பொய்களைத் தகர்ப்பதே திராவிட இயக்கம்!
“பொய்களால் கட்டமைக்கப்பட்டதே திராவிட இயக்கம்” என்ற தலைப்பிட்டு ‘தினமலர்’ நாளிதழ் அரைப்பக்கச் செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழக பா.ஜ.க. ‘சிந்தனையாளர் (!)’ பிரிவு சார்பாக நடைபெற்ற ‘தமிழ்நாடு உரையாடல் 2022’ என்ற கருத்தரங்கில் பேசியவர்களின் உரைத் தொகுப்பு அது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வீச்சும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சியும்தான் அவர்களை இந்தளவுக்குப் புலம்ப வைத்திருக்கிறது என்பதை அதில் பேசியவர்களின் உரைகள் மூலமாக அறியலாம்.
இதுவரை பாரத உரையாடல்களை மட்டுமே நடத்திக் கொண்டு இருந்தவர்களை முதன்முதலாக ‘தமிழ்நாடு’ உரையாடல் நடத்த வைத்ததே திராவிட அரசியலின் வெற்றிதான். இவர்களது உரைகளில் திராவிட இயக்கம் அதிகமாக தாக்கப்படுகிறது. நீதிக்கட்சியின் ஆட்சி விமர்சிக்கப்படுகிறது. பார்ப்பன ரல்லாதார் உயர்வுக்கும், மேன்மைக்குமான சிந்தனை கொண்ட ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி, அதனை ஆட்சியில் அமர்த்திவிட்டது நீதிக்கட்சியாகும்.
அந்தச் சிந்தனையானது அதற்கு முன்பே பலரும், பல காலமாகப் பேசப்பட்டாலும் ஒரு அரசியல் இயக்கம் கண்டு, தேர்தலில் நிற்கும் முன்னெடுப்புகளை முதலில் செய்தது நீதிக்கட்சி என்பதால் இவர்களுக்கு கோபம் அதிகமாக இருக்கிறது. ‘நீதிக்கட்சியின் நீட்சியே நாம்’ என்று ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் அவர்கள் இன்று சொல்லி வருவதும் அவர்களது எரிச்சலுக்குக் காரணம்.
பிறப்பால் வேற்றுமையை விதைத்து, அந்தப் பிறப்பு வேற்றுமைக்கு புனிதங்களைக் கற்பித்து, அந்தப் புனிதங்களை மீறுவது பாவம் என்று சொல்லி, அந்தப் பாவத்தின் தண்டனையே அழிவுகள் என அச்சுறுத்தி, அனைத்து அழிவுகளையும் முன்வினைப்பயன் எனக் காட்டி, ‘இன்றைய துன்ப துயரங்கள் அனைத்துக்கும் பிறப்பொழுக்கம் கெட்டதே காரணம்’ என்று காலம் காலமாகச் சொல்லிவந்த பொய்களைத் தகர்த்தது திராவிட இயக்கம்.
இந்தப் பொய்களால் வாழ்ந்து வந்தவர்கள் அன்றுமுதல் இன்றுவரை புலம்பக் காரணம் ‘திராவிட இயக்கம்.’ அதனால்தான், ‘பொய்களால் கட்டமைக்கப்பட்டதே திராவிட இயக்கம்’ என்று தலைப்புப் போட்டு தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
‘திராவிடர்கள்’ , ‘அடிமைகள்’ , ‘சூத்திரர்கள்’ , ‘பஞ்சமர்கள்’ என்று அடையாளப்படுத்தி கொச்சைப்படுத்தப்பட்ட ‘தமிழர்கள்’ மேன்மைக்கு அன்றும், இன்றும், என்றும் உழைப்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சியம் ஆகும். இதற்கு விதை போட்டது நீதிக்கட்சி. அந்த விதையைக் காத்தது திராவிடர் கழகம். விருட்சமாக்கி வளர்த்து வருவது திராவிட முன்னேற்றக் கழகம்.
கடந்த 100 ஆண்டு கால கல்வி, சமூக, பொருளாதாரப் புரட்சிக்கான அடித்தளத்தை அன்று நீதிக்கட்சி ஆட்சி விதைத்தது. காங்கிரசு ஆட்சிக் காலத்திலும் இந்த திராவிட விதையை சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முதலமைச்சராக வந்த ஓமந்தூர் இராமசாமி அவர்களது ஆட்சியும், பெருந்தலைவர் காமராசர் அவர்களது ஆட்சியும் இந்த சமூகநீதித் தத்துவத்தைக் காத்து நின்றது. இதற்காகவே ‘கருப்புச் சட்டை போடாத இராமசாமி’ என்று ஓமந்தூராரை விமர்சித்தார்கள்.
