முரசொலி தலையங்கம்

” ’நீட்’ மரண ஓலங்கள் அடுத்த தேர்தலில் பா.ஜ.கவின் தோல்வியை தீர்மானிக்கும்” - முரசொலி நாளேடு தலையங்கம்!

உக்ரைன் போரும், நீட் எதிர்ப்பு போரும் என்ற தலைப்பில் முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

” ’நீட்’ மரண ஓலங்கள் அடுத்த தேர்தலில் பா.ஜ.கவின் தோல்வியை தீர்மானிக்கும்” - முரசொலி நாளேடு தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகத்தையே கவலையில் ஆழ்த்தியிருக்கிறது உக்ரைன் போர். என்றால், இந்தியாவைப் பொறுத்தவரை நீட் எதிர்ப்புப் போரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது அது!

உக்ரைன் போரைத் தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்களை அழைத்துவர இந்தியா முடிவெடுத்தது. தமிழக முதலமைச்சர் அவர்கள் இதற்கான முயற்சிகளை முழுமையாக எடுத்தார்கள். இப்படி திரும்பி வரும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்கள். இந்தியாவில்- குறிப்பாக தமிழகத்தில் இத்தனை மருத்துவக் கல்லூரிகள் இருக்கும்போது எதற்காக உக்ரைன் போக வேண்டும் என்ற கேள்வி நியாயமாக அனைவர் மனதிலும் எழும். இங்கே இடம் கிடைத்தால் எதற்காக அவர்கள் உக்ரைன் போகப் போகிறார்கள்?

‘நீட்’ என்ற தடையரணை உடைக்க முடியாத காரணத்தால் இந்தியாவை விட்டேபோய் - உக்ரைனில் படிக்கிறார்கள் இந்திய மாணவர்கள். பன்னிரண்டு ஆண்டு கால பள்ளிப் படிப்பை உதாசீனம் செய்து, இரண்டு மணி நேரத் தேர்வையே முக்கியமானதாக வைத்து, மாணவர்களைத் தகுதி நீக்கம் செய்யும் தேர்வு முறையாக ‘நீட்’ தேர்வு இருக்கிறது என்பதையே உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவர்களின் முகங்களில் ஓடும் கவலை ரேகை காட்டுகிறது. இதனைத் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கவலை தோய்ந்த அறிக்கையாக வெளியிட்டுள்ளார்கள்.

‘நீட்விலக்குத் தேவையை உக்ரைன் போர் உணர்த்துகிறது’ என்று நெற்றிப் பொட்டில் அடிப்பதைப் போலச் சொல்லி இருக்கிறார் அவர். நவீன் சேகரப்பா என்ற கர்நாடக மாநில இளைஞர், மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் சென்றுள்ளார். அவர் அங்கு இறந்து விட்டார். இதனை மனதில் வைத்துத்தான் முதலமைச்சர் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். "உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தங்களது மருத்துவக் கனவு என்ன ஆகுமோ என்ற கவலையில் மாணவர்கள் பெரும் இன்னலைச் சந்தித்து வருகின்றனர். உள்நாட்டில் படிக்க முடியாமல் வெளிநாடு சென்று படிக்க முற்பட்ட மாணவர்களின் ஆர்வத்தையும் அதற்காகக் கஷ்டப்பட்டு தங்களது சொத்துகளை விற்று, சொந்தச் சேமிப்புகளைக் கரைத்து, மேல்படிப்புக்கு உக்ரைனுக்கு அனுப்பி வைத்த பெற்றோரின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு கருத்துகளை வெளியிட வேண்டாம்" என்று முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்.

"உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பதும் -உள் நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் ‘நீட்’தேர்வை விலக்கு வதை உடனடி நோக்கமாகவும் கொள்ள வேண்டும்" என்ற அவரது வேண்டுகோள், இந்தியா முழுவதும் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் 700 பேர், கையில் இந்திய தேசியக் கொடியுடன் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ரயில் நிலையங்களை அடைந்துள்ளார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம் படிக்கச் சென்றவர்கள். தமிழகத்துக்கு இதுவரை 88 மாணவர்கள் திரும்பி வந்துள்ளார்கள். சொந்த நாட்டில் படிக்க முடியாமல் இவர்களை வெளிநாடுகளுக்குத் துரத்தியது எது? ‘நீட்’ தேர்வு தான்.

இதனை தமிழ்நாடு எதிர்த்தபோது மற்ற மாநிலங்களில் அந்தளவுக்கு உக்கிரமான எதிர்ப்பு இல்லை என்பது உண்மைதான். அவர்களுக்கு ‘நீட்’ தேர்வின் மோசடிகள் தெரியவில்லை என்பது முதலாவது காரணம். இந்தளவு கல்வியில் முன்னேற்றம் இல்லை என்பது இரண்டாவது காரணம். இவ்வளவு எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை என்பது மூன்றாவது காரணம். இந்தளவுக்கு மருத்துவம் படிக்கும் ஆர்வம் பிற்படுத்தப்பட்ட- மிகவும் பிற்படுத்தப்பட்ட - பட்டியலின- பழங்குடி மாணவர்களிடம் இல்லை என்பது நான்காவது காரணம். அதனால்தான் எதிர்ப்பும் அங்கே பதிவாகவில்லை. உக்ரைன் போர் இதிலும் ஒரு மாற்றத்தை விதைத்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி சொல்லியுள்ள கருத்து, இந்தியா முழுமைக்கும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. "உக்ரைனில் கர்நாடக மாணவர் நவீன் உயிரிழந்ததற்குக் காரணம்‘நீட்’ தேர்வு தான். பள்ளியில் 97 சதவிகித மதிப்பெண் பெற்ற நவீன் ‘நீட்’தேர்வு காரணமாக இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாமல் உக்ரைன் சென்றுள்ளார்" என்று கூறியுள்ள குமாரசாமி, "மாணவர்களின் நலனுக்காக ‘நீட்’ தேர்வை எதிர்த்துப் போராடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்" என்றும் சொல்லி இருக்கிறார்.

இவருக்கே இப்போதுதான் புரியத் தொடங்கி இருக்கிறது. ஐந்து ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வுக்கு எதிராக நாம் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். பிற மாநில அரசியல் தலைவர்களுக்கே இதன் வேதனைமிகு பக்கங்கள் இப்போதுதான் தெரியத்தொடங்கி இருக்கிறது. ‘நீட்’ தேர்வு என்பதை ‘பலிபீடம்’ என்று தமிழகம் வர்ணித்து வருகிறது. இது தகுதி, திறமை, கல்வி, அறிவு, ஆர்வம் ஆகிய அனைத்தையும் ஒரு மாணவனிடம் இருந்து பறிப்பதாக இருக்கிறது. அத்தோடு சேர்த்து அனிதா உள்ளிட்ட மாணவர்களின் உயிரையும் பறித்தது. இப்போது உக்ரைனில் இருந்து உயிருக்குப் பயந்து மாணவர்களை விரட்டவும் மறைமுகக் காரணமாக இருக்கிறது. இந்த அவல நிலைக்கு இன்னமும் போலிக் காரணங்களைச் சொல்லிக் கொள்ளாமல் முற்றுப்புள்ளி வைப்பதுதான் பா.ஜ.க.வுக்கு நல்லது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மையப் புள்ளியாக ‘நீட்’தேர்வுதான் இருக்கப் போகிறது. கடந்த தேர்தலில் ‘எய்ம்ஸ்’ செங்கல் - தேர்தல் தோல்வியை பா.ஜ.க.வுக்குத் தீர்மானித்ததைப் போல - வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ‘நீட்’ தேர்வு மாணவர்களின் மரண ஓலங்கள் பா.ஜ.க.வின் தோல்வியைத் தீர்மானிக்கும்.

banner

Related Stories

Related Stories