முரசொலி தலையங்கம்

“பிரதமர் மோடிக்கு பா.ஜ.கவை பற்றியே தெரியாதா?” : விளாசிய ‘முரசொலி’ தலையங்கம்!

“பா.ஜ.க.வில் வாரிசுகளாக பதவிகளில் இருப்பவர்களை பிரதமர் மோடி நீக்கி விடுவாரா?” என முரசொலி நாளேடு தலையங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

“பிரதமர் மோடிக்கு பா.ஜ.கவை பற்றியே தெரியாதா?” : விளாசிய ‘முரசொலி’ தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“பா.ஜ.க.வில் இருக்கும் வாரிசுகளைப் பற்றி பிரதமருக்குத் தெரியுமா? அப்படி வாரிசுகளாக பதவிகளில் இருப்பவர்களை நீக்கி விடுவாரா?” என முரசொலி நாளேடு தலையங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஏப்ரல் 13,2022) தலையங்கம் வருமாறு:

நாட்டின் உண்மையான பிரச்சினைகள் என்ன என்பதை அறியவிடாமல் திசை திருப்பும் காரியங்களை கனகச்சிதமாக பா.ஜ.க. பார்த்து வருகிறது. ‘ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரிகள் வாரிசு அரசியல்தான்' என்று பிரதமர் நரேந்திர மோடி புதிதாக, ஏதோ அரிய கண்டுபிடிப்பை நடத்தியதைப் போலப் பேசி இருக்கிறார். பா.ஜ.க. நிறுவியதன் 42ஆவது ஆண்டு விழா கடந்த வாரம் டெல்லியில் நடந்துள்ளது. அதில் பேசிய அவர், 2014 முதல் ஆளும்கட்சியாக அகில இந்திய அளவில் பா.ஜ.க இருப்பதால் அதனுடைய சாதனைகளைப் பற்றி பேசவில்லை. அதைத்தான் அவர் பேசி இருக்க வேண்டும். ஏழு ஆண்டுகளாக இந்த தேசத்துக்கும், மக்களுக்கும் எதைச் செய்தோம், இனி எதைச் செய்யப் போகிறோம் என்பது குறித்து அவர் பேசி இருந்தால் பாராட்டலாம். அப்படி எதுவும் இல்லாததால், ராகுல் காந்தியை மனதில் வைத்துக்கொண்டு வாரிசு அரசியல் குறித்து பேசி இருக்கிறார்.

வாரிசு அரசியல் கட்சிகள், குடும்ப ஆட்சியை நடத்துவதாகவும், இவர்களால் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து என்றும், பேசி இருக்கிறார். இத்தோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. ‘வாரிசு அரசியலை பா.ஜ.க. மட்டுமே எதிர்க்கிறது. அதை தேர்தல் பிரச்சினையாகவும் பா.ஜ.க மாற்றி இருக்கிறது' என்று பேசி இருக்கிறார் பிரதமர் மோடி அவர்கள்.

அவருக்கு பா.ஜ.க.வை பற்றியே தெரியவில்லை போலும். பா.ஜ.க.வில் இருக்கும் வாரிசுகளைப் பற்றி பிரதமருக்குத் தெரியுமா? அல்லது அவர்களை வாரிசுகளாக நினைக்க மாட்டாரா? அப்படி வாரிசுகளாக பதவிகளில் இருப்பவர்களை நீக்கி விடுவாரா?

சில வாரங்களுக்கு முன்னால் ‘ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழில் ‘பா.ஜ.க.வின் வாரிசு அரசியல்' என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியாகி இருந்தது. அதில் பா.ஜ.க. தலைவர்களில் யாரது வாரிசுகள் எல்லாம் அரசியலில் கோலோச்சுகிறார்கள் என்று இருக்கிறது.

* வேத்பிரகாஷ் கோயல், மத்திய அமைச்சராக இருந்தார். அவரது மனைவி சந்திரகாந்த் கோயல், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர்களது மகன்தான் இன்றைய ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் ஆவார்!

* தேபேந்திர பிரதான், முன்பு ஒன்றிய அமைச்சராக இருந்தார். இவரது மகன்தான் இன்று ஒன்றிய அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதான்.

