முரசொலி தலையங்கம் (10-05-2024)
அவராக வந்து மாட்டிக் கொண்டார்!
பிரச்சினையின் மையப் புள்ளிக்கு மோடி, அவராகவே வந்து மாட்டிக் கொண்டார்!
“நாளை காலை மிகப்பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள். அதில் இருந்து தப்பி விடுங்கள்” என்று மன்னரிடம் சொன்னாராம் அவரது ஆலோசகர். அதில் இருந்து தப்புவது எப்படி என்று சிந்தித்த மன்னர், அரண்மனையில் இருக்கும் குதிரைகளில் அதிவேகமாக ஓடும் குதிரை ஒன்றை அழைத்து வரச் சொன்னார். அதில் ஏறினார். அதனை இயக்கினார். 24 மணி நேரம் எங்குமே நிற்காமல் காடுகள், மலைகள் தாண்டி ஓடியது குதிரை.
ஓடிய குதிரையை விட, அதன் மேல் அமர்ந்திருந்த மன்னன் களைத்துப் போனான். ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி ஒரு பாறைக்கு அருகில் போய் குதிரை நின்றது. அதிலிருந்து மெல்ல இறங்கி, அந்தப் பாறையில் உட்கார்ந்தார் மன்னர்.
அப்போது அவர் தோளின் மீது ஒரு கை தொட்டதாம். “சபாஷ்! நீங்கள் இந்த இடத்துக்கு வருவீர்கள் என்றுதான் நான் காத்திருந்தேன்!” என்று சொன்னதாம் அந்தப் பிரச்சினை!
ரஜனீஷ் சொன்ன கதைகளில் ஒன்று இது. பிரச்சினையில் இருந்து தப்பிக்க நினைத்தாலும் அதே பிரச்சினையில் இருந்து மாட்டிக் கொள்ளத்தான் வேண்டும். ‘அதானி’ பிரச்சினைகளில் இருந்து மூன்று கட்டத் தேர்தலாகத் தப்பிக்க நினைத்தார் மோடி. நான்காம் கட்டத் தேர்தலில் அவராக வந்து மாட்டிக் கொண்டார் மோடி.
“அம்பானி, அதானி குறித்து திடீர் மவுனம் ஏன்?” என்று ராகுல் காந்தியைப் பார்த்து பிரதமர் மோடி கேட்டிருக்கிறார். பிரதமரை, ராகுல் வர வைக்க நினைத்த இடம் இதுதான். தெலுங்கானா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பல ஆண்டுகளாக காங்கிரஸ் இளவரசர் 5 தொழிலதிபர்களைப் பற்றிப் பேசினார். பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி மட்டும் பேசத் தொடங்கினார், இப்போது அவர்கள் பற்றியும் பேசாமல் திடீர் மவுனம் காத்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ராகுல் காந்தி மற்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அம்பானி மற்றும் அதானி பற்றி அவதூறு பேசுவதை நிறுத்தி விட்டனர். ஏன்? நான் காங்கிரஸ் இளவரசரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.
அம்பானி, அதானியிடமிருந்து நீங்கள் எவ்வளவு பணம் பெற்றீர்கள்? நடைபெறும் தேர்தலுக்காக அவர்களிடமிருந்து காங்கிரஸ் கட்சி எவ்வளவு நிதி பெற்றது? எத்தனை வாகனங்களில் பணத்தைப் பெற்றது? ஏதோ ஒன்று நடந்திருப்பதாக நான் உணர்கிறேன். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தேசத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று பேசினார்.
அதானிகள் பற்றியும், சில குறிப்பிட்ட தொழிலதிபர்கள் குறித்தும் ராகுல் காந்தி பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அதாவது, குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்குச் சாதகமாக அரசு நடத்துகிறார் மோடி என்பதுதான் இதன் உள்ளடக்கம் ஆகும். இதனை நாடாளுமன்றத்தில் ஒரு முறை துல்லியமான தாக்குதல் நடத்தினார் ராகுல் காந்தி.
