அண்ணல் காந்தி, தந்தை பெரியார், பண்டித ஜவஹர்லால் நேரு. முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் பெயரை முன்மொழிந்துதான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது சுதந்திர தின உரையைத் தொடங்கினார்கள்.
'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் மூலமாக இந்திய விடுதலையை இந்தியா முழுமைக்குமாக ஒருமுகப்படுத்தியவர் அண்ணல் காந்தியடிகள் என்பதால் அவரைக் குறிப்பிட்டார். காந்தியின் தேசவிடுதலைப் போராட்டத்தில் தொடக்கத்தில் பங்கெடுத்தவர் பெரியார். நாட்டு விடுதலையுடன் சேர்ந்து, சமூக விடுதலையும் அடைய வேண்டும் என்று தனது கொள்கையை விரிவுபடுத்தினார் பெரியார்.
அரசியல் விடுதலை கிடைத்தால் மட்டும் போதாது, சமூக சீர்திருத்தமும், மதச்சார்பின்மையும், சகோதரத்துவமும் அவசியம் என்று பிற்காலத்தில் முடிவெடுத்து அது தொடர்பாக அதிகம் பேசத் தொடங்கினார் காந்தி. 'அரசியலில் மதத்தை கலக்கலாம் என்று சொன்னவன் நான்தான். நான் தவறு செய்துவிட்டேன்' என்று பேசினார் காந்தி.
அதனால்தான் மதவாத கூட்டத்தால் காந்தி கொல்லப்பட்டார். அப்போது பெரியார் சொன்னதுதான், ' இந்த நாட்டுக்கு காந்தி தேசம் என்று பெயர் சூட்டுங்கள்' என்பதாகும். இன்னொன்றையும் பெரியார் சொன்னார்: 'இந்த காந்தி அவர்கள் காந்தி, இறந்த காந்தி நம் காந்தி' என்றார் பெரியார்.
இந்திய விடுதலைக்காக பத்தாண்டு காலம் சிறையில் இருந்தவர் நேரு. விடுதலை இந்தியாவில் பதினேழு ஆண்டு காலம் (1947-64) தலைமை அமைச்சராக இருந்தவர் நேரு. இன்றைக்கு 75வது ஆண்டு சுதந்திர தினவிழாவைக் கொண்டாடுகிறோம் என்றால் அதற்கு முழுமுதல் காரணம் நேருதான். வேறுபாடுகளும், மாறுபாடுகளும் கொண்ட நாட்டை தனது ஒற்றுமை உள்ளத்தால் ஒருங்கிணைத்தவர் நேரு.
இந்தியா விடுதலை பெற்ற போது வெளிநாட்டு பத்திரிக்கைகள், 'ஓராண்டு கூட இவர்கள் ஒன்றாக இருக்க மாட்டார்கள்' என்று எழுதியது. 'இந்தியர்களுக்கு அரசியல் நிர்வாகத்தை நடத்தத் தெரியாது' என்று சில பிரிட்டிஷ் அரசியல் தலைவர்கள் சொன்னார்கள். ஆனால் அவர்களின் ஆசையில் மண்ணைப் போட்டு, நாட்டை பொன்னைப் போல பாதுகாத்தவர் நேரு.
காங்கிரசுக்கு வெளியில் இருந்தவர்களையும் அமைச்சரவைக்கு உள்ளே இணைத்துக் கொண்டவர் நேரு. அண்ணல் அம்பேத்கரும், இந்து மகாசபை முகர்ஜியும் நேரு அமைச்சரவையில் அங்கம் வகித்தார்கள். மதச்சார்பின்மையை தனது ஆட்சியின்குறிக்கோளாகச் சொன்னார் நேரு.
