முரசொலி தலையங்கம்

“கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள் என்று சொல்வதற்கான முழு உரிமையும் திமுகவுக்கே உண்டு” : முரசொலி தலையங்கம் !

சட்டமன்றம், நாடாளுமன்றம், மக்கள் மன்றம் ஆகிய அனைத்தின் மூலமாகவும் தனது எதிர்ப்பை கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் கலைஞர் அவர்கள் காட்டினார் என்பது வரலாறு.

“கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள் என்று சொல்வதற்கான முழு உரிமையும் திமுகவுக்கே உண்டு” : முரசொலி தலையங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்பதற்கான ஆதாரங்கள் கொண்ட கடிதத்தை பிரதமர் இந்திராவுக்கு அனுப்பிவிட்டு - மீண்டும் டெல்லி சென்றார் முதல்வர் கலைஞர்.

* ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண் சிங்கை முதலமைச்சர் கலைஞர் சந்தித்துப் பேசினார். “கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பதற்குத் தமிழக அரசு சம்மதிக்காது” என்று தெளிவுபடுத்தினார் முதல்வர். “இது விஷயமாக மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் கேவல் சிங் உங்களைச் சந்தித்துப் பேசுவார்” என்றார் ஸ்வரண் சிங்.

அதன்படியே வெளியுறவுத்துறைச் செயலாளர் கேவல் சிங் முதலமைச்சர் கலைஞரைச் சந்தித்து கச்சத்தீவு குறித்துப் பேசினார். அப்போதும் கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்துப் பேசிய முதலமைச்சர் கலைஞர், கச்சத்தீவு விவகாரத்தில் இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், அதில் உறுதி மாறாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

* 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா டெல்லி வந்தார். அப்போது, பிரதமர் இந்திராவுக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதம் அனுப்பினார்கள். கச்சத்தீவு இந்தியாவுக்கே உரிமையானது என்பதை நிலைநாட்டக் கோரிக்கை வைத்தார் கலைஞர்.

* வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங், சென்னை வந்து முதல்வர் கலைஞரைச் சந்தித்தார். அவரிடமும் கச்சத்தீவை இலங்கைக்குத் தருவதை கடுமையாக எதிர்த்து முதல்வர் கலைஞர் பேசினார்.

* இவை அனைத்தையும் மீறித்தான் இந்தியப் பிரதமரும், இலங்கைப் பிரதமரும் 1974 ஜூன் 26 ஆம் நாள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார்கள்.

* “கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததன் மூலமாக இந்தியாவுக்கு அல்ல, தமிழ்நாட்டுக்குத்தான் முதல் ஆபத்து” என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் அவர்கள் நாடாளுமன்றத்தில் கர்ஜித்தார்.

* “தமிழக அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு உகந்ததாக அமையாது” என்று நாடாளுமன்றத்தில் அப்துல் சமது எச்சரித்தார்.

* ஒப்பந்தம் கையெழுத்தான மூன்றாவது நாள் - அதாவது ஜூன் 29 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கலைஞர் அவர்கள் கூட்டினார்கள். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தாக வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும்தான்.

“கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள் என்று சொல்வதற்கான முழு உரிமையும் திமுகவுக்கே உண்டு” : முரசொலி தலையங்கம் !

* 1974 ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் கலைஞர். “இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுக்கும் முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசோடு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது” - என்பதே கலைஞரின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஆகும்.

* “தமிழ் மக்களின் உணர்வை மதித்திடுங்கள் என்றோம். இந்தியாவுக்கே சொந்தமென்பதற்கான ஆதாரங்கள் தேடப்படுகின்றன என்றார்கள். நமக்கே சொந்தமென்பதை மெய்ப்பிக்கும் ஆதாரங்களைத் திரட்டி அனுப்பி வைத்தோம். வலியுறுத்தினோம். விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று நாடாளுமன்றத்தில் வன்மையாகப் பேசி நம்ப வைத்தார்கள். ஆனால் கச்சத்தீவை இலங்கைக்கே சொந்தமென்று அறிவித்தார்கள்,பதைத்தோம், துடித்தோம்” என்று முதல்வர் கலைஞர் அவர்கள் சட்ட மன்றத்தில் பேசினார்கள்.

