முரசொலி தலையங்கம்

தமிழ்நாட்டைப் பிடிக்கவில்லை என்றால் போக வேண்டியதுதானே? : ஆளுநர் சர்ச்சை பேச்சிற்கு முரசொலி கண்டனம்!

எப்போது பார்த்தாலும் ஆரியம், திராவிடம், சனாதனம், வர்ணாசிரமம், திருவள்ளுவர், வள்ளலார் என்றுதானே பேசிக் கொண்டு இருந்தார். திடீரெனத் திருந்தி செயற்கை நுண்ணறிவு பற்றி எல்லாம் எப்போது படிக்க ஆரம்பித்தார்?

தமிழ்நாட்டைப் பிடிக்கவில்லை என்றால் போக வேண்டியதுதானே? : ஆளுநர் சர்ச்சை பேச்சிற்கு முரசொலி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

“நான் பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசினேன். அவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவை குறித்த அறிவுத் திறன் குறைவாக உள்ளது” - இப்படி தனது திருவாய் மலர்ந்துள்ளார் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி.

இவர் எதற்காக செயற்கை நுண்ணறிவு குறித்துக் கேட்கிறார். அவருக்குப் பிடித்த சனாதனம் பற்றிக் கேட்டிருக்கலாமே! மாணவர்கள் புட்டுப்புட்டு வைத்திருப்பார்களே! பத்துப் பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு 'திராவிட' வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் இவர், மாணவர்களிடம் 'திராவிடம்' பற்றிக் கேட்டிருக்கலாமே. தீர்க்கமாய் பதில் சொல்லி இருப்பார்களே மாணவர்கள்?

எப்போது பார்த்தாலும் ஆரியம், திராவிடம், சனாதனம், வர்ணாசிரமம், திருவள்ளுவர், வள்ளலார் என்றுதானே அவர் மேடைகளில் பேசிக் கொண்டு இருந்தார். திடீரெனத் திருந்தி செயற்கை நுண்ணறிவு பற்றி எல்லாம் எப்போது படிக்க ஆரம்பித்தார்?

‘சிவில்’ மாணவர்களிடம் போய் ரோபோடிக்ஸ் பற்றி கேட்டிருப்பாரோ என்னவோ? “நவீன தொழில் நுட்பத்தை பள்ளியிலேயே மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டு பாடத்திட்டத்தை தேசிய பாடத் திட்டத்துடன் ஒப்பிடும் போது தரம் குறைவாக உள்ளது” என்கிறார் ஆளுநர்.

என்ன தரம் குறைவாக இருக்கிறது என்பதை அவரால் சொல்ல முடியுமா? ஏதோ ஒரு பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழாவுக்கு கூப்பிட்டார்கள் என்பதற்காக அங்கே போய் நின்று கொண்டு தமிழ்நாட்டில் படிக்கும் லட்சக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரைக் கொச்சைப்படுத்துவதா?

இதற்கு தான் அவருக்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் தரப்படுகிறதா? தமிழ்நாட்டின் உயர்கல்வி எத்தகைய சிறப்பாக இருக்கிறது என்பதை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்களும், பள்ளிக் கல்விப் பாடத்திட்டங்கள் எவ்வளவு சிறப்பாக இருக்கின்றன என்பதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் நெஞ்சை நிமிர்த்தி பதில் சொல்லி இருக்கிறார்களே? அவர்களுக்கு ஆளுநரால் பதில் சொல்ல முடியுமா?

தமிழ்நாட்டைப் பிடிக்கவில்லை என்றால் போக வேண்டியதுதானே? : ஆளுநர் சர்ச்சை பேச்சிற்கு முரசொலி கண்டனம்!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 'கல்விதான் உங்களிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து' என்று சொல்லி தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறையையும், உயர் கல்வித் துறையையும் வளர்த்து வருகிறார் 'திராவிட மாடல்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதனைக் கொச்சைப்படுத்துவதற்காகவே இப்படிச் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர். இந்த ஆண்டு 7,60,606 மாணவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். இதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். மொத்தமுள்ள மேல்நிலைப்பள்ளிகள் 7532. இதில் 2478 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சிபெற்றுள்ளன. 26 ஆயிரத்து 352 மாணவ - மாணவியர் பல்வேறு பாடங்களில்100க்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது சாதாரண சாதனையல்ல.

ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்குள் 2022-ஆம் ஆண்டு 75 மாணவர்கள் சென்றனர். 2023-இல் அந்த எண்ணிக்கை 274 ஆனது. இந்த ஆண்டு அது இரண்டு மடங்காகி, 415 மாணவர்கள் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். கல்லூரிக்கு வரும் மாணவியர் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின் (AISHE) கூற்றுப்படி உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் (GER) 49 விழுக்காடு பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இது அகில இந்திய சராசரி சதவிகிதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் இருக்கின்றன. தமிழ்நாட்டை நோக்கி உலகப்புகழ் பெற்ற நிறுவனங்கள் வருவது, மிகச் சிறந்த அறிவுக்கூர்மையுள்ள இளைஞர்கள் இங்கு பணியாளர்களாகக் கிடைப்பது தான். இவை அனைத்தும் தமிழ்நாட்டின் கல்வித் துறை வளர்ச்சிக்கான சாட்சியங்கள்.

தமிழ்நாட்டைப் பிடிக்கவில்லை என்றால் போக வேண்டியதுதானே? : ஆளுநர் சர்ச்சை பேச்சிற்கு முரசொலி கண்டனம்!

ஒவ்வொரு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் Hi- tech labகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்வதற்கான நுழைவுத் தேர்வுகளின் பாடத் திட்டங்களும் மாதிரி வினா விடைகளும் அனிமேசனுடன் விளக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

3500-க்கும் மேற்பட்ட சிறந்த காணொலிகளாக இவை இருக்கின்றன.' நான் முதல்வன்' இணையதளம் வாயிலாக கடந்த 10 ஆண்டு கேள்வித் தாள்களும் ஆங்கிலம், தமிழ், இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இவை எல்லாம் ஆளுநருக்குத் தெரியுமா?

இவர் வந்த பிறகுதான் பல்கலைக் கழகங்கள் வளர்ந்ததைப் போலவும் இதற்காகவே மூன்று மாநாடு நடத்தியதாகவும் முன்பு ஒரு முறை பேசினார் ஆளுநர். மூன்று கூட்டம் நடத்தியதால்தான் எல்லாப் பல்கலைக் கழகமும் முன்னேறியதைப் போல அவராக கற்பனைத் தேரில் ஊர்வலம் வருகிறார்.

பாடத்திட்டத்தில் தரமில்லை, அதனால் வேலை கிடைக்காது' என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார் ஆளுநர். ஒரு நல்லரசு என்பது வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.' ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை' என்று பிரதமர் மோடி 'அல்வா' கொடுத்தார்.

அதுபோல இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருபவராக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் 31 லட்சம் பேர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் 9 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்துள்ளார் முதலமைச்சர்.

திறன்மிகு தொழிலாளர்கள் உள்ள மாநிலம், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் கொண்ட மாநிலம் என்று பல்வேறு சிறப்பம்சங்களை தமிழ்நாடு கொண்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்கள் திட்டத்தினை நிறுவியுள்ளன.

முதலமைச்சர், இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் ஆகிய உலகப் புகழ் பெற்ற நிறுவனங்கள் அவரை அழைத்து தங்கள் நிறுவனத்தை பார்வையிட வைத்துள்ளன. அங்கெல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். தமிழில் வரவேற்பைக் கொடுத்துள்ளார்கள்.

பாவம், ஆளுநருக்கு இதையெல்லாம் பார்த்து வயிறு எரிகிறது போலும்! தமிழ்நாட்டைப் பிடிக்கவில்லை என்றால் போக வேண்டியதுதானே? பீகாருக்கு! ஒரு மாத காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாலம் இடிந்துள்ளது. அதன் 'தரத்தை' தினந்தோறும் போய் மதிப்பிடலாமே?!

- முரசொலி தலையங்கம்!

banner

Related Stories

Related Stories