவம், சகோதரத்துவம், உரிமைகளை ஒருவர் உற்று நோக்கினால் அவற்றில் மதச்சார்பற்ற நிலை முக்கியமான கருதுகோளாக இருப்பதை தெளிவாகக் காணமுடியும்" என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்ட நீதிபதிகள் சோசலிசம் பற்றியும் தெளிவுபடுத்தினார்கள். "சோசலிசம் என்பது சமத்துவம் ஆகும். இந்த நாட்டின் செல்வம் சமமாகப் பங்கிடப்பட வேண்டும் என்பது ஆகும். இவை அனைத்துக்கும் மேற்கத்திய நாடுகளின் பொருளை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை” என்றும் நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த வழக்கின் மீதான விசாரணை நவம்பர் 18 அன்று நடக்க இருக்கிறது என்றாலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய இரு சொற்களுக்கும் மிகத் தெளிவான விளக்கங்களைச் சொல்லியதன் மூலமாக இந்நாட்டு மக்களுக்கு வெளிச்சமான பாதையைக் காட்டி இருக்கிறார்கள். வகுப்புவாத அரசியலை நடத்தி, மக்களின் மன உணர்வுகளைத் தூண்டி குளிர் காய நினைக்கும் பா.ஜ.க., தனது அரசியல் வெற்றியின் மூலமாக இந்திய அரசை வகுப்புவாத அரசாக மாற்றத் துடிக்கிறது. அதன் விளைவுதான் இதுபோன்ற வழக்குகள். 'மதச்சார்பின்மை என்பது ஐரோப்பிய இறக்குமதி* என்று பிரச்சாரம் செய்வதும் இதனால் தான்.

Savarkar
Savarkar

இந்திய நாட்டின் ஒற்றுமையை உருவாக்கிய தலைவர்கள் அனைவரும், 'நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று, அனைவரும் இந்தியர்கள்' என்ற இந்திய தேசியத்தை உருவாக்கினார்கள். இதனை மையமாக வைத்தே, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார்கள். 'இந்திய நாட்டில் அன்னியர் புகலென்ன நீதி?' என்று கேட்டார்கள். இத்தகைய சுதந்திர உணர்ச்சி தலைதூக்கி இந்தியா முழுக்க சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற நேரத்தில் அதனைச் சிதைக்கும் வகையில் இந்தியாவில் இரு தேசியங்கள் இருப்பதாகச் சொன்னவர் தான் சாவர்க்கர். இந்துக்களையும், இசுலாமியர்களையும் இரு தேசியங்கள் என்று சொல்லி பிரிவினையை உருவாக்கினார் சாவர்க்கர். அதனைத் தான் இன்று வரையிலும் பா.ஜ.க.வினர் செய்து வருகிறார்கள்.

இரு தேசியங்கள் இந்தியாவில் இருக்கிறது என்று சாவர்க்கர் சொன்னபோது, 'இரு தேசிய இனங்கள் எனும் கொள்கை பொய். இந்திய இந்துக்களும், முசுலீம்களும் வேறுவேறு இனமல்ல' என்றவர் காந்தி. "இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டுமென்று இந்துக்கள் கருதினால் அவர்கள் கனவு காண்பவர்கள் ஆவார்கள். இந்தியாவைத் தங்கள் தாய் நாடாக்கிக் கொண்ட இந்துக்களுக்கும், முகமதியர்களுக்கும், பார்சிகளும், கிறிஸ்தவர்களும் சகோதரர்கள் ஆவார்கள்" என்றவர் அவர். 'மதவாத எண்ணம் தோன்றினால் நாடு விஷம் வழிந்தோடும் தேசம் ஆகிவிடும். ஆனால் நான் கனவு காணும் நாடு அன்பு நதிகள் வழிந்தோடும் நாடாகும்' என்றவர் காந்தி. ஆனால் விஷம் வழிந்தோடும் தேசமாக மாற்றும் முயற்சிகளைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு அரசியலமைப்புச் சட்டம் தடையாக இருக்கிறது. மதச்சார்பின்மை, சோசலிசம், சமத்துவம், உரிமைகள், சகோதரத்துவம் ஆகிய சொற்கள் இடைஞ்சலாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஆயிரம் தடைகளை உடைத்து விட்டு கம்பீரமாக எழுந்து நிற்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகும். அது சட்டம் மட்டுமல்ல, இந்திய நாட்டு மக்களின் குணமாக, பண்பாடாக இருக்கிறது. இந்தியப் பண்பாடு தான், இந்தியச் சட்டமாக ஆகி இருக்கிறது. அதனை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எந்தச் சக்தியாலும் வீழ்த்த முடியாது, சிதைக்கவும் முடியாது என்பதே உண்மை

banner

Related Stories

Related Stories