முரசொலி தலையங்கம் (5.12.2022)
ஒன்றிய அமைச்சர் வழிமொழிகிறார்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில மொழியான தமிழ் மொழி வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதனை வழிமொழிந்திருக்கிறார் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அவர்கள். அவரது வழிமொழிதலை வரவேற்கிறோம். இதற்கான அவரது அனைத்து முயற்சிகளும் வெல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்பதற்காக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்பமை ரமணா அவர்கள் வருகை தந்திருந்தார். அதே மேடையில், அவர் முன்னிலையில் முதலமைச்சர் அவர்கள் மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.
« உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்
« தமிழ் மொழியினையும் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும்.
« பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும்- என்பதுதான் முதலமைச்சர் அவர்கள் வைத்த கோரிக்கைகள் ஆகும். இவை மூன்றுக்கும் அதே மேடையில் உச்சநீதிமன்ற நீதியரசர் அவர்கள் பதில் அளித்தார்கள்.
தமிழை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய முதலமைச்சர் அவர்கள், ‘’ My third request to the Lordships is for allowing the official language of the State, Tamil to be used in the High Court of Madras. Already 4 States namely- Rajasthan, Uttar Pradesh, Bihar and Madhya Pradesh-use their official language of the State in their respective High Courts. This is a long pending and important request of the people and legal community of the State. I take this golden opportunity to place these requests on behalf of the people of the State and I am confident that your Lordships would certainly consider it all favourably.’’ என்று குறிப்பிட்டார்கள்.
இதைத் தொடர்ந்து பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அவர்கள் இதற்கான தனது நிலைப்பாட்டை அறிவித்தார்கள். ‘’It is important that regional languages are made languages of the court because the litigant must understand the process of administration of justice. It should not be like chanting of mantras that no one understands’’ (‘’எவருக்கும் புரியாத வகையில் மந்திரம் உச்சரிப்பதைப் போன்று இல்லாமல், வழக்காடுபவர்கள் நீதித்துறையின் நிர்வாக செயல்பாடுகளை புரிந்து கொள்ளும் வகையில் நீதிமன்றங்களின் வழக்காடு மொழியாக மாநில மொழிகள் ஆக்கப்பட்ட வேண்டியது அவசியம்’’) என்றார் உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் அவர்கள். இது முதலமைச்சர் அவர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.
இதோ இப்போது ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசி இருப்பது இரண்டாவது வெற்றியாகும்.“இந்தியாவில் ஒரே மொழி என்று திணிப்பதை எதிர்க்கிறேன்” என்றும் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசி இருப்பது கூடுதல் மதிப்புக்குரியதாக இருக்கிறது.‘’இந்திய நீதித்துறையில் மாநில மொழிகளை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இந்தியாவில் ஒரே மொழி என்று திணிப்பதை நான் எதிர்க்கிறேன். மாநில மொழிகளுக்கும் நாம் நிச்சயமாக முன்னுரிமை அளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்ற நீதிபதிகளிடம் பேசி வருகிறேன்.
நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளை வழக்காடும் மொழியாக சேர்ப்பதற்கு அனைத்து நீதிபதிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடும்போது பெருமை வாய்ந்ததாகத்தான் இருக்கும். என்னுடைய சட்டம் மற்றும் நீதித்துறையில் மாநில மொழிகளைக் கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் 65 ஆயிரம் பொதுச்சொற்களுக்கு மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய அரசியலமைப்பில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரப்பூர்வமான மொழிகளாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன” என்றும் ஒன்றிய அமைச்சர் சொல்லி இருக்கிறார்.
1967 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள், நீதிமன்ற நடவடிக்கைகளை தமிழில் கொண்டுவருவதற்கான முயற்சிகளைச் செய்தார். நீதியரசர் அனந்த நாராயணன் தலைமையில் சட்டத் தொகுப்புகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கான குழுவை அமைத்தார் பேரறிஞர் அண்ணா. முதலாவது தமிழ்ச்சட்ட அகராதியை 1968 டிசம்பர் 7 அன்று முதல்வர் அண்ணா அவர்கள் வெளியிட்டார்கள். இப்பணியை நீதியரசர் மகராசன் தொடர்ந்தார். அதே மாதம் 12 ஆம் நாள் முதல் மாநிலப் போக்குவரத்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாய அலுவலகம் தமிழில் செயல்படத் தொடங்கியது.
1970 சனவரி 14 ஆம் நாள் முதல் உயர்நீதிமன்றத்துக்கு சார் நிலையில் இயங்கி வரும் உரிமையியல் நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஆகியன சாட்சியங்களைத் தமிழில் பதிவு செய்யத் தொடங்கின. பின்னர் மேற்கூறிய நீதிமன்றங்களில் ஏப்ரல் 13 ஆம் நாள் முதல் தமிழில் தீர்ப்புகள் வழங்குவதற்கும் வகை செய்யப்பட்டது.
உயர்நீதிமன்ற மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் என்று 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார் முதல்வர் கலைஞர். இது தொடர்பாக இந்தியத் தலைமையமைச்சருக்கு கடிதம் எழுதினார். குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ச்சியாக எடுத்த முயற்சிகள் பலரையும் மனமாற்றம் அடைய வைத்துள்ளன. உயர்நீதிமன்றத்தில் மொழிமாற்றம் விரைவில் நடக்கட்டும்!