ஆளுநர் பதவியே அகற்றப்பட வேண்டியதே - 1
“ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும் - அது இருக்கும் வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு அடங்கி இருக்க வேண்டியதுதான் மரபு ஆகும்” - என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசி இருப்பதையே அரசியல் ரீதியான நடைமுறையாக்கப் போராடியாக வேண்டும்.
ஆளுநர் பதவிகளை தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அரசியலமைப்புச் சட்ட மேதைகளும், அரசியல் ஆய்வாளர்களும் காலம் காலமாகச் சொல்லி வந்துள்ளார்கள். ‘மலர்க மாநில சுயாட்சி’ என்ற அறிவுக் கருவூலத்தை உருவாக்கிக் கொடுத்த கு.ச. ஆனந்தன் அவர்கள், ஆளுநர்களை இப்படி வரையறுக்கிறார்.
“மாநில ஆளுநர் என்பவர், நமது அரசமைப்புச் சட்டத்தின் ஓர் அதிசயப் படைப்பு: ஆங்கிலேயர் விட்டுச் சென்ற ஏகாதிபத்தியத்தின் கடைசிச் சின்னம், இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னரும், நம்மால் அறுத்தெறிய முடியாத ஓர் அடிமைப்பந்தம். ஆளுநர் என்பவர், ஒரு மாநிலத்தின் ஆட்சித் தலைவர் (நிர்வாகத் தலைவர்); மாநிலச் சட்ட மன்றத்தின் மிக முக்கியக் கூறாக இருப்பவரும் அவரே. ஆனால், அப்படிப்பட்ட மாநில ஆளுநரைக் குடியரசுத் தலைவரின் மூலமாக- -– மத்திய அரசே நியமனம் செய்கிறது. அவருடைய நியமனத்தில் மாநில மக்களுக்கும், மாநில அரசிற்கும் எவ்வகைத் தொடர்பும் பங்கும் கிடையாது” என்று எழுதி இருக்கிறார்.
பிரிட்டிஷ் அரசு, இந்திய நாட்டை ஆள்வதற்காக உருவாக்கி வைத்திருந்தவைதான் கவர்னர்களும் கவர்னர் ஜெனரல்களும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கட்டுப்படுத்த இந்தப் பதவிகளை உருவாக்கி வைத்திருந்தார்கள்.
“மத்திய அரசின் ‘கையாளைத்தான்’ நாகரிகமான சொற்களால் ‘மாநிலத்தின் ஆட்சித் தலைவர்’ எனவும், ‘மேதகு ஆளுநர்’ எனவும், அரசமைப்புச் சட்டம் ஆக்கி வைத்திருக்கிறது” என்றும் கு.ச. ஆனந்தன் எழுதி இருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தில் இன்றைய ஆளுநர்கள் இடம் பெற்றதே ஒரு சுவையான கதை என்பதையும் அவர் விவரித்துள்ளார்.
அரசமைப்பு ஆலோசகர் பி.என். இராவ் அவர்கள், 30-5-1947-இல் உருவாக்கிய தனது அரசமைப்புக் குறிப்பில், “மாநிலச் சட்ட மன்ற உறுப்பினர்களால் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஐந்து மாதங்களில், நிலைமை மாறியது. வல்லபாய் படேல் தலைமையில் இயங்கிய “மாநில அரசமைப்புக் குழு”, அந்த ஏற்பாட்டை விரும்பவில்லை. அதற்கேற்ப 1947-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், பி.என். இராவ் அவர்களின் குறிப்பு மாறுதலடைந்தது.
அதன் பின்னர், மாநில வாக்காளர்களாலேயே மாநில ஆளுநரும் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனப் பல அரசமைப்புச் சபை உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். சென்னை மாகாண முன்னாள் ஆளுநர் ஸ்ரீ பிரகாசா, முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, என்.வி.காட்கில், டாக்டர். கே.எம்.முன்சி, கைலாசநாதகட்சு போன்ற பெருந்தலைவர்கள் இப்படிச் சொன்னார்கள். அடுத்த நான்கு மாதங்களில் அந்தக் கருத்தும் மாறிற்று.
