முரசொலி தலையங்கம் (17-02-23)
பெண் போராளி!
திராவிட இயக்கத்தின் சலியாத பெண் போராளியான சத்தியவாணி முத்து அம்மையாரின் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. ‘திராவிட இயக்கத்தின் நன்முத்து’ என்று அவருக்குப் புகழாரம் சூட்டி இருக்கிறார், தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் – தி.மு.க.வின் முதல் பெண் அமைச்சர் –- தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அமைச்சரான முதல் பெண் -– என்ற பெருமைக்குரியவர் அம்மையார் அவர்கள். தனக்கென உறுதியான கொள்கையும், அதில் சமரசம் செய்து கொள்ளாத துடிப்பும் கொண்டவராக அவர் எப்போதும் இருந்துள்ளார்.
1923ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி செங்கற்பட்டில் பிறந்த சத்தியவாணி பள்ளிப்படிப்பை முடித்தபின் ஹோமியோபதி மருத்துவப் படிப்பை படித்தார். இவரது சமூகச் சிந்தனைக்கு அடிப்படைக் காரணம் அவரது தந்தையார். இறுதிவரையில் சுயமரியாதைக்காரராகவே வாழ்ந்து மறைந்தவர் இவரது தந்தை க.நாகைநாதர். தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரது இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் நாகைநாதர் அவர்கள். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், தென்னிந்திய பவுத்த சங்கம், அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கம் ஆகியவற்றுடன் பணியாற்றியவர் நாகைநாதர். தந்தை செல்லும் அனைத்து மாநாடுகளுக்கும் இவரும் செல்வார். அதில் இருந்து உரம் பெற்றவர் சத்தியவாணி அவர்கள்.
காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றி வந்த எம்.எஸ்.முத்து அவர்கள், 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது காங்கிரசில் இருந்து விலகினார். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நாகைநாதர் நினைத்தார். அதன்படி சத்தியவாணி அவர்களை, முத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இயக்கம் சார்ந்த கொள்கைத் திருமணமாக அது நடந்துள்ளது.
1944 இல் நீதிக்கட்சியின் பெயர் திராவிடர் கழகமாக மாற்றப்பட்ட சேலம் மாநாட்டில் சத்தியவாணி முத்து கலந்து கொண்டார். தொடர்ச்சியாக திராவிடர் கழக மாநாடுகளில் கலந்து கொண்டார். நாடு முழுக்க திராவிடர் கழகப் பிரச்சாரம் செய்தார். திராவிடர் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். ‘இருண்டு கிடக்கின்ற இந்தச் சமுதாயத்தில் திராவிடர் கழகம் என்ற ஒளி மூலம் மக்கள் அறியாமையை நீக்கப் பாடுபட அமைந்ததுதான் திராவிடர் கழகம்’ என்று மேடைதோறும் முழங்கினார். திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான போது அதில் முக்கியப் பங்களிப்பாளராக சத்தியவாணி முத்து அம்மையார் இருந்தார். கழகத்தின் கொள்கை விளக்கச் செயலாளராக 1959 முதல் 1968 வரை பணியாற்றினார்.
1953ஆம் ஆண்டு குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக தி.மு.க. கடுமையாக எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தது. அப்போது, தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில், முதலமைச்சராக இருந்த இராஜாஜியின் வீட்டு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக சத்தியவாணி முத்து போராட்டத்தில் ஈடுபட்டார். கொள்கைப்பிடிப்பும், அபாரத் துணிச்சலும் நிறைந்த சத்தியவாணி முத்து, யாரும் எதிர்பாராத நேரத்தில் இராஜாஜியின் வீட்டிற்குள் நுழைந்து தரையில் படுத்து போராட்டத்தைத் தொடர்ந்தார். 1965ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் நிறைமாத கர்ப்பிணியாக சிறை சென்று சிறையிலேயே குழந்தை பெற்றார் சத்தியவாணி முத்து.
1957-ல் தி.மு.க. களமிறங்கிய முதல் சட்டமன்றத் தேர்தலில், வெவ்வேறு சின்னங்களுடன் சுயேச்சை வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற 15 பேரில் சத்தியவாணியும் ஒருவர். 1967ஆம் ஆண்டு பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையிலும், பின்னர் தலைவர் கலைஞரின் அமைச்சரவையிலும் தொடர்ந்து இடம் பெற்றார். சமூகநலம், மீன்வளம், செய்தித்துறை, ஆதிதிராவிடர் நலன் உள்ளிட்ட துறைகளை கவனித்தார்.
இந்தியாவில் அம்பேத்கார் பெயரில் முதன்முதலில் கல்லூரி தொடங்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். அதுவும் அமைச்சராக சத்தியவாணிமுத்து இருந்தபோது, முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் கோரிக்கை வைத்துப் பெற்று, அதனை தனது பெரம்பூர் தொகுதியில் திறந்தார். 1978ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகி, அப்போதைய பிரதமர் சரண்சிங் அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராகப் பதவி வகித்தவர் அவர். பின்னர், “தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்” என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார். 1989 ஆம் ஆண்டு மீண்டும் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினார். 1999ஆம் ஆண்டு நவம்பர் 11-–ஆம் தேதி காலமானார். சத்தியவாணிமுத்துவின் இறுதி ஆசையின்படி, அவரது உடலுக்கு தி.மு.க. கொடி போர்த்தப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
இறுதிவரைக்கும் கொள்கைப் போராளியாக தனது உறுதியை வெளிப்படுத்தி வந்தார். ‘’பெரியாரின் போதனையும், பேரறிஞர் அண்ணா அவர்களின் அடிச்சுவடும் என்னை நிமிர்ந்து நிற்கச் செய்துள்ளது” என்று சொன்னார். பேரறிஞர் அண்ணாவை ‘அன்புத் தெய்வம்’ என்று அழைத்தவர் அவர்.‘’சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும், சமுதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது என்பது வள்ளுவர் காலத்திலிருந்தே வகுக்கப்பட்ட விதி என்றாலும், உண்டாக்கப்பட்டுள்ள சாதிகளையும் சாதிகளினால்
உருவான ஏற்றத் தாழ்வுகளையும் உடைத்து எறிந்து பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க ஒரு கடுமையான போராட்டத்தை மேற்கொண்டவர் தந்தை
பெரியார்” –- என்று எழுதியவர் அவர்.‘’அரிஜன முன்னேற்றத்துக்காக காந்தி பாடுபட்டார். ஆனால் அவரால் மதத்தில் இருக்கும் வேறுபாட்டைத் தொடமுடியவில்லை. பெரியார்தான் வர்ணாசிரம தர்மத்தையே எதிர்த்தார். உயர் ஜாதி இனத்தையே எதிர்த்தார். அனைவர் பகையையும் தேடிக் கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடி, பெரும்பான்மை மக்களையே தனது பகைவராக ஆக்கிக் கொண்டார். அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் பங்கு கொண்டார்கள். இந்த இயக்கம் தான் சமுதாயத்தில் பெரும் புயலை உருவாக்கியது” என்று தந்தை பெரியாரின் சமூக சமத்துவச் சாதனைகளை மிகச் சரியாக அடையாளம் கண்டு எழுதியவர் அம்மையார் சத்தியவாணி முத்து அவர்கள்.
சுயமரியாதை இயக்க காலத்தில் எத்தகைய சுயமரியாதைக் கொள்கையில் உறுதியாக இருந்தாரோ, அதே அளவுக்கு வாழ்வின் இறுதிவரை சுயமரியாதைக்காரராகவே வாழ்ந்து மறைந்த போராளி அவர். சத்தியவாணி முத்துவின் புகழ் வாழ்க!!