முரசொலி தலையங்கம் (30.5.2023)
ஏமாற்றுவதில் பலவகை!
ஏமாத்துறதுலயும் தினுசு தினுசா என்று கிராமத்தில் ' சொல்வார்கள். அப்படித்தான் இருக்கிறது இப்போதும். புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவை முன்னிட்டு புதிது புதிதாக ஏமாற்றுகிறார்கள்.மடாதிபதிகளிடம் இருந்து செங்கோலைப் பெற்றுள்ளார் பிரதமர். பெற்றுக் கொள்ளட்டும். அவர் இப்போதுதான் புதிதாக அதிகாரத்துக்கு வருவதாக நினைக்கிறார். நினைத்துக் கொள்ளட்டும். அதற்கு ஏன் சோழர் காலத்துச் செங்கோல் என்று சொல்ல வேண்டும்? அப்படி முதலில் சொன்னது யார் ? குருமூர்த்தியாம். இராமேஸ்வரம் கோவிலில் 1212 தூண்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கிறது என்று சொல்லி கதை விட்டு மாட்டிக் கொண்டவராச்சே அவர். 'துக்ளக்' பத்திரிகை வரலாற்றையே - சோ வரலாற்றையே மாற்றி எழுதிக் கொண்டிருப்பவராச்சே அவர்? அவர் சோழர்கள் வரலாற்றைச் சொல்கிறாராம்?
இராஜாஜி சொன்னாராம். மடாதிபதி எடுத்துக் கொண்டு போய் மவுண்ட பேட்டனிடம் கொடுத்தாராம். மவுண்ட்பேட்டன், நேருவிடம் கொடுத்தாராம். அப்படி கொடுக்கப்பட்ட செங்கோல் எங்கே இருக்கிறது? எங்கோ இருக்கிறது? அதிகார மாற்றத்தின் அடையாளமான செங்கோல் எங்கோ ஒரு மூலைக்குள் முடங்கிக் கிடந்தது.
இராஜாஜி சொன்னதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று இராஜாஜியின் பேரனே சொல்லிவிட்டார்.மவுண்ட்பேட்டனிடம் கொடுத்ததற்கு ஆதாரம் இல்லை என்று மடாதிபதியே சொல்லிவிட்டார். சுதந்திர தினத்தன்று அனைத்து மத நம்பிக்கைப் பிரமுகர்களும் போய் பிரதமர் நேருவைச் சந்தித்ததற்கு ஆதாரம் இருக்கிறது. அப்போது திருவாவடுதுறை ஆதீனம், செங்கோலை தங்களது நினைவுப் பரிசாக வழங்குகிறார். அவ்வளவுதான். ‘ஒரு சாமியார் செங்கோல் கொடுத்தார், அதேபோல் ஒரு சாமியாரை வைத்து செங்கோல் கொடுக்க வேண்டும்' என்று முடிவு செய்திருக்கிறார். தமிழ்நாடாக இருந்தால் அதனை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம் என்பதே அவர்களது கணக்கு.
தமிழ்நாட்டில் இருந்து அனைத்து சைவ மடாதிபதிகளும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து செங்கோலை வாங்கிக் கொண்டார் பிரதமர். சைவ மடாதிபதிகளை வைத்துத்தான் புதிய கட்டடமே திறக்கப்படப் போகிறது என்று கிளப்பினார்கள். ஆனால் நடந்தது என்ன? சைவ மடாதிபதிகளும் அங்கே பார்வையாளர்கள் மட்டுமே. வழக்கம் போல ‘அவர்களை” வைத்தே அனைத்து சடங்குகளையும் முடித்துவிட்டார்கள். ஏமாற்றம் யாருக்கு? சைவ மடாதிபதிகளுக்கும் சேர்த்துத்தான்! சோழர்களது செங்கோலைப் பெறப் போகிறார் பிரதமர்! இதனை விட தமிழ்நாட்டுக்கு வேறு பெருமை வேண்டுமா? சைவ மடாதிபதிகளை தனிவிமானத்தில் அழைத்துச் செல்கிறார்கள்! இதனை விட தமிழ் மடாதிபதிகளுக்கு வேறு பெருமை வேண்டுமா? என்ற அலப்பறைகள் எல்லாம் அரைமணி நேரத்தில் இற்று நொறுங்கியது!
