திருவாரூர் திசை காட்டுகிறது!
வான்புகழ் வள்ளுவருக்கு கோட்டம் கண்ட கலைஞருக்கு அவர் திருவான திருவாரூரில் கோட்டம் கண்டுள்ளார் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சரும் - இந்தியாவில் முதலமைச்சர்களுக்கு எல்லாம் முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்த நிகழ்ச்சி கோட்டம் திறப்பு விழாவாக மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகக் கோட்பாட்டை மீட்டெடுப்பதற்கான கால்கோள் விழாவாக நடந்துள்ளது.
கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதற்காக மாண்புமிகு பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்கள் வருவதாக இருந்தது. திடீரென வர இயலாத உடல் நலிவு அவருக்கு இருந்தது. அதனால் தனது உரையை தயாரித்து அனுப்பி வைத்தார். தி.மு.க. மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா அவர்கள் அவரது உரையினை வாசித்தார். இந்த உரையில் மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:
"சூன் 23 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் ஒரு முக்கியமான கூட்டம் நடைபெற உள்ளது. அதில் உங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கிறார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த ஒற்றுமை நாங்கள் எண்ணுவது போல் ஈடேறினால், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அகற்றப்படும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்" - இதுதான் மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்கள் இந்தியாவுக்குச் சொல்லும் செய்தி ஆகும்.
இதனையே வழிமொழிந்து உரையாற்றினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். “ஜனநாயகத்தை காக்கக்கூடிய பொறுப்பை ஏற்று அதற்கு அடித்தளம் அமைக்கும் பணியை பீகார் தொடங்கியிருக்கிறது. வருகிற 23-ஆம் தேதியன்று பீகார் மாநிலம் - பாட்னாவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடக்க இருக்கிறது. பாட்னா என்பது இந்தியாவின் தொன்மையான நகரங்களில் ஒன்றாகும். பாடலிபுத்திரம் என்று வரலாற்றில் அழைக்கப்படக்கூடிய நகரம்தான் இன்றைய பாட்னா. அறிவு மற்றும் ஞானத்தின் அடையாளமாகச் சொல்லப்பட்ட நகரம் அது. 'ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு. சர்வாதிகாரம் என்பது காட்டுத் தீ' என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள். பா.ஜ.க. கடந்த பத்தாண்டு காலமாகப் பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத் தீயை அணைக்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. அதற்கான முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்றுவதற்கான ஏற்பாட்டை மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். நானும் பாட்னா செல்கிறேன். உங்களுடைய அன்போடு செல்கிறேன். உங்களுடைய நம்பிக்கையோடு செல்கிறேன். ஜனநாயகப் போர்க்களத்தில் கலைஞரின் தளபதியாக நானும் பங்கெடுக்க இருக்கிறேன்" என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் போர்க் கோலம் பூண்டுள்ளார்.
“இந்திய ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய நெருக்கடியான காலத்தில் இன்றைக்கு நாம் இருக்கிறோம். இதைச் செய்யாவிட்டால் மூவாயிரம் - நான்காயிரம் ஆண்டுப் பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும். இன்னும் சொல்கிறேன். கலைஞரின் உயிரினும் உயிரான உடன்பிறப்புகளே, இங்கே அமர்ந்திருக்கிறீர்களே, இந்த கலைஞருடைய உடன்பிறப்புகள் இதனை நீங்கள் செய்யாவிட்டால் வேறு யாராலும் இதனைச் செய்ய முடியாது. மீண்டும் பா.ஜ.க.வை ஆள அனுமதிப்பது என்பது தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் - இந்திய நாட்டுக்கும் - இந்தியாவின் எதிர்காலத்துக்கும் அது கேடாக முடியும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தமிழ்நாட்டில் எப்படி ஒருமுகமாக இருந்து செயல்படுகிறோமோ - செயல்பட்டு வெற்றியைப் பெறுகிறோமோ, அத்தகைய செயல்பாடும் ஒருங்கிணைப்பும் அகில இந்திய அளவில் ஏற்பட்டாக வேண்டும். வெற்றி வேண்டும். வெற்றிக்கு முன்னால் ஒற்றுமை வேண்டும். அதனுடைய முன்னோட்டமாகத்தான் பீகார் மாநிலத்தில் நடை பெறவுள்ள கூட்டம் அமையவிருக்கிறது. மீண்டும் சொல்கிறேன் கலைஞரின் உடன்பிறப்புகளே! நாம் ஒருதாய் மக்கள். அந்த உணர்வோடு பணியாற்றி கலைஞரின் கனவுகளை நிறைவேற்றுவோம்." - என்ற மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதல்தான் இந்தியாவுக்கு திருவாரூர் காட்டும் திசை ஆகும்!
இந்திய ஜனநாயகத்துக்கு எப்போதெல்லாம் ஆபத்து சூழ்கிறதோ அப்போதெல்லாம் வழிகாட்டியவர் திருவாரூர் கலைஞர் தான் என்பதே இந்திய அரசியல். 1988 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் உருவாக்கிய தேசிய முன்னணி என்பது ஒரு மாற்று அரசியலின் தொடக்கமாக அமைந்திருந்தது. வி.பி.சிங் தலைமையில் ஒரு சமூக நீதி அரசை அமைக்கக் காரணமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டு உருவாக்கப் பட்ட ஐக்கிய முன்னணி என்பது மிக நீண்ட காலம் ஆளவில்லை என்றாலும் மாநிலக் கட்சிகளின் விருப்பங்களை நிறைவேற்றும் அரசாக ஒன்றிய அரசை அமைக்க முடிந்தது. 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியானது மதச்சார்பற்ற ஒரு அரசை ஒன்றியத்தில் உருவாக்கி நடத்த வழியமைத்தது.
வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசின் தி.மு.க. அங்கம் வகித்த போதிலும், அக்கட்சியின் ஆட்சியையும் குறைந்தபட்ச செயல்திட்டத்துக்கு கட்டுப்பட வைத்து அதில் இருந்து மீற முடியாமல் கட்டுப்படுத்தியது கலைஞரின் ஆற்றலாகும். 'கலைஞர் இருக்குமிடத்தில் மதச்சார்பு இருக்காது” என்று முன்னாள் நிதி அமைச்சர் பெரியவர் சி.சுப்பிரமணியம் சொல்லும் அளவுக்கு பா.ஜ.க.வின் கடிவாளத்தை கலைஞர் கையில் வைத்திருந்தார்.
‘இந்தியாவின் தலைநகரம் டெல்லி அல்ல, சென்னை என்று பத்திரிகைகள் எழுத கலைஞரே காரணம்' என்றார் முன்னாள் பிரதமர் தேவகவுடா. இதோ இப்போதும் திருவாரூர் திசை காட்டுகிறது இந்திய ஜனநாயகத்தைக் காக்க!