முரசொலி தலையங்கம்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு PRO பிரதமர் மோடி : முரசொலி!

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது அது மக்கள் மத்தியில் மாபெரும் அலையாகக் கிளம்பியது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு PRO பிரதமர் மோடி : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (30-04-2024)

காங்கிரஸ் அறிக்கையும் பா.ஜ.க. அறிக்கையும்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு பி.ஆர்.ஓ.வாக பிரதமர் கிடைத்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றிதான். தான் போகுமிடமெல்லாம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பற்றி மட்டுமே பேசி அதனைப் பரப்பி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழு, காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை அனைத்து மாநிலச் சிந்தனைகளையும் உள்ளடக்கிய இந்திய அறிக்கையாக அமைந்திருந்தது. பத்தாண்டு காலமாக பா.ஜ.க. ஆட்சியானது பாழ்படுத்திய இந்தியாவை மீட்டெடுக்கும் அறிக்கையாக அது அமைந்திருந்தது.

நீட் தேர்வு கட்டாயமில்லை. பா.ஜ.க.வின் ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய சட்டம் கொண்டுவரப்படும். திட்டக்குழு மீண்டும் கொண்டு வரப்படும். பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஆய்வு செய்யப்படும். செஸ் வரி வசூலில் மாநில அரசுகளை ஏமாற்றும் பா.ஜ.க.வின் சட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். தனிநபர் வருமான வரி ஒரே விதமாக நிலையாக இருக்கும். விவசாய இடுபொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இருக்காது.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். சாதி வாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும். ஒரே நாடு – ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படாது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோருக்கான காலிப் பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். புதுச்சேரிக்கும், ஜம்மு காஷ்மீருக்கும் மாநில அந்தஸ்து தரப்படும் - என்பது போன்ற கொள்கை முடிவுகளைக் கொண்ட அறிக்கை காங்கிரஸ் கட்சியின் அறிக்கை.

100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும். மாணவர் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். விவசாயத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் தரப்படும். மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்.

பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்லை தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் கொண்டு வரப்படும். ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை மீண்டும் தரப்படும். மீனவர்களுக்கு மீண்டும் டீசல் மானியம் வழங்கப்படும்- என்பது போன்று ஒவ்வொரு மக்களுக்கும் தேவையானதைத் தரத் தயாராக இருக்கிறோம் என்று காங்கிரஸ் கட்சி சொன்னது.

இந்த அறிக்கை வெளியானதும் பா.ஜ.க., காற்று இறங்கியது. பிரதமர் மோடியின் முகத்தில் களை குறைந்தது. இதற்கு எதிராக அவரால் ஏதும் சொல்ல முடியவில்லை. ஆத்திரம் கண்ணை மறைத்தது. ‘இது முஸ்லீம் லீக் அறிக்கை போல இருக்கிறது’ என்றார். இசுலாமியர் எண்ணங்களையும் உள்ளடக்கியதாக அந்த அறிக்கை அமைந்திருந்ததில் என்ன தவறு இருக்க முடியும்? ‘நகர்ப்புற நக்சல் சிந்தனை அதில் இருக்கிறது’ என்று இன்னொரு கூட்டத்தில் சொன்னார் பிரதமர்.

ஆத்திரம் அதிகம் ஆனதும். அந்த அறிக்கையில் இல்லாததை எல்லாம் இருப்பதைப் போல கற்பனை செய்து பரப்ப ஆரம்பித்தார். ‘உங்களது சொத்துகளைப் பறித்து இசுலாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு கொடுத்து விடுவார்கள்’ என்று சொன்னார். அந்த மாதிரி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எங்கும் இல்லை.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு PRO பிரதமர் மோடி : முரசொலி!

“காங்கிரஸ் – இந்தியா கூட்டணி பதவிக்கு மீண்டும் வந்தால், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி,. என்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் போன்றோருக்குரிய இட ஒதுக்கீட்டையே ஒழித்து அழித்துவிடுவார்கள்; மத அடிப்படையையே புகுத்துவார்கள்’’ என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருப்பதாகச் சொல்லத் தொடங்கினார். அந்த மாதிரியான எந்த வாக்குறுதியும் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இல்லை.

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது அது மக்கள் மத்தியில் மாபெரும் அலையாகக் கிளம்பியது. அந்த அலையை அப்படியே வைத்திருக்க பிரதமர் மோடி தான் தினமும் தன்னால் ஆனதைச் செய்து கொண்டிருக்கிறார். அதனால் தான் காங்கிரஸ் தலைவர் கார்கேவும்,

தேர்தல் அறிக்கையை தயாரித்த ப.சிதம்பரமும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சி அறிக்கை பற்றிய விளக்கங்களை அளிக்க மோடியிடம் நேரம் கேட்டுள்ளார் கார்கே. இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியால் திட்டமிடப்படாமல் நடக்கும் செயல்கள் ஆகும்.

பிரதமர் மோடி, தனது பேச்சில் செயலில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை பரபரப்பாக்க முயற்சித்தாரா என்றால் இல்லை. பத்தாண்டு காலம் எந்த சாதனையையும் செய்யாமல் வீணடித்த கட்சி பா.ஜ.க. என்பதால், அவர்களுக்கு எதிர்காலக் கனவுகளும் இல்லை. தொலைநோக்குச் சிந்தனையும் இல்லை.

* பொதுசிவில் சட்டம் கொண்டு வருவோம்.

* ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வருவோம் – இவைதான் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையின் இரண்டு முக்கியமான கொள்கை பிரகடனங்கள். ராமர் கோவில் சொன்னார்கள். கட்டியாச்சு. காஷ்மீர் என்றார்கள். அதை சிதைத்தாச்சு. இனிச் செய்ய ஏதுமில்லை. அதனால்தான் தனது சொந்தக் கட்சி தேர்தல் அறிக்கையைப் பற்றிப் பேசாமல் காங்கிரஸ் கட்சி அறிக்கையை பேசிக் கொண்டிருக்கிறார் பிரதமர்.

பேசட்டும். இவ்வளவு காஸ்ட்லியான பி.ஆர்.ஓ. யாருக்கு ஓசியில் கிடைப்பார்? அதுவும் காங்கிரஸ் கட்சிக்கு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில்..

banner

Related Stories

Related Stories