முரசொலி தலையங்கம்

”பெண்கள் பாதுகாப்பில் பா.ஜ.கவின் லட்சணம் இதுதான்” : அண்ணாமலைக்கு சுட்டிக்காட்டிய முரசொலி!

பெண்கள் பாதுகாப்பில் பா.ஜ.க.வுக்கு உள்ள அருகதை ஆகும்.

”பெண்கள் பாதுகாப்பில் பா.ஜ.கவின் லட்சணம் இதுதான்” : அண்ணாமலைக்கு சுட்டிக்காட்டிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (20-10-2023)

யாருக்கு அருகதை இல்லை?

“மகளிரைப் பற்றியோ மகளிர் இடஒதுக்கீடு சட்டம் பற்றியோ பேசுவதற்கு தி.மு.க.வுக்கு அருகதை இல்லை” என்று பா.ஜ.க.வில் தலைமை நாற்காலியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் தூக்கி வீசப்படும் நிலைமையில் இருக்கும் அண்ணாமலை சொல்லி இருக்கிறார்.

மகளிர் உரிமை மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள் வெளிப்படையானவை. சுற்றி வளைத்து அவர் கேள்விகளை எழுப்பவில்லை. அதற்கு நேரடியாக அண்ணாமலை பதில் சொல்லி இருக்க வேண்டும். வழக்கம் போல தனது ஏர்போர்ட் பேட்டி பாணிகளைப் போல காற்றில் கம்பு சுற்றுகிறார்.

* நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பெண்ணினத்தை ஏமாற்ற மகளிருக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்று சட்டம் கொண்டு வருவதைப் போல கொண்டு வந்து பிரதமர் மோடி ஏமாற்றினார்.

* மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு - அதை வைத்து தொகுதி மறுவரையறைகள் முடிந்த பிறகு - என்று சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. இது கப்சா விடும் காரியம் ஆகும்.

- என்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வைத்த வாதங்கள் ஆகும். இதில் தவறு ஏதாவது இருக்குமானால் - பிழைகள் இருக்குமானால் அண்ணாமலை சொல்ல வேண்டும். அவரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“1996 ஆம் ஆண்டு தி.மு.க. - காங்கிரஸ் ஆதரித்த ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்த நிபந்தனைகளை நாம் வைக்கவில்லை. 2010ஆம் ஆண்டும் நமது கூட்டணி அரசு இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தபோதும் இது மாதிரியான நிபந்தனைகளை வைக்கவில்லை. இப்போது பா.ஜ.க. நிபந்தனை போடுகிறது என்றால் என்ன அர்த்தம்?” என்று முதலமைச்சர் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அந்தக் கேள்விக்கும் அண்ணாமலையால் பதில் சொல்ல முடியவில்லை.

உடனே பொத்தாம் பொதுவாக, ‘தி.மு.க.வுக்கு அருகதை இல்லை’ என்பதே அனைத்துக் கேள்விகளுக்குமான பதிலாக இருந்தால் இதனைச் சொல்வதற்கு அண்ணாமலைக்கோ, பா.ஜ.க.வுக்கோ என்ன அருகதை இருக்கிறது என்ற கேள்வியைத்தான் கேட்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

”பெண்கள் பாதுகாப்பில் பா.ஜ.கவின் லட்சணம் இதுதான்” : அண்ணாமலைக்கு சுட்டிக்காட்டிய முரசொலி!

மணிப்பூர் என்ற மாநிலம் கடந்த மே மாதம் முதல் பற்றி எரிகிறதே, அங்கு போனாரா இந்தியாவின் பிரதமர்? இந்தியாவில்தானே மணிப்பூர் இருக்கிறது. மணிப்பூருக்கும் சேர்த்துதானே அவர் பிரதமர். மணிப்பூரை ஆள்வதும் பா.ஜ.க. அரசுதானே? அங்கே இரண்டு பெண்கள் ஆடை களையப்பட்டு அழைத்து வரப்பட்டார்களே, அப்போதாவது அந்த மாநிலத்துக்குச் சென்றாரா பிரதமர்?

