பா.ஜ.க.வின் பசியாட்சி!
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்பது பாரதியின் கூற்று. பா.ஜ.க.வின் இந்தியா எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை பசி குறியீட்டு பட்டியல் சொல்கிறது. இதைப் பார்த்து, இன்று பாரதி இருந்திருந்தால் என்ன மாதிரி பாடி இருப்பார் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் என்று சொல்லப்படுகின்ற உலகப் பசி குறியீட்டுப் பட்டியல் 2022 அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியா 107வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 121 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இதில் இந்தியா 29.1 மதிப்பெண்கள் எடுத்து ஆபத்தான நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு 116 ஆவது இடத்தில் இருந்தது இந்தியா. 2020 ஆம் ஆண்டு 94 ஆவது இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டுகளை விட மிகமோசமான நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இதுதான் பா.ஜ.க. ஆட்சியின் சாதனையாகும்!
ஆசியா கண்டத்தில் இந்தியாவை விட மிக மோசமாக இருக்கும் நாடு ஆப்கானிஸ்தான் மட்டும்தான். அந்த நாடு 109 ஆவது இடத்தில் இருக்கிறது. இலங்கை 64 ஆவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் கூட 99 ஆவது இடத்தில் உள்ளது. மிகமிக மோசமான நிலையற்ற ஆட்சிகள் நடக்கும் நாடுகளோடு ஒப்பிடக் கூடிய நாடாக இந்தியாவைக் கொண்டு போய் நிறுத்த யார் காரணம்?
பசியால் வாடும் மக்களின் நிலையை உணர்த்துகிறது இந்த அறிக்கை. ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் இறப்பு விகிதம், உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாத குழந்தைகள் விகிதம், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத குழந்தைகள் விகிதம் ஆகியவற்றைக் குறியீடுகளாகக் கொண்டு இந்தக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியானதும், இதனை முன் வைத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி என்ன செய்யலாம் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு அத்தகைய பழக்கம் இல்லை. மக்கள் குறித்த அக்கறையும் கிடையாது. உடனடியாக, இந்த அறிக்கையை நிராகரித்து விட்டார்கள். இது தவறான கணக்கீடு என்று சொல்லி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டுள்ளார்கள்.
'சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இது போன்ற அறிக்கைகள் வெளியிடப் படுகிறது. மிகக் குறைவான எண்ணிக்கையிலான மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது. எங்களது பல்வேறு நடவடிக்கைகளை இந்த அறிக்கை கருத்தில் கொள்ளவில்லை. குழந்தைகளின் உடல் நலனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளார்கள். இது அறிவியல் பூர்வமான அறிக்கை அல்ல" என்று ஒன்றிய பெண்கள் குழந்தைகள் நல அமைச்சகம் சொல்லி இருக்கிறது.
இந்த அறிக்கை அறிவியல் பூர்வமானது இல்லை என்றால், உண்மையான அறிக்கையை வெளியிட வேண்டிய கடமை பா.ஜ.க. அரசுக்குத்தானே இருக்கிறது. அந்த அறிக்கையில் இருக்கும் தவறான புள்ளிவிபரங்களைச் சொல்லலாமே?
வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத குழந்தைகளின் விகிதம் 55.5 என அந்த அறிக்கை சொல்கிறது. உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாத குழந்தைகளின் விகிதம் 19.3 என அந்த அறிக்கை சொல்கிறது. இது தவறு என்றால் உண்மையான நிலைமை என்ன என்பதை பா.ஜ.க. அரசு வெளியிடத் தயாரா?
2014 ஆம் ஆண்டில் இருந்து இதுதான் இந்தியாவின் நிலைமையாக இருக்கிறது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. இவராவது எதிர்க்கட்சிக்காரர். அப்படித்தான் சொல்வார்!
ஒன்றிய அமைச்சர்களில் மிக மூத்தவரான நிதின் கட்கரி சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதும் இதனைத்தானே சொன்னார்.
* இந்தியா வளமான நாடாக இருந்தாலும் இங்குள்ள மக்கள் வறுமை, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம், சாதிவெறி, தீண்டாமை மற்றும் பண வீக்கத்தை எதிர்கொள்கிறார்கள்.
* இங்கே பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும்.
* நாட்டில் நகர்ப்புறங்கள்தான் வளர்ந்துள்ளன. கிராமப்புறங்களில் வசதிகள், மற்ற வாய்ப்புகள் இல்லாததால் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி வருகிறார்கள்.
* சமூக ஏற்றத்தாழ்வைப் போலவே பொருளாதார ஏற்றத் தாழ்வும் அதிகமாகி உள்ளது.
* நமது பொருளாதாரம் உலகில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரம் என நினைக்கிறோம். ஆனால் இங்கு ஏற்றத்தாழ்வுகள் அதிகம்.
* சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த சமூகப் பொறுப்பு மற்றும் சமூக உணர்வுடன் பல்வேறு துறைகளில் எவ்வாறு பணியாற்றுவது என்பதுதான் நம் முன் உள்ள மிகப்பெரிய சவால். ன்று சொன்னவர் நிதின் கட்கரிதான். 'இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும் நோக்கத்தோடு' தான் இவரும் இப்படிச் சொல்லி இருந்தாரா?
இந்தியாவே சர்வதேச பட்டினி பட்டியலில் இடம் பெற்றிருக்கும் போது, 'சென்னையில் தரமற்ற அரிசி வழங்கப்படுகிறது' என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல். வாய்க்கு வந்ததை 'அண்ணாமலை' போல பேசிவிட்டுப் போயிருக்கிறார். இவர் தான் இந்தியாவின் உணவுத்துறை அமைச்சர். இவர் பதில் சொல்ல வேண்டியது பட்டினிப் பட்டியலுக்குத்தான். அதைச் சொல்லவில்லை. சொன்னால், பா.ஜ.க. ஆட்சியின் பியூஸ் பிடுங்கப்பட்டுக் கிடப்பது அம்பலமாகிவிடும் என்பது அவருக்குத் தெரியும்.
உணவோ, ஊட்டச்சத்துப் பொருளோ தருவதற்கு அவர்கள் தயாராக இல்லை. மதவாதம், வெறுப்பரசியல் போன்ற மயக்க மருந்துகளை மட்டுமே அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள். வேறு எதுவும் தெரியாது.