முரசொலி தலையங்கம்

இந்திய அன்னை மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார் என்பதை எப்படி கண்டுபிடிப்பார்? : மோடிக்கு முரசொலி கேள்வி!

இந்திய அன்னை மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார் என்பதை எப்படி அவர் கண்டுபிடிப்பார்?

இந்திய அன்னை மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார் என்பதை எப்படி கண்டுபிடிப்பார்? : மோடிக்கு முரசொலி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (13-04-2024)

அதை எப்படிக் கண்டுபிடிப்பார் ?

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இன்னமும் ஆதரித்துப் பேசி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்திய அன்னை மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவர்க்கும் குடியுரிமை கிடைக்கும்” என்று பேசி இருக்கிறார் பிரதமர். இந்திய அன்னை மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார் என்பதை எப்படி அவர் கண்டுபிடிப்பார்? அதற்கு அளவுகோல் என்ன? எப்படித் தெரியும்? குடியுரிமை வாங்கும் போது ஒருவருக்கு இந்திய அன்னை மீது நம்பிக்கை இருக்கிறது. குடியுரிமை கிடைத்ததும், அது போய்விட்டது. அப்புறம் என்ன செய்வதாகத் திட்டம்?

இசுலாமியர்களையும்

இலங்கைத் தமிழர்களையும் கைவிடும் சட்டம்தான் பா.ஜ.க.வின் இந்த குடியுரிமைச் சட்டம். அப்படியானால் அந்த இருவரும் இந்திய அன்னையின் மீது நம்பிக்கை இல்லாதவர்களா?

இந்தியாவுக்குள் யார் எல்லாம் வரலாம், வந்தால் யாருக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்படும் என்று இந்த சட்டம் வரையறுக்கிறது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம் என்கிறார்கள். அனைவரும் வரலாம் என்று சொல்லவில்லை. அந்த நாட்டைச் சேர்ந்த இசுலாமியர்கள் நீங்கலாக மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம் என்கிறார்கள். இசுலாமியச் சிறுபான்மையினரை எதற்காகப் புறக்கணிக்க வேண்டும்? பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அந்த நாட்டில் இருந்து வாழ முடியாமல் வருகிறார்களா? அல்லது ‘இந்திய அன்னை மீது நம்பிக்கை வைத்து வருகிறார்களா?’ அந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த இசுலாமியர் நீங்கலாக மற்றவர்கள், இந்திய அன்னை மீது நம்பிக்கை வைத்தவர்கள் என எப்படிக் கண்டுபிடித்தார்? எப்படிக் கண்டுபிடிப்பார்?

பாகிஸ்தானில் இருந்தும், வங்க தேசத்தில் இருந்தும், ஆப்கானிஸ்தானத்தில் இருந்தும் இசுலாமியர் நீங்கலான மற்ற மதத்தவர்கள் வரலாம் என்றால் அண்டைநாடான இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருவதற்குத் தடை விதித்தது ஏன்? இதுதான் ஈழத்தமிழர்க்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். இலங்கைத் தமிழர்க்கு இந்திய அன்னை மீது பாசம் இருக்காது என்பதை எப்படிக் கண்டுபிடித்தார்? எப்படிக் கண்டுபிடிப்பார்?

ஈழத்தமிழர்கள் அந்த நாட்டில் வாழ முடியாமல் தமிழ்நாடு தப்பிவந்து முகாம்களிலும் வெளியிலும் வாழ்ந்து வருகிறார்கள். 1980ஆம் ஆண்டு முதல் அவர்கள் அபலைகளாக தமிழ்நாட்டில் வந்து தங்கி இருக்கிறார்கள். அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறோம் என்றால் இலங்கை அண்டை நாடு அல்லவா? மற்ற அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் வரலாம் என்றால், ஈழத்தில் இருக்கும் தமிழர்களை இந்துக்களாக இந்த ஒன்றிய அரசு நினைக்கவில்லையா? இந்துக்களான அவர்களுக்கு இந்திய அன்னையின்மீது நம்பிக்கை இருக்காது என்று நினைக்கிறாரா?

