முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 22, 2022) தலையங்கம் வருமாறு:
மின் கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய உண்மையான சூழ்நிலையை உருவாக்கியது ஒன்றிய அரசும், கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியும்தான். இதனை மறைப்பதற்காகவும் திசை திருப்புவதற்காகவும் தான் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள்.
முழு முதல் காரணம்:
ஒன்றிய அரசின் மின் அமைச்சகம், பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறது. கூடுதல் கடன் வாங்க வேண்டுமானால், கட்டணத் திருத்தத்துடன் மின் துறை சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதைச் சொல்லி வருகிறது. அவர்களது ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான கடனை அனுமதிக்கும் போது, கட்டணத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பது விதியாக உள்ளது. கட்டணத் திருத்தம் செய்யாததால் இந்தக் கடன் நிறுத்தி வைக்கப்படும் சூழல் உள்ளது. மேலும் பல்வேறு நிதிகளை பெறுவதற்கு, மின் கட்டணத் திருத்தம் என்பதை கட்டாய விதிமுறையாக ஒன்றிய அரசு வைத்துள்ளது.
எனவே, மின் மாற்றம் செய்யாவிட்டால் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்துக்கு எந்தவிதமான கடனும் கிடைக்காது. இது ஒன்றிய அரசின் விதிமுறை மட்டுமல்ல, ரிசர்வ் வங்கியும் இதனைச் சொல்லி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் மின் விநியோக நிறுவனங்கள் மின் கட்டண மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். மின் கட்டணத்தில் மாற்றம் செய்யாத தமிழ்நாடு அரசின் நிலையை இதற்கான மின் சட்ட அமைப்புகள் கண்டித்தும் வந்தது. இதுதான் மின் கட்டணத்துக்கு முழு முழு முதல் காரணம் ஆகும்.
இதை ஏதோ மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மட்டும் சொல்லவில்லை. இதனை பா.ஜ.க.வின் மாநிலத் துணைத் தலைவராக இருக்கக் கூடிய திருப்பதி நாராயணனும் தனது அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளார். ‘மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு காரணமா?’ என்ற தலைப்பில் அவரது அறிக்கையை ‘தினமலர்’ ( (20.7.2022) நாளிதழ் கட்டம் கட்டி வெளியிட்டுள்ளது.
அதில் உள்ள வரிகள்..."உற்பத்தி செலவு, அதிகரிப்புக்கு ஏற்ப, சீரான இடைவெளியில் சிறிது சிறிதாக மின் கட்டணத்தை உயர்த்துவதன் வாயிலாகவே, மின் வாரியத்தை நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது" என்கிறார் திருப்பதி நாராயணன். அவர் சொன்னால் சரி, செந்தில் பாலாஜி சொன்னால் மட்டும் தவறா?
இரண்டாவது காரணம்:
ஒன்றிய அரசின் மின் அமைச்சகத்தின் அறிக்கையின் படி 10 சதவிகிதம் வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்துவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதனால் மின்சாரத்தின் சராசரி விலை அதிகரிக்கவே செய்யும். வெளிநாட்டு நிலக்கரி என்று ஏன், எதற்காக, யாருக்காகச் சொல்கிறார்கள் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அனைவரும் அறிவார்கள்.
மூன்றாவது காரணம்:
அ.தி.மு.க.வின் பத்தாண்டு கால ஆட்சியில் அதளபாதாளத்தில் கவிழ்ந்து கிடந்தது மின் துறை ஆகும். மின் மிகை மாநிலம் என்று சும்மா சொல்லிக் கொண்டு, அநியாயவிலைக்கு மின்சாரத்தை விலை
கொடுத்துவாங்கி மின் துறையை கடனில் மூழ்கிய துறையாக மாற்றிவிட்டது அ.தி.மு.க. அரசு. புதிய மின் திட்டங்களும் இல்லை.2011 ஆம் ஆண்டு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்துக்கு இருந்த கடன் என்பது ரூ.43,493 கோடி ஆகும். அ.தி.மு.க. ஆட்சியை விட்டு இறங்கும் போது ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து, 823 கோடியை கடனாக வைத்து விட்டு கம்பி நீட்டினார்கள். இதுதான் மிகமுக்கியமான காரணம் ஆகும். வட்டியே ரூ.16 ஆயிரம் கோடி கட்டும் நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். அதிகரித்த மின்சாரக் கடன் சுமையே இதற்கு அடிப்படையான காரணம்.கடந்த பத்து ஆண்டுகளில் மின்சார வாரியத்தின் வட்டிச் சுமை ரூ.4,588 கோடியில் இருந்து ரூ.16,511 கோடியாக உயர்த்தியது தான் அ.தி.மு.க. ஆட்சியின் மகத்தான சாதனையாகும்.
இப்படி மூன்று முக்கியமான காரணங்களுக்கும் காரணமானவை பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் தான். இதனை மக்கள் உணர்ந்துவிடக் கூடாது என்பதற்காக திசை திருப்பவே போராட்டம் அறிவிக்கின்றன அந்தக் கட்சிகள்.
101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு மாதத்துக்கு ரூபாய் 27.50 மட்டுமே அதிகரிக்கிறது. அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் 100 யூனிட் வரைக்கும் விலையில்லா மின்சாரத்தை பயன்படுத்தலாம். இதன் மூலமாக 1 கோடி மின் நுகர்வோர்கள் பயனடைகிறார்கள். ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில்தான் மின் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தொடர் முயற்சிகளின் காரணமாக கடந்த நிதியாண்டில் ரூ.2,200 கோடி சேமிப்பு எட்டப்பட்டுள்ளது. நுகர்வோர் தங்களது கோரிக்கைகளைச் சொல்வதற்கு 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ இயங்கி வருகிறது. 1 லடசம் இலவச விவசாய மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டு காலத்தில் மாநிலம் முழுவதும் 9.59 லட்சம் பணிகள் மின் துறையால் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 42 சதவிகிதம் மின் நுகர்வோருக்கு மின் கட்டணத்தில் மாற்ற மில்லை என்பதே உண்மை.குஜராத் மாநிலத்தில் 100 யூனிட்டுக்கு 515 ரூபாய் கட்டணம். தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை கட்டணம் இல்லை.குஜராத்தில் 200 யூனிட்டுக்கு 1045 ரூபாய். தமிழ்நாட்டில் 225 ரூபாய் தான்.குஜராத்தில் 300 யூனிட்டுக்கு 1595 ரூபாய். தமிழ்நாட்டில் 675 ரூபாய்.குஜராத்தில் 400 யூனிட்டுக்கு 2190 ரூபாய். தமிழ்நாட்டில் 1125 ரூபாய்.
இதை வைத்துப் பார்த்தால் குஜராத் பா.ஜ.க. தான் போராட்டம் நடத்த வேண்டும். ‘தமிழ்நாடு அளவுக்கு கட்டணத்தைக் குறையுங்கள்’ என்று குஜராத் பா.ஜ.க. தான் முழக்கம் எழுப்ப வேண்டும். அண்ணாமலை அங்கு போய்தான் முழக்கம் எழுப்ப வேண்டும்