அச்சத்தில் ஒரு ஆறுதல்!
உலகம் முழுமைக்குமான ஒரேவித அச்சம் என்பது பருவநிலை மாற்றம்தான். இயற்கைக்கு எல்லைகள் கிடையாது. ஒரே வானம் -- ஒரே பூமிதான். எனவே, பருவநிலை மாற்றங்கள் நாளுக்குநாள் அச்சம் தருவதாக அனைத்து நாடுகளுக்கும் அமைந்து வருகின்றன.
இது குறித்து ஐக்கிய நாடுகள் அவை அதிகப்படியாக கவலை கொண்டு விசாரித்திருக்கிறது என்பது முதல் ஆறுதல். இதனை எதிர்கொள்வதற்கான நிதியத்தை ஐ.நா. உருவாக்குவதற்கு ஒப்புதல் அளித்திருப்பது அடுத்த ஆறுதல். கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் இது குறித்து உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்ட கருத்தை எட்டியிருப்பது மிகப்பெரிய ஆறுதல் ஆகும்.
ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளின் 27 ஆவது மாநாடு எகிப்து நாட்டில் இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டின் இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணி நடந்து வந்தது. பருவநிலை இழப்பீட்டு நிதியை உருவாக்குவதற்கு உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
இதன்படி வளர்ந்து வரும் நாடுகளும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளும் பருவநிலை மாற்றம் காரணமாகச் சந்தித்து வரும் பேரிழப்புகளுக்கு இழப்பீடாக நிதி அளிக்கப்பட இருக்கிறது. வளர்ச்சி - தொழில் புரட்சி - தொழில் நுட்ப மேம்பாடு ஆகியவற்றின் இன்னொரு பக்கம் என்பது சுற்றுச்சூழல் குறைபாடாகவும் இருக்கிறது.
வளர்ச்சி அடைந்த நாடுகள் அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வருகின்றன என்பதே புள்ளி விபரங்கள் காட்டும் உண்மை ஆகும். அதிகப்படியான கரியமில வாயு வெளியேற்றம் சுற்றுச்சூழல் குறைபாட்டைத் தாண்டி - பருவநிலை மாற்றத்தையே அதிகமாக உருவாக்குகிறது. பருவநிலை மாற்றம் என்பது அதிகப்படியான பேராபத்து ஆகும்.
புவியின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு (கரியமில வாயு), மீத்தேன், நைட்ரஜன் மோனாக்ஸைடு, நைட்ரிக் ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் அளவு அதிகரித்துள்ளதால் புவி வெப்பம் அடைகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயு இதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இது காலநிலைகளை மாற்றுகிறது. அதிகப்படியான வெயில் அடிப்பதும் - மழை என்பது காலம் தப்பிப் பெய்வதும் அதிகரிக்கிறது. அதிகப்படியான இயற்கைச் சீற்றங்களுக்கும் இது காரணமாக அமைகிறது.
"மனித இனம் நிலைத்திருந்தால்தான் மற்ற வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க முடியும். ஆனால் இன்று மனித இனம் வாழ்வதற்கே ஆபத்து வந்திருக்கிறது. இதனை எதற்காக அலட்சியப்படுத்துகிறீர்கள்?" என்று மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் ஸ்வீடனைச் சேர்ந்த 15 வயது சிறுமி கிரெட்டா துன்பர்க் கேட்டார். நாம் அலட்சியப்படுத்தவில்லை என்பதை இப்போதுதான் ஐ.நா. காட்டி இருக்கிறது.
இத்தகைய நிதியை உருவாக்கி இருப்பதை இந்தியா வரவேற்றுள்ளது. நிறைவுக் கூட்டத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ”எகிப்து மாநாட்டில் பருவநிலை இழப்பீட்டு நிதி உருவாக்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இதற்காக உலகம் நீண்டகாலமாகக் காத்திருந்தது.
பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பருவநிலை மாற்றத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வேளாண்மையிலும் நீடித்த உற்பத்தியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் விவசாயிகளுக்கு அழுத்தம் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பருவநிலை மாற்றத்தில் இருந்து விவசாயி களைக் காப்பதற்கான 4 ஆண்டு செயல்திட்டத்தை இந்தியா செயல்படுத்தவுள்ளது.
அத்திட்டம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காக்கும். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான இலக்குகளில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வளர்ச்சியடைந்த நாடுகள் முன்னின்று செயல்படுத்த வேண்டும்.
அதுவே மாற்றத்துக்கு முக்கிய பங்களிப்பாக அமையும். எரிசக்தி பயன்பாட்டிலும், ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் தங்கள் விருப்பப்படி செயல்பட வளர்ந்து வரும் நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்" என்றும் இந்தியா சார்பில் சொல்லி இருக்கிறார்.
காலநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கம் குறித்து 1990 ஆம் ஆண்டு முதல் பேசப்பட்டாலும் - உலகம் இப்போதுதான் இதனை மிக பதற்றமாக எடுத்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது. 1995 முதல் ஆண்டுதோறும் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடுகள் நடத்தப்படுகிறது. பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள முடியாத நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் செய்யவில்லை.
இந்த மாநாட்டில்தான் பருவ மாற்றத்தால் பாதிக்கப்படும் ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் இழப்பீடு வழங்குவது என்றும் இழப்பு மற்றும் இழப்பீட்டு நிதியை வழங்குவதற்கு அனைத்துலக நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. தொடக்கத்தில் வளர்ந்த நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் போன்ற பிற பொது மற்றும் தனியார் ஆதாரங்களில் இருந்து இத்தகைய நிதி உதவிகள் கிடைக்கும்.
ஏழை நாடுகள் மட்டுமல்லாமல், நடுத்தர வருமானம் உள்ள நாடுகளும் இந்த நிதியைப் பெற முடியும். காலநிலை மாற்றத்தால் 65 விழுக்காடு பூச்சி இனங்கள் அடுத்த நூற்றாண்டுக்குள் அழியும் என்கிறார்கள். அதற்கு அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் மனிதனுக்கே அத்தகைய சிக்கல் ஏற்பட்டு விடாமல் தடுக்க வேண்டுமானால் இது போன்ற பிரச்சினைகள் குறித்த எச்சரிக்கை உணர்வு மிகமிக அவசியம் ஆகும்!