ஆட்சியாளர்களுக்கே இலக்கணமானார்!
தொழிலாளர் தினத்தன்று மாண்புமிகு முதலமைச்சர் ஆற்றிய உரையின் மூலமாக அனைத்து ஆட்சியாளர்களுக்கும் இலக்கணமாக திகழ்ந்து வருவதை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உணர்த்திவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை தொழிற்சங்கத்தினர் (தி.மு.க. தொழிற்சங்கம் உள்பட) எதிர்த்தார்கள். உடனடியாக அதனை திரும்பப் பெற்றிருக்க முடியும். ஆனால் அனைத்து சங்கத்தின ரையும் மதிப்பவராக முதலமைச்சர் அவர்கள் இருப்பதால் அனைவரையும் கோட்டைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகு அதனை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். இதிலேயே அவரது பெருந்தன்மை உயர்ந்து நின்றது.
கொண்டு வந்ததை அதிகாரத்தின் வெளிப்பாடாக விமர்சித்த சிலர், திரும்பப் பெற்றதும் இது தமிழ்நாடு அரசின் பின்வாங்கல் - பயந்துவிட்டார் முதலமைச்சர் என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இவை அனைத்துக்கும் முதலமைச்சர் அளித்திருக்கும் விளக்கம் என்பது அனைத்து ஆட்சியாளர்களுக்குமான நெறிமுறையாக அமைந்துள்ளது.
“தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தமாகவே இருந்தாலும் தி.மு.க.-வினுடைய தொழிற்சங்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுதான் அதில் வேடிக்கை. அதற்காக நான் அவர்களை பாராட்டவும் கடமைப்பட்டி ருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் எத்தகைய ஜனநாயக மாண்பு கொண்ட அமைப்பு என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு, இதன் மூலம் அது மெய்ப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது" என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள்.
இதனை விட ஜனநாயகப் பண்பு வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இருந்துவிட முடியாது. கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துவிடும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்துவிடுவது இல்லை. மாற்றுக் கருத்தையும் மனப்பூர்வமாகச் சொல்லும் துணிச்சல் உள்ள இயக்கம் தி.மு.க. என்பதை கழகத் தொழிற்சங்கத்தினர் காட்டினார்கள். அத்தகைய உரிமையை அனைவர்க்கும் வழங்கும் தலைவராக முதலமைச்சர் அவர்களும் இருந்து வருகிறார்கள்.
"இத்தகைய விமர்சனம் வந்ததும், உடனடியாக அனைத்து தொழிற்சங்கத் தோழர்களையும் கோட்டைக்கு அழைத்து அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்குப் பிறகு தொழிற்சங்கங்களின் கருத்துக்களைக் கேட்டு உடனடியாக எந்தவித தயக்கமும் இன்றி, துணிச்சலோடு அதைத் திரும்பப் பெற்றிருக்கக்கூடிய அரசுதான் நம்மு அரசு. தொழிற் சங்கத்தினரால் சந்தேகங்கள் எழுப்பப்பட்ட இரண்டே நாளில் அந்த சட்டமுன்வடிவைத் திரும்பப் பெற்ற தொழிலாளர் தோழன் தான் நம்முடைய திராவிட மாடல் அரசு. விட்டுக் கொடுப்பதை நான் என்றைக்கும் அவமானமாகக் கருதியது இல்லை, அதை பெருமையாக கருதிக் கொண்டிருக்கக்கூடியவன்.
ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது துணிச்சல் என்றால் - அதனை உடனடியாகத் திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான், அதை மறந்துவிடக் கூடாது. இப்படித்தான் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு பயிற்சி தந்திருக்கிறார்கள். எனவே, அதனால்தான் அதனை நிறுத்தி வைத்திருக்கிறோம்" என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
‘இது ஒரு கட்சியின் அரசல்ல, ஒரு இனத்தின் அரசு' என்று முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி சொல்லி வருகிறார்கள். 'இது எனது அரசல்ல, நமது அரசு' என்பதையும் சொல்லி வருகிறார்கள். இவை வெறும் வார்த்தைகள் அல்ல, இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து வரும் சொற்கள் என்பதை வெளிப்படுத்தும் எடுத்துக்காட்டாக இந்த விவகாரம் அமைந்துள்ளது.
மிக முக்கியமான பல விவகாரங்களில் கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டு முடிவெடுக்கிறார் முதலமைச்சர். மாற்றுச் சிந்தனைகளுக்கு மதிப்பளிக்கிறார். கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு முரண் பட்ட கருத்துகள் இருக்குமானால் அதற்கு செவி சாய்க்கிறார். சட்டமன்றத்தில் தனிமனித புகழ்ச்சியைத் தவிர்க்கிறார். தன்னைப் பற்றி புகழ்ந்து பேசுவதை தடுக்கிறார். அவைக் குறிப்புகளில் இருந்து நீக்கச் சொல்கிறார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவையில் அமர்ந்து பதில் சொல்கிறார்.
அ.தி.மு.க. உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். 'ஆதாரத்தோடு சொல்லுங்கள்' என்று முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார். 'எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை வைக்கவே கூடாதா?' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்கேள்வி கேட்டபோது, 'எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. தாராளமாக குற்றச்சாட்டுகளை வைக்கலாம். ஆனால் ஆதாரங்களோடு சொல்லுங்கள். பொத்தாம் பொதுவாகச் சொல்லாதீர்கள். குறிப்பிட்டுச் சொல்லுங்கள். அந்த ஆதாரங்களை அவைத் தலைவரிடம் கொடுத்துவிட்டுச் சொல்லுங்கள் என்றுதான் சொல்கிறேன்" என்று விளக்கமளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இவை எல்லாம் ஆட்சியியலின் இலக்கணம் ஆகும். முதலமைச்சரின் இலக்கணம் ஆகும்.
நாட்டையாளும் ஆட்சியாளனாகிய மன்னவன் கற்றறிந்து, செங்கோ லாட்சி புரிந்து, பகிர்ந்துண்டு, சீரிய திட்டங்கள் வகுத்து, நல்லியல்புடைய அமைச்சரவையோடு கூடியிருந்து தம் ஆட்சித்திறத்தால் பொருள் வழங்கி நல்லாட்சி தருபவனாக இருத்தலே நலமுடையதாகும் என்கிறார் வள்ளுவர். இத்தகைய நெறிமுறைகளை உணர்ந்து ஆட்சி செய்பவரை மக்கள், நல்லாட்சியாளர் எனக் கருதுவதோடு மட்டுமல்லாமல் ஒருபடி மேலே சென்று உச்சியில் வைத்துப் போற்றுவர் என்பது திருக்குறளின் அரசியல் நெறி ஆகும்.
"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்"
அத்தகைய முதலமைச்சராக தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைநிமிர்ந்து செயல்பட்டு வருவது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பேறு ஆகும்.