பாவம் ஜெயலலிதா!
முத்தமிழறிஞர் - தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவரது நூற்றாண்டை முன்னிட்டு 100 ரூபாய் நாணயத்தை ஒன்றிய அரசு வெளியிட்டது. வெளியிட ஆணையிட்டது ஒன்றிய அரசு என்பதால் ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை விழாவுக்கு அழைத்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் அன்றைய தினம் ஆற்றிய உரை என்பது கலைஞருக்கான புகழுரையாக இல்லாமல், கலைஞரது அரசியல் கொள்கைகளைப் போற்றும் உரையாக அமைந்திருந்தது. 'சம்பிரதாயத்துக்காக' அவர் உரையாற்றவில்லை.
கலைஞர் எந்தக் கருத்தியல்களுக்காக வாழ்நாள் முழுக்க பாடுபட்டாரோ அந்தக் கருத்தியலை 'எதிர்முகாமில்' இருக்கக் கூடிய ஒருவர் ஒப்புக்கொண்டு ஆற்றிய உரையாக அமைந்தது ராஜ்நாத் சிங் உரை.
மாற்றாரையும் மனமாற்ற வைக்கும் ஆற்றல் படைத்தவர் கலைஞர் அவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த விழா அமைந்திருந்தது. இதைப் பார்த்து வயிற்றெரிச்சல் அடைந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “எதற்காக ராஜ்நாத் சிங்கை அழைத்தார்கள்? நாங்கள் பா.ஜ.க. அணியில் இருந்த போதுகூட பா.ஜ.க. தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை.
பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் ரகசிய உறவு இருக்கிறது” என்று சொல்லி தனது குணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். பழனிசாமியும்தான் பிரதமர் மோடியை அழைத்தார். அவர் தான் வர மறுத்தார். இதை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி.
24.5.2017 அன்று அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரு பேட்டி அளித்- தார். “அம்மா படத்தை சட்டமன்றத்தில் திறக்கப் போகிறோம். அதை திறந்து வைக்கபாரதப் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். வருகிற டிசம்பர் மாதம் சென்னையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றேன்” என்று பேட்டி அளித்தார்.
இன்றும் அது சமூக வலைதளங்களில் இருக்கிறது, அன்றைய தினமே பிரதமர் நரேந்திர மோடிக்கு பழனிசாமி ஒரு கடிதம் அனுப்பினார். சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத்தை வைக்கப் போகிறோம், ஜூலை மாதத்தில் ஒருநாள் நீங்கள் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார் பழனிசாமி.
அவரை மதிக்கவில்லை பிரதமர் மோடி. வரவில்லை பிரதமர் மோடி. ‘ANY DAY' என்று சொல்லிக் கூட பார்த்தார் பழனிசாமி. ம்கூம் வரவில்லை. சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்கவும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொள்ளவும்தான் பிரதமர் மோடியை அழைத்தார் பழனிசாமி. 24.5.2017 ஆம் தேதியன்று தேதி கேட்டார்கள். அவர்கள் தரவில்லை.
காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்துவிட்டது. இறுதியாக எட்டு மாதம் கழித்துதான் பழனிசாமி விழா நடத்தினார். 13.2.2018 அன்று சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பு விழா நடந்தது. அன்றைய பேரவைத் தலைவர் தனபாலை வைத்து ஜெயலலிதா படத்தை திறந்து விட்டார் பழனிசாமி. இதில் சூடு பட்ட பழனிசாமி, எம்.ஜி.ஆர். நாணயம் வெளியீட்டு விழாவுக்கும் யாரையாவது வரவழைக்கப் பார்த்தார். ஆள் கிடைக்கவில்லை. அவரே நடத்தி விட்டார்.
2019 ஜனவரி 17 ஆம் தேதி எம்.ஜி.ஆர். நாணயத்தை பழனிசாமி வெளியிட பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார். அதைக்கூட பழனிசாமியால் இன்று வெளியில் சொல்ல முடியாது. இப்படிப்பட்டவருக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவைப் பார்த்தால் வயிறு எரியத்தான் செய்யும்?
“ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்த வக்கு இல்லாத பழனிசாமிக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?” என்று கேட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதற்கு பழனிசாமியால் பதில் சொல்ல முடியவில்லை.
தலைவர் கலைஞருக்கு எத்தனை நிகழ்வுகள் நடத்தப்பட்டன? அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட புகழஞ்சலி, தமிழ்நாடு தலைவர்கள் பங்கேற்ற புகழஞ்சலி, திரையுலகத்தினர் பங்கேற்ற புகழஞ்சலி, இலக்கிய ஆளுமைகள் பங்கேற்ற புகழஞ்சலி, பத்- திரிகையாளர்கள் பங்கேற்ற புகழஞ்சலி என்று தி.மு.க. தலைமைக் கழகம் நடத்தியது. அதன்பிறகு மருத்துவர்கள், நீதியரசர்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொறியாளர்கள், மகளிர், விளிம்பு நிலை மக்கள் என ஒவ்வொருவரும் தனித்தனியாக நடத்தினார்கள்.
முக்கிய நகரங்களில் தலைவர் கலைஞரின் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன. சென்னை கிண்டியில் மாபெரும் மருத்துவமனையும், மதுரையில் நூலகமும், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டது. இப்படி எதையும் பழனிசாமியால் பட்டியல் போடமுடியுமா?
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கூட அவிழ்க்காதவர் பழனிசாமி. ஆறுமுகச் சாமி ஆணையத்தை முடக்கி வைத்திருந்தவர்தான் பழனிசாமி. ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளைநடந்தது. கொலை நடந்தது. தற்கொலை நடந்தது. அதை மூடி மறைக்க முயற்சித்தவர் பழனிசாமி. இதுதான் ஜெயலலிதாவுக்கு பழனிசாமி செய்த சிறப்பு ஆகும். சொல்ல வெட்கமாக இல்லையா பழனிசாமிக்கு?
ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டை நினைவகம் ஆக்கிவிட்டதாக பொய் சொல்லி இருக்கிறார் பழனிசாமி. ஜெயலலிதா வீட்டை நினைவகம் ஆக்குவதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டே ( நவம்பர் 24) ரத்து செய்துவிட்டது. ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுதாரர்களுக்கு சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.
ஜெயலலிதாவை துளி கூட மதிக்கவில்லை பழனிசாமி என்பதற்கு இப்படி எத்தனையோ சொல்லலாம். 'அம்மா' வளர்த்தது எல்லாம் என்ன மாதிரியான ஆட்கள் என்று தெரிகிறதா?
- முரசொலி தலையங்கம்!