தமிழ்நாட்டில் இருந்து இலவசமாக 2000 பேரை அழைத்துச் சென்று காசியைச் சுற்றிக் காட்டிவிட்டால் அது தமிழ்ச் சங்கமம் ஆகிவிடுமா? வேட்டி - சட்டையில் பிரதமர் வந்தால் தமிழ் நாட்டை வளர்த்துவிட்டதாகக் கணக்கில் சேருமா? மேடைகளில் திருக்குறள் சொன்னால் போதுமா? பாரதியார் பாட்டை மேற்கோள் காண்பித்தால் எல்லாம் கிடைத்துவிடுமா? “மூத்த மொழி தமிழ்” என்று ஆண்டுக்கு ஒரு முறை சொல்லி விட்டால் போதுமா?இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்னால் காசி தமிழ்ச் சங்கமம் என்று கிளப்பினார்கள். காசி தமிழ் சங்கமம் என்று சொல்லி எழுதப்பட்ட பெயர் பலகையில் தமிழ் இல்லை. இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழியில் வரவேற்பு பலகை வைக்கப்பட்டது. ஒழுங்கான இந்தி, ஒழுங்கான ஆங்கிலத்தில் எழுதி வைத்தவர்களுக்கு ஒழுங்கான தமிழ் தெரியவில்லை. (அருகில் உள்ள படத்தை பார்க்கவும்!) “அனைத்து விருந்தினர்களையும் வரவேற்கிறோம்' என்று கூட தமிழில் ஒழுங்காக எழுதி வைக்கவில்லை. அந்த அக்கறை கூட இல்லை. ஏனென்றால் இதனை ஒருங்கிணைத்தவர் ஒன்றிய அரசின் பாரதீய பாஷா சமீதி அமைப்பாளரான சாமு கிருஷ்ண சாஸ்திரி. இவர் சமஸ்கிருத அறிஞராம். தமிழ்ச் சங்கமம் எப்படி இருந்திருக்கும் எனச் சொல்லத் தேவையில்லை. இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்னால் திருக்குறளைத் தூக்கிக் கொண்டு தருண் விஜய் என்பவர் வந்தார். இந்தியா முழுமைக்கும் கொண்டு போகப் போவதாக தமிழ்நாட்டில் வலம் வந்தார். என்ன ஆனார் தருண் விஜய்? இந்தி என்ற ஒற்றை மொழி நாடாக மாற்ற நினைப்பதைத் திசை திருப்ப நடத்தப்படும் நாடகங்கள் இவை. தமிழைச் சொல்லியாவது தமிழ்நாட்டை ஏமாற்றலாமா என்ற நினைப்பின் வெளிப்பாடுகள் இவை! தமிழ் மொழி என்பது தனித்த மொழி அல்ல. தமிழன் என்ற இனத்தை யும் தமிழ் மொழி தாங்கி நிற்கிறது. தமிழ்நாடு என்ற மாநிலத்தையும் தமிழ் மொழி அடையாளப்படுத்தி நிற்கிறது. எனவே தான், தமிழ்ப்பற்று என்பது தமிழன் பற்றாகவும், தமிழ்நாட்டுப் பற்றாகவும் இருந்தால் மட்டுமே தமிழ் நாட்டில் செல்லுபடியாகும். அதனை உணராமல் காசிக்கு ரயில் விடுவதாலோ, டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாலோ தமிழ் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.
* உலகப் பொதுமறையான திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படுகிறது. * தமிழ் உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் ஆட்சி மொழிகள் ஆக்கப்படுகிறது.
* ஒன்றியப் பணிகளுக்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படும்.
* ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழி ஆக்கப்படும். * சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் ஏற்கப்படும். * கேந்திரிய வித்தியாலயா முதல் ஐ.ஐ.டி. வரையிலான நிறுவனங்களில் தமிழும் பயிற்று மொழி ஆக்கப்படும்.
- என்று சொல்லும் மனமாற்றம் வராத வரை, இவையெல்லாம் ஓரங்க நாடகங்களாகவே தமிழ்நாட்டு மக்களால் ஒதுக்கித் தள்ளப்படும். கூட்டி அள்ளப்படும்! தூக்கி வீசப்படும்!