* முன்னாள் ஒன்றிய அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் மகனான ஜோதிராதியத்ய சிந்தியா, இன்று ஒன்றிய அமைச்சராக இருக்கிறார்.

* கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த எஸ்.ஆர்.பொம்மை அவர்களின் மகன்தான் இன்று கர்நாடக முதலமைச்சராக இருக்கும் பசவராஜ் பொம்மை.

* இமாசலப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவர் பிரேம்குமார் துமால். இவரது மகனான அனுராக் தாகூர், இன்று ஒன்றிய அமைச்சராக இருக்கிறார்.

* கைலாஷ் விஜய்வர்க்கியா என்பவர் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளராக இருந்தார். அவரது மகன்தான் இன்று மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஆகாஷ் விஜய் வர்க்கியா.

* மத்தியபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வீரேந்திர சக்லேச்சாவின் மகன் ஓம் பிரகாஷ் சக்லேச்சா இன்று மத்திய பிரதேசத்தின் அமைச்சராக இருக்கிறார்.

“பிரதமர் மோடிக்கு பா.ஜ.கவை பற்றியே தெரியாதா?” : விளாசிய ‘முரசொலி’ தலையங்கம்!

* ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சரான வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங், இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

* கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா, இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

* மேனகா காந்தி மகன் வருண் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

* முன்னாள் ஒன்றிய அமைச்சர் சிசிர் அதிகாரியின் மகன்தான் இன்று மேற்கு வங்க மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.

* முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

* உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கின் மகன் ராஜ்வீர் சிங், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

* ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங், உ.பி. மாநில எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

* முன்னாள் ஒன்றிய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் ப்ரீத்தம் முண்டே, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

* முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி.பி.தாகூரின் மகன் விவேக் தாகூர் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இதுதான் பா.ஜ.க.வின் வாரிசு அரசியல் ஆகும். இவர்களைத்தான் எதிர்க்கிறார்களா? அல்லது இவர்களை விட்டு விட்டு எதிர்க்கிறார்களா?

அரசியலில் பேச வேண்டியது எது? இன்றைய பிரச்சினை என்பது வாரிசு அரசியலா? பொருளாதாரத்தை எத்தனையோ மடங்கு உயர்த்துவதாகச் சொன்னார்களே? உயர்த்தினார்களா? வேளாண்மையை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு ஆக்குவோம் என்றார்களே? ஆக்கினார்களா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார்களே? கொடுத்தார்களா? கருப்புப் பணத்தை முழுமையாக மீட்டுக்கொண்டு வருவோம் என்றார்களே? மீட்டுக் கொண்டு வந்தார்களா?

கருப்புப் பணத்தை மீட்டு இந்தியர் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் பணம் கொடுப்போம் என்றார்களே? கொடுத்தார்களா? பா.ஜ.க. ஆட்சியில் பெட்ரோல் விலை உயரவே உயராது என்றார்களே. அதுதான் இன்றைய நிலைமையா? பலவீனமான பிரதமர் இருப்பதால்தான் சீனா அத்துமீறுகிறது. பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஆக்கிரமிப்பே இருக்காது என்றார்களே? சீனா இந்த ஏழு ஆண்டுகளில் அமைதியாகி விட்டதா? மீனவர்கள் கடத்தப்படவோ, கைது செய்யப்படவோ மாட்டார்கள் என்றார்களே? இப்படித்தான் இருந்ததா?

‘அரசியலமைப்புச் சட்டம் மட்டும்தான் எனக்கு வேதம்' என்றார்களே. அப்படித்தான் நடந்து கொள்கிறார்களா? இத்தகைய கேள்விகளை ஜனநாயக சக்திகள் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே பா.ஜ.க.வின் திசை திருப்பும் அரசியல் நடக்கிறது. இது செல்லுபடி ஆகாது. கண்ணுக்கு முன்னால் நடக்கும் துன்ப துயரங்களுக்கு யார் காரணம் என்பதை நாடும் நாட்டு மக்களும் அறிவார்கள்!

banner

Related Stories

Related Stories