முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூன் 18, 2022) தலையங்கம் வருமாறு:
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு செய்யும் செயல்களைக் கேள்விப்படும்போது பதற்றமாகவே இருக்கிறது. அதிகாரத்தை வைத்து எத்தகைய ஆணவச் செயலையும் செய்யலாம் என்பதைக் காட்டிக் கொண்டு இருக்கிறது அந்த மாநில அரசு.
இறைத்தூதர் முகமது நபியை விமர்சித்துப் பேசிய பா.ஜ.க. ( நுபுர் சர்மா,நவீன் குமார் ஜிண்டால்) செய்தித் தொடர்பாளர்களால் இந்தியாவுக்கு உலகம் முழுவதும் தலைகுனிவு ஏற்பட்டது. உலகின் பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அதன்பிறகு அவர்கள் இருவரையும் பொறுப்பை விட்டு நீக்கியது பா.ஜ.க. தலைமை. அத்தோடு தனது கடமை முடிந்ததாக அந்தக் கட்சி நினைத்தது.உண்மையில் அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
இத்தகைய அவதூறுக் கருத்துக்களுக்கு எதிராக வடமாநிலங்களில் பலத்த கண்டனப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைக் குறை சொல்லமுடியாது. உத்தரப்பிரதேசத்தில் 304 பேர் கைது செய்யப்பட்டனர்.அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரின் வீடுகளைஆளும் பா.ஜ.க. அரசே இடித்துத் தள்ளி இருக்கிறது. அவர்களுக்குத் தெரிந்தது இடித்துத் தள்ளுவது மட்டும் தான். எதனையும் உருவாக்கத் தெரியாது. உருக்குலைப்பதில் தேர்ந்தவர்கள் என்பதை உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
சாரன்பூர் என்ற இடத்தில் நடந்த போராட்டம் தொடர்பாக முசாமில் மற்றும் அப்துல் வாகிர் ஆகியோரின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. பிரக்யாராஜ் பகுதியில் நடந்த போராட்டம் தொடர்பாக ஜாவித் முகமது என்பவரின் வீட்டின் முன்பகுதிகள் இடிக்கப்பட்டன. இவர்கள் போராட்டம் தொடர்பாக கைதாகி சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாகக் கூறி, உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து உ.பி. போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்கள், வீட்டை ஆக்கிரமித்துக் கட்டியதாக இப்போதுதான் உ.பி. அரசுக்குத் தெரிய வந்துள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றிவிட்டு பாக்கி இருந்தது இவர்கள் வீடு மட்டும் தான் போலும்!
கான்பூர் போராட்டத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஜாபர் ஹயத்தின் நெருங்கிய உறவினர் முகமது இஷ்தியாக்கின் ஸ்வரூப் நகர் வீட்டின் முன்புறம் இடிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 இடங்களில் வன்முறை நடந்துள்ளதாகவும் அதற்குக் காரணமானவர்கள் இவர்கள்தான் என்றும் சொல்லி இந்த நான்கு பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய இடிப்புக்கு வேறு காரணம் இருக்க முடியாதா? என்றால் - இருக்க முடியாது. அதனை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள். உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் ரிதியுங்ஜய் குமார் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில், புல்டோசரைக் கொண்டு வீடுகளை இடிக்கும் படத்தைப் பகிர்ந்து, ‘ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் அடுத்த நாள் சனிக் கிழமை வரும்' என எச்சரித்து இருந்தார்.
அதேபோல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கப் பிரதிநிதியும், மாணவர் செயற்பாட்டாளருமான ஆஃப்ரின் பாத்திமாவின் வீட்டையும் உத்தரப்பிரதேச அரசு இடித்துத் தள்ளியது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ளது அஃப்ரீன் பாத்திமாவின் வீடு. இவரது தந்தை ஜாவேத் முகமது வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சியின் தலைவர்.பிரயாக்ராஜில் நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறைக்கு சதித்திட்டம் தீட்டியதாக ஜாவேத் மீது அரசு குற்றம்சாட்டுகிறது. முந்தைய நாள் இரவு, அவர்களுக்கு ஒரு தாக்கீது கொடுக்கப்படுகிறது. “நாளைக் காலையில் உங்கள் வீட்டை இடிக்கப் போகிறோம்” என்று சொல்லி விட்டு, மறுநாள் காலையில் இடிக்கிறார்கள். பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்பாத்திமா. அதனாலேயே அவர் தொடர்ச்சியாகக் குறி வைக்கப்பட்டார்.
ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதற்கு இது ஒருவிதமான வழிமுறையாக பா.ஜ.க. மாநில அரசு பின்பற்றி வருகிறது. இந்தச் செய்தி இந்தியாவை அதிர்ச்சி அடைய வைக்கும் செய்தி ஆகும். இதற்கு எதிராக உத்தரவுகள் பிறப்பிக்குமாறு உச்சநீதிமன்றத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதினார்கள். உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்.
“ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயலை உ.பி. அரசு செய்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் கருத்துக்கு செவி சாய்க்காமல் அடக்குமுறையை அரசு கையாண்டு வருகிறது. போராட்டக்காரர்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்த காவல் துறைக்கு அரசே ஊக்கமளித்துக் கொண்டு இருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் இடிக்கப்படுகின்றன. இந்தக் காணொலிகள் தேசத்தின் மனசாட்சியை உலுக்கி வருகின்றன.
மக்களின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் உ.பி. மாநில அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இது கொடூரமான ஒடுக்கு முறையாகும். அமைதியாகப் போராடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்குப் பதிலாக - மாநில அரசின் நிர்வாகமே வன்முறையை ஏவி விடுகிறது. மாநில அரசின் இந்த கொடூரமான நடவடிக்கையை ஏற்க முடியாது. இது சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பது ஆகும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமையை கேலி செய்வது ஆகும். நீதித்துறையின் திறமையை சோதிப்பது ஆகும். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்” என்று அவர்கள் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை நீதிமன்றத்துக்கு இருக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். உரிய நேரத்தில் நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கவில்லை என்றால் அது சரியாக இருக்காது என்று தெரிவித்த நீதிபதிகள், அரசு தரப்பில் பதிலளிக்க நோட்டீல் அனுப்புமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை, அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர். அதுவரை கட்டிடம் இடிப்பு உள்ளிட்ட எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது என்றும் உத்தரப்பிரதேச அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
பா.ஜ.க. கையில் அதிகாரம் போனால் என்ன நடக்கும் என்பதற்கு உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் காட்சியே சாட்சி!