ரூ.5,855 கோடி மதிப்பிலான துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு உயர்மட்டப் பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகிய இருவர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. தமிழக பொதுப்பணி - நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழக மற்றும் ஒன்றிய அரசுத் துறை அதிகாரிகள் உடனிருக்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா, வரும் 26 ஆம் தேதி நடக்க இருப்பதாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இவை அனைத்தும் மகிழ்ச்சிக்குரிய செய்திகளாக அமைந்துள்ளன. ஆனால், மதுரவாயல் நமக்கு பல்வேறு மலரும் நினைவுகளை உருவாக்கி இருக்கிறது. இவற்றுள் பல கசப்பான நினைவுகள்தான். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் திறக்கப்பட்டு - பத்தாண்டுகளாக தமிழகத்தின் - இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்குத் தூணாக இருந்திருக்க வேண்டிய திட்டத்தை ஜெயலலிதா தன்னுடைய வறட்டுப் பிடிவாதத்தின் காரணமாக முடக்கி வைத்தார்.
“ஜெயலலிதா தனக்கு வாக்களித்த மக்களுக்குச் செய்த மாபெரும் நன்மை இது” என்று தலைவர் கலைஞர் அவர்கள் நொந்து போய் அறிக்கை வெளியிட்டார்கள் 2011 ஆம் ஆண்டு! அந்தளவுக்கு இந்தத் திட்டத்தை முடக்கி வைக்கக் காரணமாக இருந்தவர் ஜெயலலிதா. இந்த திட்டம் நிறைவேறினால் முதல்வர் கலைஞருக்குப் பெயர் வந்துவிடும், தி.மு.க.வின் சாதனைச் சரித்திரத்தில் இந்தப் பாலம் முக்கியமானதாக இருக்கும் என்று நினைத்து முடக்கி வைத்தார் ஜெயலலிதா.
2007 ஆம் ஆண்டு மதுரவாயல் முதல் எண்ணூர் துறைமுகம் வரை பாலம் அமைப்பதற்கான திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழக அரசு தீட்டியது. அன்றைய திட்ட மதிப்பு 1,655 கோடி ரூபாய். அப்போதே கட்டப்பட்டு இருந்தால் இத்தொகையுடன் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கும். ஆனால் பத்தாண்டு காலத்தில் பொருள்களின் மதிப்பு கூடிய நிலையில் இன்றைய திட்ட மதிப்பு 5,855 கோடி ரூபாய் ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய மாபெரும் பொருள் இழப்புக்குக் காரணம், ஜெயலலிதாவின் வறட்டு மனோபாவம் தான்.
மதுரவாயல் - எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் சுமார் 20 கிலோ மீட்டர் நீளம், 20-மீட்டர் அகலம் கொண்ட மேம்பாலத் திட்டத்திற்கு 2007- ஆம் ஆண்டு அனுமதி பெறப்பட்டது. இத்திட்டத்திற்கு 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தது. அதனை தொடர்ந்து, பணிகள் தொடங்கப்பட்டு மேம்பாலத்துக்கான தூண்களும் மதுரவாயல் பகுதிகளில் அமைக்கப்பட்டன.
2011 ஆம் ஆண்டு ஆட்சி மாறியது. காட்சிகளும் மாறியது. அப்படியே நிறுத்தி வைக்கச் சொல்லி விட்டார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. “கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்படும்'' எனக்கூறி திட்டத்தை முடக்கினார் ஜெயலலிதா. சுற்றுச் சூழல் குறித்த இவரது அக்கறையை நாடு அறியும். ‘சுனாமி வராமல் தடுக்க கடற்கரையில் தடுப்புச் சுவர் எழுப்ப இருக்கிறோம்' என்று சொன்ன அதிபுத்திசாலி அவர்.
அவரது அரசியல் உள்நோக்கங்களை மறைப்பதற்கு சுற்றுச் சூழல் ஒருகாரணம் அவ்வளவுதான். இப்படித்தான் சேதுசமுத்திரத்திட்டத்தையும் முடக்கினார். ‘தம்பி, எனக்கு நீண்ட நாட்களாக இருக்கும் கனவுதான் சேதுசமுத்திரத் திட்டம்' என்று முதலமைச்சர் ஆனதும் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அண்ணாவின் பெயரால் கட்சியை வைத்துக்கொண்டு அண்ணாவின் கனவைச் சிதைத்தது அ.தி.மு.க.
“அந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் இந்தியா வளம்பெறும் நாடாக மாறும். இலங்கையைச் சுற்றி செல்ல வேண்டிய நீளம் குறையும். வர்த்தகம் அதிகரிக்கும். அதை நிறைவேற்றினால் தமிழகம் வாழும். வெளிநாடுகளுக்கு எல்லாம் வாணிப சந்தையாக மாறும். வளம் பெருகும். வாணிபம் செழிக்கும். இங்கே உள்ள மீனவர்கள் வாழ்வும், மீனவர்களுக்கு நன்மை யாக முடியும். அந்த திட்டத்தை நிறைவேற்ற நமது ஆட்சியின் தொடக்கத்தில் கால்கோள் நடத்த வேண்டும்” என்று சொன்னார் பேரறிஞர்.
அதனைச் செயல்படுத்தினார் முத்தமிழறிஞர். அதனையும் முடக்கினார் ஜெயலலிதா. இன்றைக்கு சென்னை மக்களது போக்குவரத்துக்கு மாபெரும் உதவியாக இருக்கிறது மெட்ரோ ரயில். சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க ஒரு நீண்டகால தீர்வாக 14,600 கோடி ரூபாய் செலவில் 45 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில் அமைப்பதென 2006-ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள். இதில் 24.கி.மீ. தூரத்திற்கு சுரங்கப் பாதையும், 21 கி.மீ. தூரத்திற்கு மேம்பாலப் பாதையும் அடங்கும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக “சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட்” என்கிற சிறப்பு வகை பொதுத்துறை நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி இந்திய கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 3.12.2007 அன்று பதிவு செய்தது.
அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அதிகாரிகளுடன் 7.2.2008 அன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்று அங்குள்ள ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் (Japan International Co-Operation Agency) பேச்சு வார்த்தை நடத்தி நிதியுதவி பெற்று வந்தார். அதன் அடிப்படையில் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் 2.11.2008 அன்றுஒன்றிய அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையே கையெழுத்தானது. மத்திய - மாநில அரசுகளின் நிதி 41 சதவிகிதம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி 59 சதவிகிதம் என்று அந்தத் திட்டம் உருவானது.
28.1.2009 அன்று டெல்லியில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவும் இத்திட்டத்திற்கான இறுதி ஒப்புதலை வழங்கியது. 10.6.2009 அன்று தொடங்கி வைத்தார்கள். அப்போதும் ஜெயலலிதா என்ன சொன்னார்: ‘மெட்ரோ திட்டம் பயனற்றது, மோனோ ரயில் திட்டம்தான் சரியானது' என்று சொன்னார். ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் போது திட்டம் பாதியளவில் நிறைவேற்றப்பட்டதால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இல்லா விட்டால் மதுரவாயல் - துறைமுகம் வழித்தடத்தில் நெட்டைத் தூண்கள் நின்றதைப் போல மெட்ரோ வழித்தடத்தில் குட்டை குட்டையாக குழிகள் இருந்திருக்கும். தப்பித்தது மெட்ரோ. ஆனால் சிக்கிக் கொண்டது மதுரவாயல். இன்று தடைகளைத் தாண்டி உருவாகப் போகிறது உயர்மட்டப் பாலம்!