முரசொலி தலையங்கம் (29-12-2023)
ஊழலைப் பற்றி பேசலாமா?- 2
பழனிசாமி மீதான டெண்டர் வழக்கை விசாரிப்பது தொடர்பாக புதிய வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்துக்கு மீண்டும் வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந் தவே ஆஜராகி வாதிட்டார். “டெண்டர் முறைகேடு தொடர்பாக முந்தைய அ.தி.மு.க. அரசு வழக்கை திரும்பப் பெற முடிவு செய்தது. அதற்கு உயர் நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் போது வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. எனவே தற்போதைய அரசு வழக்கை மீண்டும் முறைப்படி விசாரிக்க திட்டமிட்டுள்ளது. முன்பு புகார் அளித்த புகார் தாரர்களின் புகார் மீது விசாரணை நடத்த அனுமதிக்கப்பட வேண்டும். அதற்குச் சட்டம் தடையாக இல்லை” என்று தெரிவித்தார்.
புதிய அரசு ஆட்சி அமைந்தால் முந்தைய ஊழல் புகார்கள் மீது விசாரணை நடத்த உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். “முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார். அப்போது முறையாக வழக்கு விசாரிக்கப்படவில்லை. அவருக்கு கீழ் இருந்த அதிகாரிகள் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை விசாரிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், “சட்டம் என்ன அனுமதிக்கிறதோ அதன்படி அரசு செல்லலாம். நாங்கள் எதற்கும் தடை விதிக்கவில்லை. சட்டத்தின் நான்கு மூலைகளுக்குள் நீங்கள் எதை செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யலாம” என்று தெரிவித்தனர். எனவே பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு எப்போது வேண்டுமானாலும் வேகம் எடுக்கலாம்.
அ.தி.மு.க. ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிரான புகாரில் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், 11 மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகளை கட்டியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு போட்டிருந்தார்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் செய்த ஊழல் முறைகேடுகளை விசாரணை நடத்தி அம்பலப்படுத்தி வருகிறது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் ரூ.2,87,98,650/- தங்கநகைகள் 6.637 கிலோகிராம், சுமார் 13.85 கிலோகிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத பணம் ரூ.2,65,31,650/–-, வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கிற்குதொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.13 லட்சமும், ரூ.2 கோடிக்கான வைப்புத் தொகை, நிலப்பதிவு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வணிகவரித்துறை அமைச்சராக இருந்த வீரமணி வீட்டில் ரூ.34 லட்சம் பணம், 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.1,80,000 மதிப்பிலான அந்நியச் செலாவணி டாலர் கைப்பற்றப்பட்டுள்ளது. 623 சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னர் இருந்ததை விட 646 சதவிகிதம் இவரது சொத்து அதிகமானதாக போலீஸார் கணக்கிட்டுள்ளனர்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர், வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி சம்பாதித்துள்ளதாக போலீஸார் கணக்கிட்டுள்ளார்கள். ரூ.23 லட்சம் பணமும், 4.87 கிலோ தங்கமும், 136 கனரக வாகனங்களின் ஆவணமும் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. மின்சார அமைச்சராக இருந்த தங்கமணி ரூ.4 கோடி மதிப்பிலான தொகையை வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்ததாக ரெய்டு நடத்தப்பட்டு கணக்கில் வராத பணம், சான்று பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா / மாவா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இருந்த கே.சி. வீரமணி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணையை ஆளுநரிடம் கோரியது. அதற்கான அனுமதியை கொடுத்து விட்டார்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். ( 2023 மே 22)
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக 45.20 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தர்மபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ( 2023 மே 22)
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜ் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 .44 கோடி சொத்து சேர்த்ததாக திருவாரூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ( 2023 ஜூலை 11) இது தான் பழனிசாமி அண்ட் கோ – வின் ஊழல் வரலாறு ஆகும். இதை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.