2019 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் ‘குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019’ ஆகும். சுருக்கமாக சி.ஏ.ஏ. அதற்கு 2024ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடுகிறது பா.ஜ.க. ஐந்து ஆண்டுகள் ஏன் ஆனது? எதற்காக அது அமுக்கி வைக்கப்பட்டு இருந்தது? மக்களின் எதிர்ப்பு காரணமாக அமுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இப்போது தேர்தல் வரப் போவதால் - அதைக் கையில் எடுப்பதன் மூலமாக வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்தப் பார்க்கிறது பா.ஜ.க. அதுவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் அதற்கு கிளர்ச்சி ஏற்படுத்தும் விளக்கங்களைக் கொடுப்பதன் மூலமாக அந்தச் சட்டத்தை வைத்துக் குளிர் காயலாமா என்று பார்க்கிறார் பிரதமர்.

இந்திய அன்னை மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார் என்பதை எப்படி கண்டுபிடிப்பார்? : மோடிக்கு முரசொலி கேள்வி!

ஒன்றிய அரசு இப்படி ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்ததும், பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த ஈழ அகதிகள், “எங்களுக்கு இந்தியக் குடியுரிமை தராவிட்டால் கடலில் கொண்டுபோய் தள்ளிவிடுங்கள்” என்று பேட்டி அளித்தார்கள். இவர்களை நிராகரிப்பது ஏன்?

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த ஈழ அகதி மாணவர் ஒருவர், “எனக்கு இந்தியக் குடியுரிமை தராவிட்டால், கருணைக்கொலை செய்துவிடுங்கள்” என்று சொன்னார். இவர்களை என்ன அளவுகோல் வைத்து நிராகரிக்கிறார் பிரதமர்?

குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா குறித்து மாநிலங்களவையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அவர்கள், “இலங்கைத் தமிழர்கள் சுமார் 4,61,000 பேருக்கு முதலில் குடியுரிமை வழங்கப்பட்டது” என்றும், பிறகு, “ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 75 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது” என்றும் குறிப்பிட்டார். இது முழுக்க முழுக்க தவறான தகவல். அவர் சொல்வது, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வேலைக்குச் சென்ற வம்சாவளித் தமிழர்கள். அதாவது இந்தியத் தமிழர்களுக்கு இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டபோது அன்றைக்குப் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் அன்றைய இலங்கை பிரதமர் சிரிமாவோவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக வழங்கப்பட்ட குடியுரிமை ஆகும். சுமார் 5 லட்சம் பேருக்கு அப்போது குடியுரிமை வழங்கப்பட்டது.

1974ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது இந்தியத் தமிழர்கள் 75 ஆயிரம் பேருக்கு குடியுரிமை தரப்பட்டது. இவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வேலைக்காக இலங்கை சென்ற இந்தியத் தமிழர்கள்.

ஆனால் நாம் இப்போது குடியுரிமை கேட்பது ஈழத்தமிழர்கள் ஈழத்தை தாயகமாகக் கொண்டவர்கள். சிங்கள இனவாதத்தால் வாழ முடியாமல் அகதிகளாக இங்கு வந்து தங்கியிருக்கும் நம் தொப்பூள் கொடி உறவுகளுக்குத்தான் நாம் குடியுரிமை கேட்கிறோம். அவர்களை மறுத்தது ஏன் என்பது பா.ஜ.க.வை நோக்கி தமிழ்நாடு கேட்கும் கேள்வி ஆகும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் சில கேள்விகள், இந்திய மண்ணில் காலம் காலமாக வாழும் இந்திய அன்னையின் மக்களையே இந்திய மண்ணில் குடியுரிமை அற்றவர்களாக ஆக்கும் சட்டம் ஆகும். அதனால்தான் அதனை இந்திய அன்னையின் புதல்வர்கள் அனைவரும் எதிர்த்தாக வேண்டும்.

banner

Related Stories

Related Stories