ஒரு நாளைக்கு ஏழு முறை வழிபாடு நடத்தும் ‘ரமண பக்தரான’ ஓமந்தூராரையே அவர் சமூகநீதியை வலியுறுத்துகிறார் என்பதற்காக இந்து சமய அறநிலையச் சட்டத்தை வலிமைப்படுத்தினார் என்பதற்காக எதிர்த்தார்கள். எனவே, ‘திராவிட இயக்கம்’ மட்டுமே இவர்களால் தாக்கப்படுவது இல்லை, சமூகநீதியை யார் பேசினாலும் தாக்குவதுதான் ஆரிய நீதியாகும். அதுதான் நீதிக்கட்சிக் காலத்தில் தொடங்கியது. ‘திராவிட மாடல்’ ஆட்சியை எதிர்ப்பதற்குக் காரணமும் அதுதான்.
* வகுப்புவாரி உரிமையை 1922 ஆம் ஆண்டே வழங்கியது நீதிக்கட்சி ஆட்சி.
* அனைவர்க்கும் கல்வி என்பதை கட்டாயம் ஆக்க நீதிக்கட்சி அரசு 09.03.1923 அன்று ஒரு அரசாணையை வெளியிட்டது.
* எந்தச் சமூகத்தவரையாவது பாகுபாடு பார்த்து கல்விச் சாலைக்குள் அனுமதிக்க மறுத்தால் அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
* மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்பதை நீக்கியது.
* அதுவரை சென்னை மாகாணத்துக்கு சென்னை பல்கலைக் கழகம் மட்டும்தான் இருந்தது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தை உருவாக்கித் தந்தது நீதிக்கட்சி அரசு.
* கல்லூரி முதல்வர்கள் கையில்தான் மாணவர் சேர்க்கை அதிகாரம் இருந்தது. இதனை மாற்றி கல்லூரிக் குழுக்களை அமைத்தது நீதிக்கட்சி ஆட்சி. தகுதியுடைய அனைவரும் உள்ளே வர இது வாய்ப்பை ஏற்படுத்தியது.
* அனைத்து மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்கியது.
* பட்டியலின மாணவர் கல்விக்கு ஊக்கத்தொகை வழங்கியது.
* மாணவர் விடுதிகள் கட்டித் தந்தது.
* பெண் கல்வியை ஊக்கப்படுத்தியது. பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளி உருவாக்கப்பட்டது.
* இரவுப் பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.
* பஞ்சாயத்து வாசக சாலைகள் திறக்கப்பட்டன.
* அப்போது இருந்த 78 நகராட்சிகளில் 26 நகராட்சிகளில் இலவச கட்டாய ஆரம்பக் கல்வி வழங்கப்பட்டது.
1920 - 1937 வரையிலான நீதிக்கட்சி காலமானது பிரிட்டிஷ் ஆட்சியின் வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் – பட்டியலினத்தவர் பங்கேற்கத் தகுதியானவர்களை உருவாக்கியது. ‘வகுப்புவாரி உரிமை’ என்பதை அரசாங்கத்தின் மாற்றமுடியாக் கொள்கையாக மாற்றியது நீதிக்கட்சியின் ஆட்சி. இத்தகைய ஆட்சியை ‘காலனியாதிக்கத்தின் தொடர்ச்சி’ என்று இப்போதும் குற்றம் சாட்டுகிறார்கள்.
இவர்கள் புனிதமாகக் கட்டமைத்து வைத்திருந்த ‘பொய்களை’ சட்டம் போட்டுத் தடுத்தார்கள் பிரிட்டிஷார். அந்தக் கோபத்தைத்தான் இப்போது பார்க்க முடிகிறது. மீண்டும் அப்படி ஒரு காலத்தை நோக்கிச் செல்லத் துடிப்பதே இது போன்ற பேச்சுகளின் நோக்கமாகவும் அவர்களுக்கு இருக்கிறது. மீண்டும் அந்த ‘புனிதப் பொய்’களின் காலம் நிச்சயம் மலராது ‘திராவிடக் காளைகள்’ பார்த்துக் கொள்வார்கள்!