127 நாடுகளைக் கொண்ட உலகளாவிய பட்டினி குறியீடு பட்டியலில் பா.ஜ.க.வின் பாரத தேசம், 105 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. உலக பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட மிகவும் மோசமான இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது.
இதன் மூலமாக பட்டினி விவகாரத்தில் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. சிறந்த மதிப்பெண்ணைப் பெற்ற நாடுகள் சீனா, ரஷ்யா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 21 நாடுகள் ஆகும்.
சோமாலியாவை அனைவருக்கும் தெரியும். பசி, பஞ்சம், பட்டினியின் அடையாளமாக அந்த நாட்டைச் சொல்வோம். 127 நாடுகள் கொண்ட அந்தப் பட்டியலில் 127 ஆவது இடத்தில் சோமாலியா இருக்கிறது. 44.1 குறியீட்டுப் புள்ளிகளை அந்த நாடு பெற்றுள்ளது. இத்தகைய பட்டியலில் 27.3 குறியீட்டுப் புள்ளிகளைப் பெற்று இந்தியா 105 ஆவது இடத்தில் இருப்பது அவமானம் இல்லையா? இதற்கு என்ன சொல்கிறார் இந்தியப் பிரதமர்? மன்னிக்கவும்! 'பாரதப்' பிரதமர்?
பசியின் அளவை அறிவதற்கான கருவியாக ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் பிறப்பு, இறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச பட்டினி குறியீடு உருவாக்கப்படுகிறது. சர்வதேச குறியீட்டின் 19 ஆவது பதிப்பை அயர்லாந்தைச் சேர்ந்த மனிதநேய அமைப்பான 'கன்சர்ன் ஓல்டு வைட்', ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நிறுவனமான 'வெல்ட் ஹங்கர் லைப்' ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ளன.
இந்த பட்டியலில் இந்தியாவின் நிலைமை மிக மோசமானதாக அமைந்துள்ளது. 127 நாடுகளைக் கொண்ட பட்டியல் இது. இதில் இந்தியா 105 ஆவது இடத்தில் இருக்கிறது. இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 13.7 விழுக்காடு மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கிறார்கள்.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 35.5 விழுக்காடு பேர் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கிறார்கள். இதில் 18.7 விழுக்காடு குழந்தைகள் எடை குறைந்தவர்களாக இருக்கிறார்கள். இதில் 2.9 விழுக்காடு குழந்தைகள் ஐந்து வயதுக்கு முன்பே இறந்துவிடுகிறார்கள் என்கிறது இந்த அறிக்கை.
இந்த செய்தி அறிக்கை அக்டோபர் 12 அன்று நாளிதழ்களில் வெளியாகி இருக்கிறது, அதே நாளிதழ்களின் இன்னொரு பக்கத்தில் வெளியான செய்தியைப் பார்க்கும் போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. "கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வலிமை மிக்க தேசமாகவும், மதிப்பிற்குரியதாகவும் உருவெடுத்துள்ளது" என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசி இருக்கிறார்.
நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய மோகன் பகவத், "கடந்த சில ஆண்டு களில் நம்பகத்தன்மையால் இந்தியா உலக அளவில் வலிமைமிக்க தேசமாகவும், மதிப்புக்குரியதாகவும் உருவெடுத்துள்ளதை அனை வரும் உணர்ந்துள்ளனர். குடிமக்களின் தேசிய சிந்தனையால் நாடு உயர்வை அடைந்துள்ளது" என்று குறிப்பிட்டார். ஒருவிதமான கற்பனாவாத நாட்டை நம் கண்முன் நிறுத்தப் பார்க்கிறார் மோகன் பகவத்.
‘எல்லோரும் நல்லவரே’ என்பதைப் போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார். 'தேசிய சிந்தனையால் நாடு உயர்வை அடைந்துள்ளது' என்று எதை வைத்துச் சொல்கிறார். மூன்றாவது முறையும் பா.ஜ.க.வுக்கு வாக்களித்ததை வைத்துச் சொல்கிறாரா?
எதிரி நாடுகள் குறித்துப் பேசிய மோகன் பகவத், ஏழ்மையைப் பற்றியோ பட்டினியைப் பற்றியோ பேசவில்லை. இந்தியாவின் அனைத்து வகைப்பட்ட வளர்ச்சியைப் பற்றி பேசவில்லை. வளர்ச்சிக் குறியீடுகள் பற்றி பேசவில்லை.
வேலைவாய்ப்புகள் பற்றியோ, இளைஞர் நலன் குறித்தோ, பெண்கள் மேம்பாடு குறித்தோ பேசவில்லை. அதைப் பற்றி எல்லாம் அவருக்கு கவலையும் இல்லை. அவர் அமைப்புக்கும் அக்கறை இல்லை. இத்தகைய கற்பனை மாயையில்தான் பிரதமர் மோடியும் இருக்கிறார் என்றே தெரிகிறது.
மோகன் பகவத் பேச்சைக் குறிப்பிட்டு சமூக வலை தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, "வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டுவதற்கு புதிய சக்தியை பாய்ச்சுகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார். வளர்ச்சி அடைந்த பாரதமா, கடந்த பத்தாண்டு காலம் என்பதை அவர் பட்டியல் போட்டு விளக்கத் தயாராக இருக்கிறாரா? பா.ஜ.க. ஆட்சியில் எந்தெந்த வகைப்பட்ட வளர்ச்சிகள் நடைபெற்றுள்ளது என்பதை விளக்கும் துணிச்சல் பா.ஜ.க.வுக்கு உண்டா?
ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்ட 2022 - 23 ஆம் ஆண்டுக்கான அறிக்கைப்படியே பா.ஜ.க.வின் பாரதம் மகிழ்ச்சிக்குரிய குறியீட்டில் இல்லையே!
* வறுமையின்மையில் இந்திய விழுக்காடு 72.
* பட்டினி ஒழிப்பில் இந்திய விழுக்காடு 52.
* தரமான கல்வியை வழங்குவதில் இந்திய விழுக்காடு 61.
* பாலின சமத்துவத்தில் இந்திய விழுக்காடு 49.
* குறைந்த விலை, சுத்தமான ஆற்றல் குறியீட்டில் இந்தியா 68.
- என்று சொன்னது பா.ஜ.க.வின் நிதி ஆயோக்தான். இந்த அறிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன? அதையாவது பா.ஜ.க. அரசு சொல்லுமா? சர்வதேச அறிக்கைகள் வெளியிடுவதன் நோக்கம், இது போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால் இவற்றைப் பற்றி எல்லாம் பா.ஜ.க.வுக்கு கவலை இல்லை. இது தொடர்பான முந்தைய அறிக்கைகள் குறித்து மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கேள்வி எழுப்பிய போது, "இது போன்ற அறிக்கைகளை பொருட்படுத்தத் தேவையில்லை” என்று அமைச்சர் அன்னபூர்ணா தேவி குறிப்பிட்டார். எதை பொருட்படுத்த வேண்டும், எதைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்று அவர் சொன்னால் நல்லது. 'ஏழைத்தாயின் மகன்' இதில் கவனம் செலுத்தவும்!