முரசொலி தலையங்கம்

மோடி ஆட்சியில் பாகிஸ்தானை விட மோசமான இந்தியாவின் நிலை : ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய முரசொலி !

மோடி ஆட்சியில் பாகிஸ்தானை விட மோசமான இந்தியாவின் நிலை : ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (22.1.2024)

கம்பன் காட்டும் நாடும்

மோடி காட்டிய நாடும்

................

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;

திண்மைடும், ஓர் செறுநர் இன்மையால்;

உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;

வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.

(வண்மை - கொடை, திண்மை –- துணிவு, செறுநர் – - பகைவர், வெண்மை - – அறியாமை)

கம்பராமாயணம் பேசுபவர்கள் அனைவரும் சிலாகித்துச் சொல்லும் பாடல் இது. ‘கம்பன் சொல்லுவான்’ என்ற பீடிகையுடன் முழங்குவார்கள். அயோத்தி நகரின் செழுமை எப்படி இருந்தது என்பதைச் சொல்லும் பாடல் இது.

அயோத்தியில் வறுமை என்பதே இல்லை என்பதால் கொடைக்கு அவசியமில்லை!

பகைவர் எவரும் இல்லை என்பதால் துணிவுக்கும் வேலையில்லை!

பொய்யுரை ஏதும் இல்லை என்பதால் உண்மைக்கும் பொருளில்லை!

மிக்க கேள்வியறிவு பொருந்தி இருப்பதால் அறியாமை என்பதும் இல்லை.! - இது தான் அயோத்தியைப் பற்றிய கவி கம்பரின் அருமையான கற்பனையாகும்.

இல்லை இல்லை என்று இடப்படும் இப்பட்டியலில் உள்ளவை நான்கும் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட நான்கு பெருமிதங்கள் ஆகும். அந்த நான்கு பெருமிதங்களை எடுத்து அயோத்தி நகரம் தாங்கி நின்றது என்பது கம்பனின் விதந்தோதுதல் ஆகும். ‘பொய்யாமை யன்ன புகழில்லை’ என்ற வள்ளுவன் வரியையும் இத்தோடு இணைத்துக் கொள்கிறார் கம்பர். அதனால் தான், ‘கம்பன் கண்ட கனவு’ என்பார் அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன். இன்று திடீரென அயோத்தி பஜனை அதிகமாகக் கேட்கிறது. இதனை பா.ஜ.க. அரசியல் பஜனையாகவே ஆக்கிவிட்டது. பக்தியும், கடவுளும் அவரவர் தனித்த உரிமையாம். விருப்பமாம். அதனை அரசியல் மூலதனம் ஆக்கிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.வும், அதன் தலைமையும். பத்தாண்டுகளுக்கு முன்னால் மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத பிரதமர் நரேந்திரமோடி, ராமருக்கு கோவில் கட்டியதையே ( அதுவும் முழுமையாகக் கட்டிமுடிக்கவில்லை என்பது பக்தர்களின் வருத்தம். அதனை சரியாகக் கட்டவில்லை என்று இந்து சாமியார்களின் குற்றச்சாட்டு!) சாதனையாகச் சொல்லப் பார்க்கிறார்.

மோடி ஆட்சியில் பாகிஸ்தானை விட மோசமான இந்தியாவின் நிலை : ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய முரசொலி !

கம்பன் காட்டிய, கனவு கண்ட நாட்டை உருவாக்கி விட்டாரா பிரதமர் நரேந்திரமோடி? அதைச் செய்திருந்தால் பாராட்டலாம்.

“பாரதத்தில் இருந்து வறுமையை ஒழிப்பது இன்றியமையாதது. அந்த நேசத்துக்குரிய இலக்கை அடையும் வரை நாங்கள் ஓய மாட்டோம்” என்று கடந்த அக்டோபர் மாதம் ஒரு பள்ளி விழாவில் பிரதமர் பேசினார். அப்படியானால் வறுமை இங்கே இருப்பதை அவரே ஒப்புக் கொண்டார். 'வண்மை இல்லை, வறுமை இன்மையால்' என்று அவரால் சொல்ல முடியவில்லை.

