முரசொலி தலையங்கம்

ஆணவம் கண்ணை மறைக்கிறது : நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு பட்டியலில் சேர்ப்பது மாபெரும் அவமானம் அல்லவா?

தேர்தலில் நிற்காவிட்டால் என்ன, அவருக்குதான் ‘கோட்டா’ இருக்கிறதே? அந்த அடிப்படையில் நிரந்தர அமைச்சராகத் தொடர்கிறார்.

ஆணவம் கண்ணை மறைக்கிறது : நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு பட்டியலில் சேர்ப்பது மாபெரும் அவமானம் அல்லவா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (27-07-2024)

பொருளாதாரப் பூஜ்யம்!

ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் பூஜ்யம் என்பது மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரமே பூஜ்யம்தான் என்பதைத்தான் அந்த அறிக்கை உணர்த்துகிறது. ஆணவம் கண்ணை மறைக்க, அகங்காரம் வார்த்தையில் தெறிக்கச் செயல்படும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

‘நீங்கள் ஏன் தேர்தலில் நிற்கவில்லை?’ என்று கேட்டபோது, ‘என்னிடம் அந்தளவுக்குப் பணமில்லை’ என்று சொன்ன ஜனநாயகக் காப்பாளர்தான் நிர்மலா சீதாராமன். தேர்தலில் நிற்காவிட்டால் என்ன, அவருக்குதான் ‘கோட்டா’ இருக்கிறதே? அந்த அடிப்படையில் நிரந்தர அமைச்சராகத் தொடர்கிறார். அதுவும் இந்திய நாட்டின் நிதித்துறையையே கவனிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்து விடுகிறது.இதில் இவரை எல்லாம் தமிழ்நாடு பட்டியலில் சேர்ப்பது மாபெரும் அவமானம் அல்லவா?

“ஒன்றிய அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்தி உள்ளனர். உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில் இந்தியாவின் வளர்ச்சி ஒளிமயமாக உள்ளது. இந்தியாவின் பணவீக்கம் குறைவாகவே இருந்து வருகிறது” என்று முன்னுரை வாசிக்கிறார் நிர்மலா சீதாராமன். முதல் கோணல் முற்றும் கோணலாக அமைந்துள்ளது அவரது மொத்த உரையும்.

விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறது. ஒன்றிய அரசின் முதலீடுகளால் புதிதாக எந்த நிறுவனங்களும் உருவாக்கப்படவில்லை. தனியார் முதலீடுகளிலும் மந்த நிலைமை இருக்கிறது. இவை எதுவும் மாறுவதற்கான முன்னெடுப்புகள் இந்த நிதி நிலை அறிக்கையில் இல்லை. அதாவது, இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தும் புதிய பாணி எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் சொல்லப்படவில்லை.

பொய்யான புள்ளிவிபரங்களை அள்ளித் தெளித்து இந்தியப் பொருளாதாரம் வளர்வதைப் போன்ற மாயத் தோற்றத்தைக் காட்டுகிறார்கள். ஜி.டி.பி. குறித்த இவர்களது தரவுகளே மோசடிகள் ஆகும். 8.2 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்று சொல்வதும் மாயத்தோற்றமே.

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என்று சொன்னால் போதுமா? இந்த நான்கு தரப்பின் முன்னேற்றத்துக்கும் செய்து தரப்பட்ட திட்டங்கள் என்ன என்று சொல்ல வேண்டாமா?

‘அனைவருக்குமான பட்ஜெட்’ என்கிறார் பிரதமர். அவருக்கு இப்போது பீகாரும், ஆந்திராவும்தான் இந்தியா போலும். ஒரு காலத்தில் உ.பி.யும், குஜராத்தும் மட்டுமே இந்தியா என்று நினைத்தவர், இன்று நிறம் மாறி இருக்கிறார்.

ஆணவம் கண்ணை மறைக்கிறது : நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு பட்டியலில் சேர்ப்பது மாபெரும் அவமானம் அல்லவா?

நிதி ஆணையத்தின் மானியங்கள் படிப்படியாகக் குறைக்கப் பட்டுள்ளன. ரசாயன உர மானியமும், உணவு மானியமும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளும் ஏழை எளிய மக்களும் பாதிக்கப்படுவார்கள். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான நிதி குறைக்கப்பட்டதன் மூலம் கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது கல்வி, மருத்துவம், வேளாண்மை ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. இராணுவத்துக்கு 6.22 லட்சம் கோடி ரூபாய் என்பதும், மருத்துவத்துக்கு 89, 287 கோடி என்பதும் பா.ஜ.க. அரசின் சிந்தனை எந்த வகைப்பட்டது என்பதை உணர்த்தும். இராணுவத்தை விட கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை மூன்று மடங்கு குறைவானது.

9 துறைகளுக்கு முன்னுரிமை என்கிறார் நிதி அமைச்சர். விவசாயம், வேலைவாய்ப்பு, மனிதவளம், சமூகநீதி,சேவை, நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி, ஆராய்ச்சி -–- இப்படி வரிசைப்படுத்துகிறார். கேட்க நன்றாக இருக்கிறது. இதற்கான திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் என்ன? எவ்வளவு? என்பதைச் சொல்ல வேண்டாமா? இதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் குறைவு. புதிய திட்டங்கள் இல்லை.

‘அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்’ என்பது நிதி அமைச்சரின் ஒன்பதாவது இலக்கு. அதற்கான ஒரே ஒரு திட்டத்தையாவது சொல்லுங்கள். முடியுமா?

4 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் என்கிறது புதிய பட்ஜெட். ஆனால் 2014 ஆம் ஆண்டு சொன்ன 10 கோடி வேலை வாய்ப்புகள் என்ன ஆனது? இதுவரை பதில் இல்லை. ‘விவசாயிகளுக்கு விளைச்சல் செலவினத்தை விட 50 சதவிகிதம் கூடுதலாக குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம்’ என்று புதிய பட்ஜெட் சொல்கிறது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் அறிக்கையை பத்தாண்டுகளாக கிடப்பில் போட்ட பாவத்துக்கு இனியாவது பரிகாரம் காணப்படுமா?

அந்நியக் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுகிற வரியைக் கவனமாகக் குறைத்துள்ளார்கள். ஆனால் சிறுகுறு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. ரயில்வே துறைக்கு திட்டங்களே இல்லை. ‘அக்னி பாத்’ குறித்த அறிவிப்பு இல்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த நிலைப்பாடு இல்லை.

இந்திய நாட்டின் ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கான முயற்சியில் ஒரு துளியாவது அக்கறை இருந்ததா? விலைவாசியைக் குறைக்கும் திட்டம் இருக்கிறதா? உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்கும் திட்டம் சிந்திக்கப்பட்டுள்ளதா? புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதா?

ஏதுமில்லை. அதனால்தான் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை, இந்தியப் பொருளாதாரத்தை பூஜ்ய நிலைக்குக் கொண்டு போய் நிறுத்திவிடும் ஆபத்து கொண்டது ஆகும்.

banner

Related Stories

Related Stories