‘எய்ம்ஸ்’ கோயபல்ஸ்கள்
திடீரென மதுரைக்கு பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டா வந்தார். ‘எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவிகித கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டது' என்றார். சென்றார்.
'அய்யா கிணத்தைக் காணும்யா' என்று அனைவரையும் அலற விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் நட்டா. கண்ணுக்குத் தெரியாத அரூப கப்ஸாக்களை விடுவதில் பா.ஜ.க.வினர் கைதேர்ந்தவர்கள் என்பது அனைவர்க்கும் தெரியும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில், ரூ.5 கோடி செலவில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்ட நிலையில், 95 சதவிகித கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளதைப் பார்க்கும் போது, பா.ஜ.க. எந்த வகைப்பட்ட கட்சி என்பதை இது உணர்த்துகிறது. தான் பொய் சொல்வது மட்டுமல்ல, அந்தப் பொய்யைத் தன்னைப் போலவே அனைவரும் திருப்பிச் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் கட்சி அது.
மதுரை மாவட்டம் தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 3 ஆண்டுகளாகியும் 5 கோடி ரூபாயில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மாநில அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. திட்ட மதிப்பீடு ஆயிரத்து 977 கோடி ரூபாயாக அதிகரித்த நிலையில், ஓராண்டு கழித்து ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் பெறும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
82 சதவீதம் நிதியான ஆயிரத்து 627 கோடி ரூபாய் ஜப்பானின் ஜைய்கா நிறுவனத்திடம் இருந்து கடன் பெறப்படும். எஞ்சிய 18 சதவிகிதம் மட்டுமே ஒன்றிய அரசு வழங்கும் எனக் கூறப்பட்டது. இந்தச் சூழலிலும், 3 ஆண்டுகளாக எந்தப் பணிகளும் தொடங்க வில்லை. உரிய நேரத்தில் கட்டுமானப் பணி தொடங்காமல் தாமதம் செய்ததால் 713 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டப்படவில்லை என்றாலும், 2021 ஆம் ஆண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
மதுரை தோப்பூரில் சுற்றுச்சுவரை கட்டியதை தவிர ஒன்றிய அரசு வேறு எந்தப் பணியையும் தொடங்கவில்லை. ஆனால், எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்து விட்டதாக மதுரை வந்த பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். இது அவர்களுக்கு கைவந்த கலையாகும். பொய்யைக் கூச்சம் இல்லாமல் சொல்வார்கள். அதிலும் எய்ம்ஸ் விவகாரத்தில் அவர்கள் சொன்ன பொய்கள். கோயபல்சையே மிஞ்சிவிடக் கூடியவை ஆகும்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யுங்கள் என்று முதன்முதலாக 19.6.2014 அன்று தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது. இரண்டு இடங்களைத் தேர்வு செய்து 31.10.2014 அன்று தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது. 28.2.2015 அன்று மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று சொன்னார். 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய நான்கு மாத காலக்கெடுவை நீதிமன்றம் விதித்தது.
2018 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என்று தேதியே குறித்தார்கள். அடிக்கல் நாட்டப்படவில்லை . 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார் பிரதமர். 2021 கழக ஆட்சி அமைந்த பிறகுதான், பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கி இராமநாதபுரத்தில் தற்காலிகமாக அமைத்துள்ளோம். இதுதான் எய்ம்ஸ் சாதனைச் சரித்திரம். ஆனால் நட்டா, 95 சதவிகிதப் பணிகளை முடித்து விட்டோம் என்கிறார்.
எய்ம்ஸ் கட்டிடத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையைத் தேடும் காட்சி ஊடகங்களில் வெளியானது. அங்குள்ள பெயர்ப் பலகை கூட காணவில்லை. “உயர்த்தப்பட்ட நிதிக்கு ஒன்றிய அரசின் அமைச்சரவை ஒப்புதல் தரவில்லை. அதனால் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை' என்று சு.வெங்கடேசன் எம்.பி. சொல்லி இருக்கிறார். “மற்ற மாநிலத்தில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்ட ஒன்றிய அரசு நிதி தரும் போது, தமிழ்நாட்டில் அமையும் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பானில் நிதி பெறுவது ஏன்?' என்று கேட்டுள்ளார் மாணிக்கம் தாகூர் எம்.பி.
சட்டமன்றத் தேர்தலின் போது. ஒற்றைச் செங்கலை வைத்து ஒன்றிய அரசை உலுக்கி எடுத்தார் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அவர்கள். அந்த ஒற்றைச் செங்கல் நாட்டியது மட்டுமே அவர்களது சாதனை என்பதை நட்டா அறிய வேண்டும். மீண்டும் ஒரு முறை அவர் மதுரைக்கு வந்து இதனைப் பார்வையிட வர வேண்டும்.