முரசொலி தலையங்கம் (03-05-2024)
மணிப்பூர் குற்றப்பத்திரிக்கை
மனிதம் கொல்லப்பட்ட மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் மோடி போகவே இல்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரே ஒரு தடவை போனார். இதுதான் மக்களைக் காக்கும் அவர்களது லட்சணம் ஆகும்.
மிகச் சரியாக ஓராண்டு ஆகிவிட்டது, மணிப்பூர் பற்றி எரியத் தொடங்கி. இன்று வரை நிலைமை மாறவில்லை. மாறாததற்கு என்ன காரணம்? யார் உண்மையான காரணமோ, அந்தக் காரணத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
யார் காரணம்? ‘மணிப்பூர் காவல் துறையே காரணம்’ என்று குற்றப்பத்திரிக்கையை வாசித்துவிட்டது சி.பி.ஐ. நேற்றைய தினம் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை, மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, ஒன்றிய பா.ஜ.க. அரசு, குறிப்பாக உள்துறை அமைச்சகத்தை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. ஆனால் அவர்களுக்கு இதெல்லாம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. 2023 ஆம் ஆண்டு மே4 ஆம் தேதி அந்த மாநிலத்தில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் இரண்டு குகி சமுதாயப் பெண்கள் நிர்வாணப்படுத்தப் பட்டார்கள். அவர்களை நிர்வாணமாக்கி கலவரக்காரர்கள் அழைத்து வந்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதனை வேடிக்கை பார்த்தார்கள். படம் பிடித்தார்கள். அதை பொதுவெளியில் வெளியிட்டார்கள். இவை அனைத்தையும் மணிப்பூர் பா.ஜ.க. அரசு வேடிக்கை பார்த்தது. உலகமே கண்டித்த கொடூரமான சம்பவம் இது.
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. அசாம் மாநிலத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலம் குவாஹாட்டி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் குற்றப்பத்திரிக்கை சொல்வது என்ன தெரியுமா? கலவரக்காரர்களை விட மணிப்பூர் மாநிலக் காவல்துறையினர் கொடூரமாக நடந்துள்ளனர். இரக்கமற்று நடந்து கொண்டுள்ளனர்.
“அந்த இரண்டு பெண்களை ஆயுதம் தாங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரட்டி வந்தார்கள். அந்தப் பெண்கள் இருவரும் தப்பித்து காட்டுக்குள் ஓடினார்கள். சாலையோரத்தில் ஒரு காவல் துறை வாகனம் நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அதற்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். அந்த வாகனத்தில் ஓட்டுநர் இருந்தார். காவல் துறை அதிகாரிகள் இருவர் உள்ளே உட்கார்ந்து இருந்தார்கள். நான்கைந்து காவலர்கள் அந்த வாகனத்துக்கு அருகில் நின்று கொண்டு இருந்தார்கள்.
அந்த இரண்டு பெண்களோடு, ஆண் ஒருவரும் ஓடி வந்தார். தங்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு போய்விடுங்கள் என்று அந்த ஆண், காவலர்களிடம் கெஞ்சினார். ஆனால் காவலர்கள், ‘இந்த வாகனத்தில் சாவி இல்லை’ என்று சொல்லி விட்டார்கள். அந்தப் பெண்களைக் காப்பாற்ற காவலர்கள் மறுத்துவிட்டனர்.
அதற்குள் கலவரக்காரர்கள் அந்த வாகனத்தைச் சூழ்ந்து விட்டார்கள். உடனடியாக காவலர்கள் அனைவரும் ஓடி விட்டார்கள். வாகனத்துக்குள் இருந்த இரண்டு பெண்களையும் கலவரக்காரர்கள் வெளியில் இழுத்து வந்தார்கள். நிர்வாணப் படுத்தினார்கள். ஊர்வலமாக அழைத்து வந்தார்கள். பாலியல் வன்கொடுமை செய்தார்கள்” -– என்கிறது சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை.
பா.ஜ.க. ஆட்சி எத்தகையது என்பதற்கு உதாரணம் இந்தச் சம்பவம். ஆளும் பா.ஜ.க. அரசின் முதலமைச்சர் பிரேன்சிங் மீது இதுவரை சிறு நடவடிக்கைகூட எடுக்கவில்லை பா.ஜ.க. தலைமை. ‘இந்தியாவின் அனைத்துக் குடும்பத்தினரும் மோடியின் குடும்பம்’ என்று சொன்னாரே! அவரது குடும்பத்தில் இந்த மணிப்பூர் பெண்கள் இருவரும் இல்லையா? பா.ஜ.க. ஆட்சியை, அதன் முதலமைச்சரைக் காப்பாற்றுவதில்தான் கவனமாக இருந்தார்களே தவிர, மணிப்பூர் பெண்களைக் காத்தார்களா? முன் காப்பாற்ற முடியவில்லை என்றாலும், பின்னராவது அந்த மாநில பா.ஜ.க. அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இல்லை. எதுவுமில்லை.
மே மாதம் இந்தக் கொடூரம் நடந்தது. நாடு முழுவதும் பா.ஜ.க. அரசு தலைகுனிந்து நின்றது. அப்போது மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் பேட்டியை தமிழ்நாட்டில் ஒரு நாளிதழ் மிகப்பெரிய அளவில் வெளியிட்டது. குக்கி இனப் பெண்களை ஆடை களைந்து ஒரு கும்பல் இழுத்து வரும் காட்சி சமூக வலைத் தளங்களில் பரவிய பிறகு, ‘இது போல நிறைய நடந்துள்ளதே’ என்று சொன்னவர்தான் இந்த பிரேன் சிங். மே மாதம்
4 ஆம் தேதி நடந்த கொடூரத்துக்குக் காரணமானவர்களை சூலை மாதம் 18 ஆம் தேதிக்கு மேல் கைது செய்கிறார் பா.ஜ.க. முதலமைச்சர். அந்த வீடியோ காட்சிகள் பொதுவெளியில் வெளியான பிறகுதான் இந்த கைது நடவடிக்கை நாடகத்தையே அவர் நடத்தினார்.
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்திக்க டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் போகப் போவதாகச் சொன்னதும் தடுத்தவர் இந்த பிரேன் சிங். தடையை மீறி மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றார் ஸ்வாதி.
“வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரண்டு பெண்களின் குடும்பங்களை நான் சந்தித்தேன். இதுவரை யாரும் அவர்களைச் சந்திக்க வரவில்லை. மணிப்பூரில் நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லப்பட்ட இரண்டு பெண்களுக்கும் அரசிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை; இழப்பீடும் வழங்கப்படவில்லை.” என்று ஸ்வாதி சொன்னார்.
“இன்றுவரை முதலமைச்சர் பிரேன் சிங்கோ அல்லது எந்த கேபினட் அமைச்சரோ அல்லது மூத்த மாநில அரசாங்க அதிகாரியோ அவர்களைச் சந்திக்கவில்லை” என்று அந்த இரண்டு பெண்களும் சொன்னார்கள்.
இப்போது சொல்லுங்கள், குற்றப்பத்திரிக்கையை யார் மீது தாக்கல் செய்ய வேண்டும்!? யார் குற்றவாளிகள்? அந்த காவலர்கள் மட்டும்தானா? கைகட்டி வேடிக்கை பார்த்த மணிப்பூர் மாநில அரசும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளிகள் அல்லவா? பா.ஜ.க. முதலமைச்சர் பிரேன் சிங்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டாமா?