நிதி அமைச்சருக்கு அவர் கணவரே பதிலளிக்கிறார் - 1
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துவிட்டார். இந்தியப் பொருளாதாரத்தை அவர் ஏதோ இமயத்துக்கு தூக்கி நிறுத்திவிட்டதாக ஊடகங்கள் உருட்டுவதைப் பார்க்கும் போது சகிக்கவில்லை. நீளமான உரையை வாசித்ததும் அவர் தானாம். குறைவான உரையை வாசித்ததும் அவர்தானாம்.
பொருளாதாரத்தையே உயர்த்தி விட்டதாகவும், வறுமையையே ஒழித்துவிட்டதாகவும், காங்கிரஸ் ஆட்சி கால பொருளாதார சீர்குலைவு குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப் போவதாகவும், பொருளாதாரமே சீராகிவிட்டது என்றும், மக்களின் வருவாயும் அதிகமாகி விட்டதாகவும், மக்களின் சராசரி வருவாய் 58 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்றும் வாய்க்கு வந்ததை எல்லாம் வாசித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அவருக்கு வேறு யாரும் பதில் சொல்லத் தேவையில்லை. அவரது கணவர் பரகால பிரபாகர் அவர்கள் சொல்லி இருக்கும் சொற்களையே பதிலாகச் சொல்லலாம். 'The Crooked Timber of New India' - என்ற அவரது நூல், 'புதிய இந்தியா எனும் கோணல் மரம்' என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. (பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர் மொழி பெயர்த்து எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது) லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்தவர் இவர். 'மிட்வீக் மேட்டர்ஸ்' என்ற இவரது யூடியூப் சேனல் புகழ் பெற்றது. இந்தியாவை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து எத்தகைய கோணல் மரமாக ஆக்கிவிட்டார்கள் என்பதை புள்ளி விபரங்களோடு பரகால பிரபாகர் சொல்லி இருக்கிறார். அவரது கருத்தின் சில பகுதிகள் மட்டும் இங்கு எடுத்துரைக்கப்படுகிறது.
1998ஆம் ஆண்டு தொடங்கிய காலகட்டத்தில் தற்போது முதன்முறையாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. 2821ஆம் ஆண்டில் மட்டும் உலகத்தில் இருக்கும் ஏழைகளின் கூட்டத்தில் 75 மில்லியன் (7.5 கோடி) பேரை இந்தியா சேர்த்திருக்கிறது. இதன் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டத்திற்கான அமைப்பு (United Nations Development Programme) வெளியிட்டிருக்கும் 2021-22ற்கான உலக மனிதவளர்ச்சிக் குறியீட்டு எண் பட்டியலில் இருக்கும் 191 நாடுகளில் இந்தியா 131ஆவது இடத்தில் இருக்கிறது.
* இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை 73ஆம் இடத்திலும், சீனம் 79ஆம் இடத்திலும், பூடான் 127ஆம் இடத்திலும், பங்களாதேஷ் 129 ஆம் இடத்திலும் இருக்கின்றன. பாகிஸ்தான் (161), மியான்மர் (149), மற்றும் நேபாளம் (143) மட்டுமே இந்தியாவை விட மோசமான நிலையிலிருக்கின்றன. இந்த மூன்று நாடுகளுமே தம் நவீன வரலாற்றில் பெரும்பாலும் பெரும்பான்மை மதம் சார்ந்த நாடுகளாகவே இருக்கின்றன.
* 2022க்கான உலக பசிக் குறியீட்டு எண் பட்டியலிலும் கூட இந்தியா 107ஆவது இடத்திலிருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டில் (2021) 181ஆவது இடத்திலிருந்தது.
* நாட்டில் வேலை வாய்ப்பு சரிந்து கொண்டே இருக்கிறது. மோடி அரசு 2016ஆம் ஆண்டிலிருந்தே வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவரங்களை வெளியிடுவதில்லை.
* 2015-16ஆம் ஆண்டில் வெளிவந்த விவரப்படி, அதற்கு முன்பிருந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை 5% ஆக உயர்ந்திருந்ததும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
* அவ்வப்போது பல வித துறைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வரும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (National Sample Survey office) 2017-18 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு, தொழிலாளர் எண்ணிக்கை ஆகியவை குறித்து கணக்கெடுப்பை நடத்திய போதும் விவரங்களை வெளியிடவில்லை; ஆனால் ஜனவரி 2019இல் வெளியான பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை அந்த விவரங்களைச் செய்தியாக வெளியிட்டது.
* நவம்பர் 2016இல் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதென்று மோடி அரசு வெளியிட்ட நாசகர அறிவிப்புக்குப் பின் வந்த முழு நிதியாண்டுதான் 2017-18. பிஸினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் வெளியான செய்தியின் படி, 2017-18இல் வேலையின்மையின் அளவு அதற்கு முன் வந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து 6.1% ஆக இருந்தது. இந்தச் செய்தி வெளியான அடுத்த கணமே தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் விவரங்கள் இறுதிப்படுத்தப்படாதவை எனவும், அவை பரிசீலனையில் இருப்பதாகவும், அந்தக் கணக்கெடுப்பு செய்த முறையில் பிரச்சினை இருப்பதாகவும் ஒன்றிய அரசு அறிக்கை வெளி யிட்டது. அந்த அலுவலகத்தின் முழு அறிக்கை உடனடியாக ஒளித்து வைக்கப்பட்டது. இதுநாள் வரையிலும் அது வெளியிடப்படவில்லை.
* ஒன்றிய அரசு வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை வெளியிடாத போதிலும், இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம் (Centre for Monitoring Indian Economy) ஆகஸ்ட் 2022 இல் வெளியிட்ட அறிக்கையின்படி வேலையின்மையின் விகிதம் 8.3 விழுக்காடாக உயர்ந்திருந்தது. இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையில் 21 லட்சம் வேலைகள் இழக்கப்பட்டிருந்தன. அது இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் கோவிட்-19 பெருந்தொற்றின் மோசமான உலகத்திலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்த நேரம். நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் மார்ச் 2023இன் இறுதி நாட்களில் வேலையின்மை விகிதம் 7.76% ஆக இருக்கிறது.
- தொடரும்...
முரசொலி தலையங்கம்
06.02.2024