மொழிவாரி மாகாணங்களை உருவாக்கினார். 'இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி திணிக்கப்பட மாட்டாது' என்று சொன்னவர் நேரு. அவரது ஆட்சி காலத்தில்தான் 33 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலமாக இந்தியா முழுமைக்குமான திட்டங்களைத் தீட்டுவதை வெளிப்படையாக ஆக்கினார். அதனால்தான் நேருவின் பெயரை மறக்காமல் குறிப்பிட்டார் முதலமைச்சர் அவர்கள்.
நான்காவதாக அவர் குறிப்பிட்டது முத்தமிழறிஞர் கலைஞரை. அதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம், ஆகஸ்ட் 15 அன்று தேசியக் கொடியை முதலமைச்சர்கள் ஏற்றலாம் என்ற உரிமையை இந்தியாவில் உள்ள அனைத்து முதலமைச்சர்களுக்கும் பெற்றுத் தந்தவர் கலைஞர். கொடியேற்றும் உரிமையை அனைத்து முதலமைச்சர்களுக்கும் பெற்றுத் தந்த சுயமரியாதை மாநில சுயாட்சி கூட்டாட்சித் தத்துவத்தின் தலைமகன்தான் கலைஞர்.
அதனால்தான் அண்ணல் காந்தி, தந்தை பெரியார், நேரு, கலைஞர் ஆகிய நான்கு பேர் பெயரை தனது உரையில் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நேருவின் பெயரை பிரதமர் நரேந்திரமோடி தனது உரையில் குறிப்பிடாதது பலத்தசர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. காந்தியடிகள் கட்சி எல்லைகளைக் கடந்ததைப்போல நேருவும் கட்சி எல்லைகளைக் கடந்தவர்தான். அவரது பத்தாண்டு காலத் தியாக வாழ்க்கைக்கு அத்தகைய மரியாதை நிச்சயம் தரப்படவே வேண்டும்.
நேரு அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் அரசியல் ரீதியாக அவரை விமர்சித்துள்ளது திராவிட இயக்கம். அவருக்கு எதிரான போராட்டங்களேகூட நடந்துள்ளன. ஆனால் நேருவுக்கு வரலாற்றில் தரவேண்டிய மதிப்பும் மரியாதையும் என்பது மிகமிக முக்கியமானது.
மதத்தால், மொழியால், இனத்தால், ஜாதியால் பிளவுபட்டுக் கிடந்த இந்திய நிலப்பரப்பை ஒற்றுமைப்படுத்துவதற்கு 1947 ஆம் ஆண்டில் இருந்த ஒரே ஆயுதம் என்பது அரசியலமைப்புச் சட்டம்தான். அடையாளங்களில் விடுபட்ட குடியுரிமையின் அடையாளமாக அரசியலமைப்புச் சட்டம் இருந்தது. தேசத்துக்கும் மக்களுக்குமான உறவை சட்டத்தின் மூலமாக உருவாக்க முனைந்தவர் நேரு.
“நாட்டின் அனைத்து சிறுபான்மையினரையும் இந்த அரசில் முழுதும் தங்கள் இல்லத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியும், அரசியல் அடிப்படையிலான பார்வையில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என அழைக்கப்படுபவர்கள் இடையேயான அனைத்து வேறுபாட்டு உணர்வை நீக்கியும், இந்தியாவை ஒன்றுபடுத்துவது மட்டும்தான் நம் உண்மையான நீண்ட காலக் கொள்கையாக இருக்க முடியும்” என்று முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார் பிரதமர் நேரு.
'எப்போதும் மக்களைச் சார்ந்தே இருக்க வேண்டும்' என்பதைச் சொல்லிக் கொண்டே இருந்தார் நேரு. 'இரண்டு வர்க்கத்தினரின் மோதலை நாங்கள் தூண்ட மாட்டோம். ஆனால் எங்கே இருவர் நலன்களும் மோதுகிறதோ அங்கே மக்கள் நலனின் பக்கம் நாங்கள் நிற்போம்' என்றவர் நேரு. அத்தகைய நேருவை மறத்தல் தகுமோ?!