7.2.2023 அன்று அதானியும் மோடியும் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி நாடாளுமன்றத்தில் ராகுல் கடுமையாக விமர்சித்தார்.
“2014 ஆம் ஆண்டு 8 பில்லியன் டாலராக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இப்போது 140 பில்லியன் ஆனது எப்படி? 2014 ஆம் ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 609 ஆவது இடத்தில் இருந்தவர், 2022ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தது எப்படி? விமான நிலையம் என்றாலும் அதானிதான்.
துறைமுகம் என்றாலும் அதானிதான். முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ள இயலாது என்ற விதியைத் திருத்தினார்கள். அதானிக்கு 6 விமான நிலையங்கள் தரப்பட்டன. இஸ்ரேலுக்கு பிரதமர் செல்கிறார். அவருக்குப் பின்னாலேயே நடந்து அதானி செல்கிறார். உடனே இஸ்ரேல் இந்தியா இடையிலான அனைத்து தொழில்துறை ஒப்பந்தங்களும் அதானிக்கு வந்து விடுகிறது. இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் செல்கிறார். உடனே மாயமந்திரமாக எஸ்.பி.ஐ. வங்கி அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்குகிறது.
வங்கதேசத்திற்கு மோடி முதல் முறையாகச் செல்கிறார். அங்கு மின் விநியோகத்திற்கான திட்டம் முடிவாகிறது. சில நாட்களுக்குப் பின் வங்கதேசத்தின் மின்வாரியம் 25 ஆண்டுகளுக்கு மின் விநியோக உரிமையை அதானிக்கு வழங்குகிறது. 1500 மெகாவாட் மின்சார ஒப்பந்தம் அதானிக்குக் கிடைக்கிறது. இதுதான் உங்கள் வெளியுறவுக் கொள்கை” – என்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
அப்போதெல்லாம் பதில் சொல்லாத பிரதமர் மோடி, இப்போது நான்காம் கட்டத் தேர்தல் நேரத்தில் பதில் சொல்லப் பாய்ந்தது ஏன்?
மோடியின் கேள்விகளுக்கு சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ மூலம் பதிலளித்திருக்கிறார் ராகுல் காந்தி..
“மோடி அவர்களே பயந்துவிட்டீர்களா... அதானியும், அம்பானியும் உங்களுக்கு டெம்போவில் பணம் நிரப்பித் தருகிறார்களா... இது உங்களின் சொந்த அனுபவமா... பா.ஜ.கவின் ஊழல் டெம்போவின் ‘ஓட்டுநர்’ மற்றும் ‘உதவியாளர்’ யார் என்பது நாட்டுக்கே தெரியும். ஒன்று செய்யுங்கள், அவர்களுக்கு சி.பி.ஐ., அமலாக்கத் துறையை அனுப்பி விசாரணை மேற்கொள்ளுங்கள், அச்சப்பட வேண்டாம்” என்று ராகுல் காந்தி சவால் விடுத்திருக்கிறார்.
மோடி சொல்வதைப் போல அதானி பெயரை ராகுல் சொல்வதைத் தவிர்க்கவில்லை. “2024ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது 103 முறை அதானி பெயரையும் அம்பானி பெயரை 30 முறையும் குறிப்பிட்டுள்ளார்.” என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெயராம் ரமேஷ் சொல்லி இருக்கிறார்.
இருவர் சேர்ந்து, இருவருக்காக அரசை நடத்துகிறார்கள். ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ என்பதுதான் பா.ஜ.க. ஆட்சியின் பாணி என்பதை ராகுல் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆம்! என்பதைத்தான் மோடியின் தெலுங்கானா உரை காட்டுகிறது. பிரச்சினையின் மையப்புள்ளிக்குள் அவரே வந்து மாட்டிக் கொண்டார். சபாஷ்!