* “மாநிலம் விட்டு மாநிலம் ஒரு பகுதியை மாற்றுவதற்கு சட்டமன்றத்தின் ஒப்புதல்தேவையாம். ஆனால் ஒரு மாநிலத்தின் பகுதியை மாற்றாருக்கு தானம் தர மட்டும் சட்டமன்றங்களின் ஒப்புதல் தேவையில்லையாம்” என்று சட்டமேலவையில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்கள் பேசினார்கள். சட்டமன்றங்களின் ஒப்புதல் இல்லாமல் எப்படி இந்த ஒப்பந்தம் நிறைவேற்றலாம் என்பதே அவரது கேள்வியாகும்.

* ஒப்பந்த நகலானது நாடாளுமன்றத்தில் ஜூலை 23 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது கடுமையாக எதிர்த்துப் பேசினார் தி.மு.க. உறுப்பினர் இரா.செழியன். ‘இது கீழ்த்தரமான ஒப்பந்தம்’ என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்தார்.

* அமைச்சர் ஸ்வரண்சிங் அவர்களிடம், “தமிழக அரசு இதற்கு சம்மதம் தெரிவித்ததா?” என்று கேட்கப்பட்டபோது, அவரால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. ‘தமிழக அரசிடம் பேசினோம்’ என்று மட்டுமே சொன்னார்.

* “கச்சத்தீவு விவகாரம் குறித்து எங்களிடம் கருத்துக் கேட்டு கடிதம் எழுதினார்களே தவிர, இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. நானே வலியச் சென்றுதான் பேசினேன்’’ என்று முதல்வர் கலைஞர் அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.

* கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு எதிரான கண்டனக் கூட்டங்களை தி.மு.க. நடத்தியது. ஜூலை 14ஆம் தேதி தொடங்கி 45 முக்கிய நகரங்களில் இக்கூட்டங்களை நடத்துவதாக கழகம் அறிவித்தது.

* தஞ்சையில் கலைஞரும், சென்னையில் பேராசிரியரும் கண்டன உரையாற்றினார்கள். அப்போது திருப்பெரும்புதூர் நகரத்தில் நடந்த கூட்டத்தில் பேசியவர்தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! இன்றைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அன்றைய தினம் விருத்தாசலத்தில் பேசினார்.

* “தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே அழிவு தரும் இடமாக கச்சத்தீவுமாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம்” என்று பேராசிரியர் அன்பழகனார் பேசினார்.

* இது அண்டை நாட்டு விவகாரம் - இதில் மாநில அரசு தலையிடுவதற்கோ, கருத்துச் சொல்வதற்கோ, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதற்கோ உரிமை இல்லை என்பதே அன்றைய பிரதமர் இந்திராவின் நிலைப்பாடாக இருந்தது. அதனை மீறியே தனது சக்தி முழுமையையும் கலைஞர் அவர்கள் பயன்படுத்தினார்கள்.

( கச்சத்தீவு குறித்த முழு உண்மைகளையும் விரிவாக ஆர்.முத்துக்குமார் நூலாக எழுதி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் இந்தத் தலையங்கத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன!) சட்டமன்றம், நாடாளுமன்றம், மக்கள் மன்றம் ஆகிய அனைத்தின் மூலமாகவும் தனது எதிர்ப்பை கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் கலைஞர் அவர்கள் காட்டினார் என்பது வரலாறு.

எனவே, கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள் என்று சொல்வதற்கான முழு உரிமையும் தி.மு.க.வுக்கே உண்டு. தாரை வார்க்கப்பட்ட காலத்தில் அதற்கு எதிராக திருப்பெரும்புதூரில் - 1974 ஆம் ஆண்டே பேசியவர் என்ற அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கே முழுத் தகுதி உண்டு.

banner

Related Stories

Related Stories