கடந்த ஒன்பது ஆண்டு கால மோடி ஆட்சியில் இந்தியாவில் பட்டினி அதிகரித்துள்ளது என்பது குறித்த புள்ளிவிபரம், அதே அக்டோபர் மாதம் தான் வெளியானது. உலகப் பட்டினி குறிப்பீட்டில் (Global Hunger Iidex ) இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான இடத்தை அடைந்துள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 125 நாடுகளில் 111 ஆவது இடத்தை பெற்றுள்ளது மோடியின் இந்தியா. 28.7 என்ற புள்ளிகளை மட்டுமே மோடியின் பாரதம் பெற்றிருந்தது. பாகிஸ்தான் 102 ஆவது இடத்திலும், வங்கதேசம் 81 ஆவது இடத்திலும், நேபாளம் 69 ஆவது இடத்திலும், இலங்கை 60 ஆவது இடத்திலும் இருக்கிறது. மோடியின் பாரதம், 111 ஆவது இடத்தில் இருக்கிறது.

மோடியின் ஆட்சிக்குப் பிறகு தான் நிலைமை மோசம் ஆகி இருக்கிறது.

2011 ஆம் ஆண்டு 122 நாடுகளில் இந்தியா 67 ஆவது இடம்

2012 ஆம் ஆண்டு 120 நாடுகளில் 65 ஆவது இடம்

2013 ஆம் ஆண்டு 120 நாடுகளில் 63 ஆவது இடம்

2014 ஆம் ஆண்டு 120 நாடுகளில் 55 ஆவது இடம் - – என இந்தியாவில் பட்டினிக் குறியீடு இருந்தது. 2014 ஆம் ஆண்டு மோடி, இந்தியாவின் பிரதமராகிறார். அதன்பிறகு என்ன ஆனது பாருங்கள்...

2015 ஆம் ஆண்டு 117 நாடுகளில் 80 ஆவது இடம்

2016 ஆம் ஆண்டு 118 நாடுகளில் 97 ஆவது இடம்

2017 ஆம் ஆண்டு 119 நாடுகளில் 100 ஆவது இடம்

2018 ஆம் ஆண்டு 132 நாடுகளில் 103 ஆவது இடம்

2019 ஆம் ஆண்டு 117 நாடுகளில் 102 ஆவது இடம்

2020 ஆம் ஆண்டு 107 நாடுகளில் 94 ஆவது இடம்

2021 ஆம் ஆண்டு 116 நாடுகளில் 101 ஆவது இடம்

2022 ஆம் ஆண்டு 121 நாடுகளில் 107 ஆவது இடம்

2023 ஆம் ஆண்டு 125 நாடுகளில் 111 ஆவது இடம் -– என இந்தியாவின் பட்டினிக் குறிப்பீட்டில் மோடியின் பாரதம் சரிந்து கொண்டே வந்துவிட்டது. இதுதான் மோடி காட்டிய பாரத நாடு ஆகும். இதைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இல்லை. ஆனால் கோவில் கட்டுவதன் மூலமாக தன்னால் ஏற்பட்ட அத்தனை வேதனைகளையும் மறைக்கப் பார்ப்பது தான் அரசியல் மோசடி ஆகும்.

மோடி ஆட்சியில் பாகிஸ்தானை விட மோசமான இந்தியாவின் நிலை : ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய முரசொலி !

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் பறிப்பு –- குடியுரிமைச் சட்டம் கொண்டு வருதல் ஆகியவற்றின் மூலமாக தங்களை மதக் காவலர்களாகக் காட்டுவதும் ஒருவகையான ஏமாற்றுதல் ஆகும். உண்மையான மதாபிமானம் இருக்குமானால் அந்த மதத்தைச் சேர்ந்த மக்களின் நல்வாழ்வுக்கு நன்மை செய்திருக்க வேண்டும். அவர்களது கண்ணீரைத் துடைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு விலைவாசியை குறைத்திருக்க வேண்டும். பெட் ரோல், டீசல், சிலிண்டர் விலையைக் குறைத்திருக்க வேண்டும். அவர்கள் மனதிலும் முகத்திலும் புன்னகையை வர வைத்திருக்க வேண்டும். இது எதையும் செய்ய முன்வரவில்லை.கார்பரேட்டுகளுக்கு வண்மையும் (கொடைகள்) ஏழைகளுக்கு வறுமையும் தான் மோடி காட்டும் நாடு.

banner

Related Stories

Related Stories