ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் நலத்திட்டங்களைச் செயல்படுத்தாமலும், நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்காமலும் தி.மு.க. அரசு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். திடீரென்று எடப்பாடியாருக்கு இதில் என்ன திடீர் அக்கறை ஏற்பட்டது என்று தெரியவில்லை.
அவரது ஆட்சிக் காலத்தில் ஏராளமான திட்டங்களைத் தீட்டியதாகவும், தி.மு.க.வின் 41 மாத கால ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளதாகவும் எடப்பாடி சொல்லி இருக்கிறார். தானும் ஏதோ செயல்படுகிறேன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக இப்படி ஏதாவது ஒரு அறிக்கை உளறலை வெளியிடுவது பழனிசாமியின் பழக்க வழக்கமாக ஆகிவிட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் தமிழினத்தின் அரசாகச் செயல்பட்டு வருகிறது. 'திராவிட மாடல்' அரசாக இதனை நடத்தி வருகிறார் முதலமைச்சர் அவர்கள். ஒரு சமூகநீதி அரசு எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்பட்டு வருவதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பழனிசாமி இதனை அறியமாட்டார். எந்த சமூக மக்களுக்கும் அநீதி இழைக்காமல் நீதி வழங்கும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக பட்டியலின மக்களின் பாதுகாவலராக முதலமைச்சர் இயங்கி வருகிறார்கள் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் நாளை சமத்துவ நாளாக அறிவித்து அன்று அனைவரையும் உறுதி மொழி எடுக்க வைத்தது முதலமைச்சரின் மகத்தான சாதனையாகும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏழு ஆண்டுகளாக விதி 16 (2), தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் (வன்கொடுமைகள்) தடுப்பு விதிகள் 1995, படி கூட்டப்பட வேண்டிய மாநில அளவிலான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெறாமல் இருந்தது.
2013 ஆம் ஆண்டு மட்டும் ஒரு முறை நடந்தது. 16(2) விதியின் படி மேற்படி மாநில விழிப்புணர்வு கமிட்டிக் கூட்டம் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதனையே அ.தி.மு.க. ஆட்சியில் நடத்தவில்லை. பல ஆண்டுகள் இந்தக் கூட்டம் நடக்காமல் இருந்ததைச் சுட்டிக் காட்டி கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை எடுத்து நடத்தியவர் வழக்கறிஞர் குமாரதேவன்தான், இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினராக முதலமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்படி ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டதும், அவசர அவசரமாக 8.9.2020 அன்று அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டத்தை நடத்தினார்கள். கூட்டத்தை நாங்கள் நடத்திவிட்டோம் என்று நீதிமன்றத்துக்கு தகவல் அளித்தார்கள். அதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் மாநில அளவிலான விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே இருக்கும் விதியைச் சுட்டிக்காட்டி இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.
2021 மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தை நடத்தினார்கள். ஏழு ஆண்டு காலமாக நடத்தப்படாத கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முதன்முதலாக நடத்தினார்கள்.
« தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உருவாக்கப்பட்டது. மாநில அளவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான உரிய ஆலோசனைகளை வழங்கவும் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் இந்த அமைப்பு விசாரணைகளை நடத்தி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இந்த ஆணையத்தை பழனிசாமி தனது ஆட்சியில் அமைக்கவில்லை.
« குடும்பன், பள்ளர், தேவேந்திரகுலத்தார், கடையன், பண்ணாடி, காலாடி, வாதிரியான் ஆகிய ஏழு சமூகங்களையும் ஒன்றாக இணைத்து ஒரே பெயரில் தேவேந்திரகுலத்தார் என்று அழைக்க அரசாணை வெளியிடப்பட்டது.
« சாதிவேறுபாடுகளற்ற மயானங்களைப் பயன்பாட்டில் கொண்டிருக்கும் முன் மாதிரி சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
« புதிரை வண்ணார் நலவாரியத்தை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
« நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்தார்கள். அம்பேத்கர் படம் இடம் பெற வேண்டும் என்பதை தலைமை நீதிபதியைச் சந்தித்து உறுதிமொழி பெற்றது அரசு.
« விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கையை ஏற்று சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணல் சிலையை அமைத்து, திறந்து வைத்தார் முதலமைச்சர்.
« திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அவர்கள், அண்ணல் அம்பேத்கருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை தமிழில் வாசிக்க வாய்ப்பாக மொழிபெயர்த்து புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழக அரசால் அண்ணலுடைய தேர்ந்- தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாக தமிழில் வெளியிடப்படும் என்று அறிவிப்புச் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
« 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல் திட்ட சட்டம் 2024' என்ற சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக ஒரு செயல் திட்டத்தை தயாரிப்பதற்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது.
« ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக தொண்டாற்றி வரும் நபருக்கு ஆண்டுதோறும் டாக்டர். அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுடன் வழங்கப்படும் பரிசுத் தொகையை ஐந்து லட்சமாக உயர்த்தியது தி.மு.க. அரசு.
« மக்களிடையே தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24-ஆம் தேதிமுதல் 30ஆம் தேதி வரை "மனிதநேய வாரவிழா" நடத்தப்பட்டு வருகிறது.
« வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகத்தில் எவ்வித வேறு பாடுமின்றி பிறர் போற்ற வாழவேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் 102 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் தீருதவித் தொகை (Selenium) உயர்த்தப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.
« வன்முறையால் பாதிக்கப்பட்டோரை சமூக, கண்ணோட்டத்துடன் அணுகி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகள் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் அண்ணா பணியாளர் நிர்வாக கல்லூரியின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
- தொடரும்!