ஆளுநராக நியமனம் பெற, மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அவர்களில் ஒருவரை ஆளுநராகக் குடியரசுத் தலைவர் நியமிப்பார் என்ற ஒரு கருத்து உருவாயிற்று, ஆனால் இதுவும் பின்னர் மாறியது. அரசமைப்புச் சபை இறுதியாக விவாதித்த போது, ஆளுநரை குடியரசுத் தலைவரே நியமனம் செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டு விட்டது. இத்தகைய பதவி ஒன்றிய ஆளும் கட்சிகளின் கைப்பாவையாக ஆக்கப்பட்டு விட்டது.
“நொந்து போன அரசியல்வாதிகளுக்கு சில நேரங்களில் கொடுக்கப்படும் ஆறுதல் பரிசுதான் ஆளுநர் பதவியாகும். திறமையற்ற இடைத்தரமான அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை மானியங்களைப் போன்றதே ஆளுநர் பதவியாகும்” என்று மத்திய - மாநில உறவுகளை ஆராய 1972 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு அறிக்கையே சொன்னது. மாநில சுயாட்சி குறித்து ஆராய இராஜமன்னார் குழுவை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 1974 ஆம் ஆண்டு அமைத்தார்கள். அந்த அறிக்கை மீதான தனது விளக்கத்தை அன்றைய தி.மு.க. அரசு முன் வைத்தது.
“ஆளுநர் நியமனம் குறித்து நமது அரசியலமைப்பில் வகை செய்யப்பட்டுள்ளது - மக்களாட்சி முறையில் காலத்திற்கு ஒவ்வாத ஒன்றாகும். இவர், மத்திய அரசால் நியமிக்கப்பட்டு மத்திய அரசுக்குப் பொறுப்புள்ள அதிகாரியாவார். எனவே, உள்ளூர் நிலைமைகளையும் அரசியல் நிலைமையையும் இவர் அறிந்திருக்க முடியும் என்று எதிர்பார்க்க இயலாது. ஆளுநர் பதவிக்காகச் செய்யப்படும் செலவும் சமதர்ம சமுதாய முறைக்கு ஏற்றதாக இல்லை. இச்செலவு வீணானது. இதனைக் கைவிடலாம். ஆளுநர் பதவியை எடுத்து விடுவதற்கு உற்ற தருணம் இதுவேயாகும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது. ஆனாலும் ஆளுநர்கள் குறித்து அகில இந்தியா முழுமைக்கும் ஒத்த கருத்து உருவாகாததால் ஆளுநர் பதவி நீட்டித்துக் கொண்டே வந்துள்ளது.
ஆனால் கடந்த பத்தாண்டு காலத்தில் ஆளுநர்களின் அடக்குமுறைகள் அதிகமாகி வருகின்றன. இது மாநிலக் கட்சிகள் - அகில இந்தியக் கட்சிகள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர்களை வைத்து இன்றைய பா.ஜ.க. அரசு என்ன மாதிரியான காரியங்களைச் செய்து வருகிறது என்பதை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஒரு முறை எழுதினார்.
“மோடி பிரதமராக பதவி ஏற்றதுமே ஏறக்குறைய அனைத்து மாநில ஆளுநர்களையும் மற்றும் துணை நிலை ஆளுநர்களையும் மாற்றம் செய்தார். இந்த மாறுதல் பட்டியலில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவமும் இருந்தார். அவர் என்ன கட்டாயத்தின் பேரில் மாற்றம் செய்யப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாது. இவர்கள் அனைவரும் பா.ஜ.க.வின் அரசியல் சதி வேலைகளுக்கு தேவைப்பட்டனர்.
புதிதாக ஏழு யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். தில்லி சட்டமன்றத் தேர்தலில் தோற்ற முதலமைச்சர் வேட்பாளர் கிரண் பேடி புதுச்சேரி துணைநிலை ஆளுநராக்கப்பட்டார். அனில் வைசால்தான் ஒரு பா.ஜ.க. ஆதரவாளர் என்று ஒத்துக் கொண்டவர். நஜீப்ஜங் பா.ஜ.க. அரசின் கட்டளைப்படி செயல்பட்டார். ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் எம்.என்.வோரா, ஒடிசா ஆளுநர் எஸ்.சி. ஜெமின், நரசிம்மா (ஆந்திரா), கேசரிநாத் திரிபாதி (மே.வ.) மற்றும் கல்யாண் சிங் இவர்களெல்லாம் பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர்கள்.” என்று எழுதினார் ராஜீவ் தவான்.
- தொடரும்.
முரசொலி தலையங்கம்
21.11.2023