சதிகளை வெல்லும் சாதுர்யங்கள் - 2
‘சாதுர்யம் இருந்தால் சாதித்துக் கொள்ளலாம்' என்று வழிகாட்டு கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் தனது கடமையை முதலில் செய்து விட்டு அடுத்தவருக்கு அறிவுரை வழங்கட்டும். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வாக்குறுதி கொடுத்த நிதியை ஒன்றிய அரசு தரவில்லை. அதற்கான காரணத்தை அவரால் சொல்ல முடியவில்லை. மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டங்களில் ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசும், மாநில அரசும் 50 : 50 விழுக்காடு பங்கிட்டுத் தர வேண்டும்.
மெட்ரோ இரண்டாம் கட்டப் பணி என்பது ரூ.63 ஆயிரம் கோடி செலவாகும். பா.ஜ.க. அரசு இதற்குப் பணம் ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்து கடிதம் மேல் கடிதம் அனுப்பி விட்டார். அதற்கு இதுவரை ஒப்புதல் வரவில்லை. மாநில அரசு செலவு செய்வதற்கான நிதியைத் திரட்ட பன்னாட்டு கடனுதவி பெறுவதற்கும் அனுமதி தரவில்லை. மாநில அரசு இந்த ஆண்டு ரூ.9 ஆயிரம் கோடியை ஒதுக்கி இருக்கிறது.
ஒன்றிய நிதி வரவில்லை என்றால் இந்தத் திட்டத்தை முழுமையாக மாநில அரசின் நிதியில் இருந்துதான் செயல்படுத்த வேண்டும். ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடியை இதற்காக ஒதுக்கினால்தான் மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தை செயல்படுத்தி முடிக்க முடியும். நிதித்துறையை கையில் வைத்திருக்கும் நிர்மலா சீதாராமன் இதற்குப் பதில் சொல்லி இருக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரி இழப்பீடு நிறுத்தப்பட்டதால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி இழப்பு ஏற்பட்டதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இது பற்றிக் கேட்டால், 'சட்டத்தில் இடமில்லை’ என்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஐந்து ஆண்டுகள் தான் இழப்பீடு தருவதாக சட்டத்தில் இருக்கிறதாம். அந்தச் சட்டத்தை யார் போட்டது? இதே பா.ஜ.க. தான்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநிலங்கள் பாதிப்பு அடைகின்றன என்பதை உணர்ந்துதானே இழப்பீடு கொடுக்க ஒப்புக் கொண்டீர்கள். அப்படியானால் அந்த இழப்பீட்டை தொடர்ந்து கொடுப்பதுதானே சரியானதாக இருக்கும். ‘சட்டம் இடமளிக்கவில்லை' என்று சொல்லும் அமைச்சர், அந்தச் சட்டத்தை மாற்றலாமே!
தமிழ்நாடு ஒரு ரூபாய் கொடுத்தால், 29 பைசா தான் திருப்பித் தரப்படுகிறது என்பது நமது குற்றச்சாட்டு. அது தொடர்பாக அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நிருபர் கேட்கிறார். புள்ளிவிபரப் புலியான அமைச்சர் தன்னிடம் இருக்கும் கோப்புகளை வைத்து இதனை மறுத்திருக்க வேண்டும். ‘1 ரூபாய் வாங்கிவிட்டு, அதைவிட அதிகமாகத் தருகிறோம்' என்பதை நிரூபித்துச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் பொத்தாம் பொதுவாக, 'தமிழகத்திற்கு அதனிடம் கிடைக்கும் வருவாயைவிட அதிகமாகத் தான் கொடுத்திருக்கிறோம்' என்று பதில் சொல்கிறார். அதிகமாகக் கொடுத்திருக்கிறோம் என்றால் எவ்வளவு? அது அமைச்சருக்குத் தெரியாதா? கேட்டுச் சொல்ல வேண்டியது தானே?
ஜி.எஸ்.டி. இழப்பீடாக 2017 இல் ரூ.632 கோடியும், 2018 இல் ரூ.3,151 கோடியும், 2019 இல் ரூ.8,922 கோடியும், 2020 இல் ரூ.11,141 கோடியும், 2021இல் ரூ.6,696 கோடியும், 2022இல் ரூ.16,214 கோடியும், 2023 இல் ரூ. 3, 532 கோடியும் தந்ததாகப் புள்ளி விபரம் சொல்லும் ஒன்றிய அமைச்சர் தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு பணம் கொடுத்துள்ளது என்பதை ஏன் சொல்லவில்லை?
"மாநிலங்களின் நிதி உரிமையை - வலிமையைப் பறிப்பது என்பது அதன் ஆக்ஸிஜனை நிறுத்துவது ஆகும். அதனைத் தான் பா.ஜ.க. அரசு செய்து வருகிறது” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்வது தானே முழு உண்மை.
மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது கேரள மாநில அரசு. அதற்கு தமிழ்நாடு அரசும் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று மாண்புமிகு பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதி இருந்தார். இதே கோரிக்கையை முன் வைத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் டெல்லிக்குப் போய் போராட்டமே நடத்தி இருக்கிறார்கள்.
ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியை தர மறுப்பதால்தான் கடன் வாங்க வேண்டிய சூழல் மாநில அரசுக்கு இருக்கிறது. ஆனால், மாநிலங்கள் கடன் வாங்குவதில் கூட தடையை ஏற்படுத்துகிறார்கள். மாநிலங்களின் பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது ஆகும்.
மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த, இந்திய அரசமைப்பின் 293-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இந்தப் பிரிவின்படி, மாநிலங்கள் கடன் வாங்க ஒன்றிய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பதே மாநில சுயாட்சிக்கு எதிரானது ஆகும். 'மாநில சுயாட்சி' என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர் அவர். அவருக்கெல்லாம் அரசியல் மாண்புகள் தெரியாது. புரியாது.
தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும் பேட்டிகளை நிர்மலா சீதாராமன் வாரி வழங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர் தமிழ்நாட்டில் போட்டியிடப் போவதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்கள் அவருக்குப் புரியும் மொழியில் நிச்சயம் பதில் சொல்வார்கள்.
- முரசொலி தலையங்கம்
29.02.2024