மெட்ரோ 'படையெடுப்புகள்'!
சென்னை மெட்ரோ - 2 திட்டத்துக்கு ஒருவழியாக பணம் ஒதுக்க மனமிறங்கி வந்துவிட்டது ஒன்றிய அரசு. தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் எடுத்த தொடர்ச்சியான 'படையெடுப்பு' களின் மூலமாகத்தான் இது நடைபெற்றிருக்கிறது. வரலாற்றில் கங்கை கொண்டான், கடாரம் வென்றான், கல்லக்குடி கொண்டான் என்று பதிவானதைப் போல 'மெட்ரோ வென்றார்' என்று சொல்லத்தக்க வகையில் இது அமைந்துவிட்டது.
மெட்ரோ - 1 என்ற திட்டத்தை உருவாக்கியதும் தி.மு.க. அரசுதான். முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உத்தரவின் பேரில் அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும் அதிகாரிகளும் 7.2.2008 அன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்று அங்குள்ள ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் (Japan International Co-Operation Agency) பேச்சுவார்த்தை நடத்தி நிதியுதவி பெற்றார்கள். அதன் அடிப்படையில் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் 2.11.2008 அன்று ஒன்றிய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே கையெழுத்தானது.
ஒன்றிய - மாநில அரசுகளின் நிதி 41 சதவிகிதம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி 59 சதவிகிதம் என்று அந்த திட்டம் உருவானது. இன்றைக்கு சென்னை மக்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்க காரணம் தலைவர் கலைஞரும், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும்தான்.
இந்த அடிப்படையில்தான் மெட்ரோ- 2 என்ற திட்டம் உருவானது. மூன்று ஆண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அதற்கு நிதி கொடுக்காமல் முடிந்தவரையில் டிமிக்கி கொடுத்து வந்தது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். பிரதமருடன் கலந்து கொண்ட மேடைகளிலும் இதனை வலியுறுத்தினார் முதலமைச்சர். பிரதமரை சந்திக்க மெட்ரோ ‘படையெடுப்புகள்' வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இதை வலியுறுத்தினார். ஆனால் அசைந்து கொடுக்காமல் இருந்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தின் நிதி ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசும், மாநில அரசும் 56 : 50 விழுக்காடு பங்கிட்டுத் தர வேண்டும்.
இந்ததிட்டத்துக்கு 63 ஆயிரம் கோடி செலவாகும். இதற்கான ஒப்புதலையும் தராமல் இருந்தது ஒன்றிய அரசு. மாநில அரசு செலவு செய்வதற்கான நிதியைத் திரட்ட பன்னாட்டு கடனுதவி பெறுவதற்கு அனுமதியும் தரவில்லை. தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு 9 ஆயிரம் கோடியை ஒதுக்கியது. ஒன்றிய நிதி வரவில்லை என்றால் இந்த திட்டத்தை முழுமையாக மாநில அரசின் நிதியில் இருந்துதான் செயல்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடியை இதற்காக ஒதுக்கினால் தான் மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தை செயல்படுத்தி முடிக்க முடியும். இப்படிப்பட்ட நெருக்கடியில் தள்ளியது ஒன்றிய அரசு.
ஜி.எஸ்.டி.என்ற பெயரால் வரிப்பணத்தை மொத்தமாக சுருட்டிச் செல்கிற ஒன்றிய அரசாங்கம், வெள்ள நிவாரண நிதியைக் கூட தர மறுக்கும் ஒன்றிய அரசாங்கம், பள்ளிப் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக தரப்படும் நிதியைக் கூட தர மறுக்கும் ஒன்றிய அரசாங்கம், முன்னர் ஒப்புக்கொண்ட மெட்ரோ - 2 திட்டத்துக்கான நிதியையும் தர மறுத்த பச்சைத் துரோகத்தை பல மாதங்களாகத் தொடர்ந்தது.
பணத்தைக் கொடுக்காமல் இருப்பதற்கு பிரதமர் மோடி அவர்கள் என்ன காரணம் சொன்னார் தெரியுமா? கடந்த மே 18 ஆம் தேதி அன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "சில மாநில அரசுகள் இலவச பயணம் என அறிவிக்கிறார்கள், இதனால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை. எனவே மெட்ரோ திட்டங்களால் பயனில்லை" என்று சொன்னார். மக்களின் பயன்பாட்டுக்காகத் மெட்ரோ ரயில்களை விடுகிறோமே தவிர, மெட்ரோ நிறுவனங்களை வளர்ப்பதற்காக அல்ல. சமூகநலத் திட்டத்துக்கும், அரசாங்கத்தின் உள்கட்டமைப்புக்குமான வேறுபாடு தெரியாமல் பிரதமரே பேசினார்.
கடைசிக் கட்ட போருக்குப் பின்னால், மெட்ரோ - 2 திட்டத்துக்கு அக்டோபர் 5 ஆம் நாளன்று ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலை வழங்கி விட்டது. ஒன்றிய அரசு 7,425 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு வழங்க இருக்கிறது. தமிழ்நாடு அரசு 22 ஆயிரத்து 228 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய இருக்கிறது. மீதமுள்ள 33 ஆயிரத்து 593 கோடி ரூபாயை நாம் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கடன் தொகை என்பது ஒன்றிய அரசின் கடனாகக் கருதப்பட்டு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை மூலமாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு நேரடியாக வழங்கப்படும்.
இப்படி வாங்கப்படும் கடனை யார் திருப்பிக் கட்டுவது? கடனை வாங்கிய ஒன்றிய அரசு தானே செலுத்த வேண்டும்? இல்லை, மாநில அரசின் தலையில் தான் அது கட்டப்பட்டுள்ளது. “கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தைச் சார்ந்தது. கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் சி.எம்.ஆர்.எல். இல்லாத பட்சத்தில், அந்த ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்குவது மாநில அரசின் கடமையாகும்." என்று ஒன்றிய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசே நிதி ஒதுக்கிக் கொள்ளும் என்று அடிமை ஒப்பந்தம் எழுதிக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி . அதுதான் இவ்வளவு பின்னடைவுக்கும் அடிப்படைக் காரணம் . இதனை உடைத்து, ஒன்றிய அரசை ஒப்புக் கொள்ள வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
மெட்ரோ ரயில் திட்டமே லாபமில்லாதது என்று சொல்லி வந்தார் பிரதமர் மோடி. மெட்ரோ - திட்டத்துக்கான நிதியை மாநில அரசு தான் செலவு செய்ய வேண்டும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை சொல்லி வந்தார். இத்தகைய டெல்லி சாம்ராஜ்யத்தை நோக்கி பல்வேறு படையெடுப்புகளை நடத்தி, திட்ட ஒப்புதலையும், ஓரளவு நிதியும், கடன் வாங்கும் உரிமையையும் மீட்டு வந்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக சென்னை மாநகர மக்கள்- மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை காலமெல்லாம் வாழ்த்துவார்கள்.