முரசொலி தலையங்கம் (19-07-2023)
குட்கா அ.தி.மு.க.வை காப்பாற்றும் பா.ஜ.க.!
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு 11 ஆவது முறையாக கால நீட்டிப்பு வழங்கி உள்ளது சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம். - இது செய்தி.
குட்கா அ.தி.மு.க.வை 11 முறையாக காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க. - இதுதான் உண்மை!
தமிழ்நாட்டில் தடையை மீறி, அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருட்கள் விற்றது தொடர்பாக, குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., கடந்த 2021ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியல் இத்துடன் நிற்கவில்லை.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சிக்கினார்கள். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் டி.ஜி.பி.யாக இருந்த டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டவர்கள். இந்த 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டது சி.பி.ஐ. நீதிமன்றம். கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. க்கு அனுமதி அளித்தது.
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் எழுப்பி விசாரணை நடத்த வேண்டுமானால் ஒன்றிய அரசின் அனுமதி தேவை. ஊழலுக்கு எதிராக நாளும் குரல் கொடுத்து வரும் பிரதமர் மோடி -– உள்துறை அமைச்சர் அமித்ஷா -– ஆளுநர் ஆர்.என்.ரவி - போன்றவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இந்த குட்கா கும்பலான அ.தி.மு.க. ஆட்சி கால ஆட்களை விசாரித்து அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி வழங்கி இருக்க வேண்டுமல்லவா? அதனைச் செய்யவில்லை.
செந்தில் பாலாஜி வீட்டுக்கு வருமான வரித்துறை ரெய்டு போனதும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கத் துடித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தன்னுடைய வேண்டுகோளை டெல்லியை நோக்கி வைத்து சி.பி.ஐ.க்கு அனுமதியை பெற்றுத் தரத் தயாராக இருக்கிறாரா? நீட்டி முழங்குவாரே ரவி? 11 முறையாக சி.பி.ஐ. கால நீட்டிப்பு வாங்கி உள்ளதே. அந்த சி.பி.ஐ.யை கண்டிப்பாரா? சி.பி.ஐ.க்கு அனுமதி தராத ஒன்றிய அரசை கண்டிப்பாரா ஆளுநர்?
தமிழ்நாடு காவல் துறை முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த ஒன்றிய அரசு அனுமதியளித்தது. ஆனால் சி.பி.ஐ. வழக்கில் உள்ள மேலும் சிலரிடம் விசாரணை நடத்தவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அனுமதி அளிக்கவில்லை. விசாரணை நடத்தலாம், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கூடாது என்பது என்ன நியாயம்? அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் பா.ஜ.க.வின் எதிரிகள் மீது பாயும் வண்ணம் செட்டப் பண்ணி வைத்துள்ளார்களே அதுமாதிரியா இதுவும்?
10 ஆவது முறை கால நீட்டிப்பு கேட்டது சி.பி.ஐ.''குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் டி.ஜி.பி.யாக இருந்த டி.கே.ராஜேந்திரன் மற்றும் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது விசாரணை நடத்துவது தொடர்பான ஒன்றிய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை. மற்றவர்களுக்கு எல்லாம் அனுமதி கிடைத்துவிட்டது. எனவே கூடுதல் அவகாசம் வேண்டும்" என்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சொல்லியது சி.பி.ஐ. அப்போதே நீதிபதி கண்டித்தார்.
''அரசின் அனுமதி கிடைக்காவிட்டால் இந்த வழக்கையே எப்படி நடத்துவது?" என்று சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா கேள்வி எழுப்பினார். அடுத்த முறை அனுமதியை வாங்கிவிடுவோம் என்றது சி.பி.ஐ. ஆனாலும் அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ. தரப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு சிலருக்கு எதிராக விசாரணை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக இன்னும் ஒன்றிய அரசின் அனுமதி கிடைக்கவில்லை எனவும், திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை அளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
ஒன்றிய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காகவே இந்த வழக்கு 11 வது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக என்ன தெரிகிறது? குட்கா அ.தி.மு.க. கும்பலை பா.ஜ.க. காப்பாற்றுகிறது.
மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐ.-யின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ( 12.9.2022) அனுப்பியதாகவும், ஆனால் இதுவரையில் இந்தக் கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றும் சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
குட்கா அ.தி.மு.க.வை காப்பாற்றுவது யார்? பா.ஜ.க. தான். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக இந்த பா.ஜ.க. தான் நடிக்கிறது. இவர்கள் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. தங்களுக்கு எதிரானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறையை பயன்படுத்துகிறார்கள். நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்தால், அடுத்த நிமிடமே புனிதர்கள் ஆகிவிடுவார்கள். உலகத்தில் எந்த நாட்டிலும் இத்தகைய கேவலமான முறை இருக்காது என்பதே உண்மை!