எத்தனையோ கொடுமைகள் மணிப்பூரில் இந்த ஐந்து மாதமாக அரங்கேறி வருகிறது. அதில் மிகக் கொடூரமானது இந்த இரண்டு பெண்களுக்கும் நடந்தவை ஆகும். குக்கி இனப் பெண்களை ஆடை களைந்து ஒரு கும்பல் இழுத்து வரும் காட்சி சமூக வலைதளங்களில் பரவிய பிறகு, ‘இது போல நிறைய நடந்துள்ளதே!’ என்று சொன்னவர்தான் பா.ஜ.க. முதலமைச்சர் பிரேன் சிங்.

‘இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய பிறகுதான் இந்தச் சம்பவத்தின் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. வீடியோ வந்த பிறகுதான் 6 பேரை கைது செய்தோம்’ என்று சொன்னார் பா.ஜ.க. முதலமைச்சர். அதாவது மே மாதம் 4 ஆம் தேதி நடந்த கொடூரத்துக்குக் காரணமானவர்களை ஜூலை மாதம் 18 ஆம் தேதிக்கு மேல்தான் கைது செய்கிறார் பா.ஜ.க. முதலமைச்சர். அதன் பிறகுதான் பிரதமர் கண்டிக்கிறார். இந்தக் கொடூரம் நடந்ததுமே மாநில பா.ஜ.க. அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் அது தெரிந்திருக்கும்.

‘நான் இழுத்துச் செல்லப்பட்ட போது போலீஸ் வேடிக்கை பார்த்தது’ என்று அந்தப் பெண்கள் பேட்டி அளித்துள்ளார்கள். “எங்களை வன்முறைக் கும்பல் புதருக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார்கள். அப்போது போலீஸ் ஜீப் நின்று கொண்டிருந்தது. அதில் நான்கு போலீஸ்காரர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். வன்முறைக் கும்பல் எங்களை இழுத்துச் செல்வதை அந்த நான்கு போலீஸ்காரர்களும் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எங்களுக்கு உதவவில்லை” என்று ஒரு பெண் பேட்டி அளித்துள்ளார். இதுதான் பெண்கள் பாதுகாப்பில் பா.ஜ.க.வுக்கு உள்ள அருகதை ஆகும்.

கைகட்டி வேடிக்கை பார்த்தது பா.ஜ.க. மாநில அரசு. அந்த மாநில அரசை இன்று வரை காப்பாற்றி வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

”பெண்கள் பாதுகாப்பில் பா.ஜ.கவின் லட்சணம் இதுதான்” : அண்ணாமலைக்கு சுட்டிக்காட்டிய முரசொலி!

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பா.ஜ.க. எம்.பி.மீது வழக்குப் பதியவே மல்யுத்தம் நடத்த வேண்டி இருந்தது. பா.ஜ.க. இந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்ஷி மல்லிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது பல கடுமையான குற்றச் சாட்டுகளைச் சுமத்தினர். பிரிஜ் பூஷண் சிங்கும், பயிற்சியாளரும், தேசிய முகாமில் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக வினேஷ் போகட் அழுதுகொண்டே கூறினார். இந்த விவகாரம் பெரிதாக ஆனதும் உடனடியாக அவர் மீது வழக்குப் பதிந்திருக்க வேண்டும். அதனைச் செய்யவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு.

ஏப்ரல் 21 ஆம் தேதி, பிரிஜ்பூஷண் சிங்குக்கு எதிராக கனாட் பிளேஸ் காவல் நிலையத்திற்கு புகார் செய்ய மல்யுத்த வீராங்கனைகள் சென்றார்கள். ஆனால் போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. ஏன் வழக்குப் பதியவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். ‘போக்சோ’ சட்டத்தில் பதியப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க வைத்ததன் பின்னணி அனைவர்க்கும் தெரியும். பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்யாமலேயே வழக்கு விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு பெண்களைப் பற்றிப் பேச அருகதையோ, யோக்கியதையோ துளியும் உண்டா?

banner

Related Stories

Related Stories