மின் கட்டணம் - பல உண்மைகள் - 1
மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வேறு வழியில்லை. அதனால்தான் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை!
மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளின் எண்ணிக்கை என்பது 2.37 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ஒரு கோடி நுகர்வோருக்கு - அதாவது 42.19 சதவிகிதம் நுகர்வோருக்கு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம். குடிசை இணைப்புகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் தொடர்கிறது.
200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 55 ரூபாய் கூடுதலாகிறது. 200 யூனிட் வரை மின் கட்டணம் செலுத்துபவர்கள் 26.73 சதவிகிதம் பேர்.
300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 145 ரூபாய் கூடுதலாகிறது. இவர்களின் எண்ணிக்கை 15.30 சதவிகிதம் பேர். அதாவது மொத்தமாக 84.22 சதவிகிதம் பேருக்கு மிகக்குறைவான கட்டண மாற்றமே செய்யப்பட்டுள்ளது.
வீட்டு மின் நுகர்வோருக்கு தேர்தல் வாக்குறுதிப்படி நிலைக்கட்டணம் இரண்டு மாதங்களுக்கு 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 2.37 கோடி வீட்டு மின் நுகர்வோர் பயன் அடைவார்கள்.
மின்சார மானியங்கள் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. குடிசைகள், விவசாயத்துக்காக, கைத்தறிக்காக, விசைத்தறிக்காக, வழிபாட்டுத் தலங்களுக்காக என மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இதில் நூலகங்களும் இம்முறை இணைக்கப்பட்டுள்ளன. நூலகங்களுக்கான மின்சாரம் மானியமாக வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் மானியம் 4 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
சிறு – குறு நிறுவனங்களுக்கு 50 காசுகள் மட்டுமே கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாமல் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் பா.ஜ.க. காட்டும் எதிர்ப்புதான் குமட்டிக் கொண்டு வருகிறது. இந்த மின்கட்டண உயர்வுக்கு அவர்கள் தான் அடிப்படைக் காரணம் ஆகும்.
11.9.2022 நாளிட்ட ‘தினத்தந்தி’யின் தலைப்புச் செய்தியிலேயே உண்மையான காரணம் உரக்கச் சொல்லப்பட்டுள்ளது. ‘‘புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது, புதிய கருவிகள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்சார வாரியத்தின் கடன் அளவு கடந்த பத்து ஆண்டுகளில் 12 ஆயிரத்து 647 கோடியாக உயர்ந்தது. இதனையடுத்து மத்திய ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை மாற்றி அமைக்கும் படி தமிழக மின்சார வாரியத்தைக் கேட்டுக் கொண்டது’’ என்கிறது ‘தினத்தந்தி’. இதுதான் முழுமுதல் உண்மையாகும். இதனை முன்பே நாமும் சுட்டிக் காட்டி இருக்கிறோம்.
ஒன்றிய அரசின் மின் அமைச்சகம், பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறது. கூடுதல் கடன் வாங்க வேண்டுமானால், கட்டணத் திருத்தத்துடன் மின் துறை சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதைச் சொல்லி வருகிறது. அவர்களது ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் கோடி மதிப்பிலான கடனை அனுமதிக்கும் போது, கட்டணத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பது விதியாக உள்ளது. கட்டண திருத்தம் செய்தாததால் இந்த கடன் நிறுத்தி வைக்கப்படும் சூழல் உள்ளது. மேலும் பல்வேறு நிதிகளை பெறுவதற்கு, மின் கட்டணத் திருத்தம் என்பதை கட்டாய விதிமுறையாக ஒன்றிய அரசு வைத்துள்ளது.
எனவே, மின் மாற்றம் செய்யாவிட்டால் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்துக்கு எந்தவிதமான கடனும் கிடைக்காது. இது ஒன்றிய அரசின் விதிமுறை மட்டுமல்ல, ரிசர்வ் வங்கியும் இதனைச் சொல்லி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் மின் விநியோக நிறுவனங்கள் மின் கட்டண மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். மின் கட்டணத்தில் மாற்றம் செய்யாத தமிழ்நாடு அரசின் நிலையை இதற்கான மின் சட்ட அமைப்புகள் கண்டித்தும் வந்தது. இது தான் மின் கட்டணத்துக்கு முழு முழு முதல் காரணம் ஆகும்.
‘‘உற்பத்தி செலவு, அதிகரிப்புக்கு ஏற்ப, சீரான இடைவெளியில் சிறிது சிறிதாக மின் கட்டணத்தை உயர்த்துவதன் வாயிலாகவே, மின் வாரியத்தை நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்துகிறது” என்று பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் முன்பே தான் வெளியிட்ட அறிக்கையில் ஒப்புக் கொண்டு இருந்தார். அவர் சொன்னால் சரி, செந்தில் பாலாஜி சொன்னால் மட்டும் தவறா? (‘தினமலர்’ 20.7.2022) இது பா.ஜ.க. அண்ணாமலை அறிய மாட்டாரா?
‘மின் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தை தமிழகத்தின் கருப்பு நாளாகப் பார்க்கிறேன்’ என்று பேட்டி தந்துள்ளார் அண்ணாமலை. அதற்கு உண்மையான காரணம் ஒன்றிய அரசு தான். இந்தியாவையே அனைத்துத் துறைகளிலும் துக்கநாளாக ஆக்கிக் கொண்டிருக்கும் ஆட்சி பா.ஜ.க. ஆட்சி தான்.
இந்த கட்டண உயர்வுக்கு உண்மையான இன்னொரு காரணம் இருக்கிறது. ஒன்றிய அரசின் மின் அமைச்சகத்தின் அறிக்கையின் படி, 10 சதவிகிதம் வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்துவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரத்தின் சராசரி விலை அதிகரிக்கவே செய்யும்.
வெளிநாட்டு நிலக்கரி என்று ஏன், எதற்காக, யாருக்காகச் சொல்கிறார்கள் என்பதை அண்ணாமலையால் வெளிப்படையாக மறுத்துப் பேச முடியுமா? யாருக்காக இந்தச் சலுகை காட்டப்படுகிறது, யாருடைய ஆதாயத்துக்காகக் காட்டப்படுகிறது என்பதைச் சொல்ல முடியுமா?
ஒன்றிய அரசின் மின்சாரத் திருத்தச் சட்டத்தின் மிக மோசமான தன்மையை மறைக்கவே தமிழக அரசு மீது பழிபோட்டுக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க.
- தொடரும்...