முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜன.4, 2022) தலையங்கம் வருமாறு:
கொரோனாவின் மூன்றாவது அலையை அரசும் மக்களும் இணைந்து எதிர்கொண்டாக வேண்டும். கொரோனா தடுப்புப் பணிகளில் தமிழ்நாடு அரசு முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. அரசு
எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் ஒத்து ழைப்புத் தர வேண்டும். கொரோனா காலக் கட்டுப் பாடுகள் அனைத்தையும் மக்களும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இவை இரண்டும் நேர்கோட்டில் அமைந்தால் மூன்றாவது அலைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். எந்த அலையையும் எதிர்கொள்ளலாம்.
தமிழகத்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா தொற்று ஒரு நாளில் 1600 என்ற எண்ணிக்கையைத் தொட்டு இருக்கிறது. இரண்டாவது அலைக்கு அரசு கடுமையான கட்டுப்பாட்டுகள் மூலமாக முற்றுப்புள்ளி வைத்த பிறகு மூன்றாவது அலை நுழைந்துள்ளது. ஓரிருவருக்கு வந்து உள்ளே நுழைந்தாலே போதும் - அது வைரஸ் என்பதால் மிகமிக வேகமாகப் பரவும். எனவே எந்த அலையையும் பரப்ப ஓரிருவரால் கூட சாத்தியம் ஆகிவிடும். அப்படித்தான் உள்ளே நுழைந்து மூன்றாவது அலையாக மாறிவிட்டது.
இதனை அரசு மறைக்க நினைக்கவில்லை. யதார்த்தமான நிலைமையை வெளிப்படுத்துவது தான் முதலில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் முயற்சி ஆகும். அந்த அடிப்படையில்தான் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் வார்த்தைகளை அளவிட வேண்டி உள்ளது. “கொரோனா பாதிப்பின் மூன்றாவது அலை சுனாமி போல தீவிரமாகி வருகிறது” என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். அவர் அப்படிச் சொன்னதற்குக் காரணம், உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் அலை தொடங்கி இருப்பதால்தான்.
கடந்த 1 ஆம் நாள் அன்று மட்டும் உலகம் முழுவதும் ஒரேநாளில் 18 இலட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனை உலகச் சுகாதார நிறுவனம் கடுமையானபரவல் என்று சொல்லி இருக்கிறது. இது அலையைப் போல வந்துவிடும் ஆபத்துக்குரியது. உலகின் ஏதாவது ஒரு நாட்டில் இருந்து இத்தொற்றுள்ளவர், இங்கு வந்தாலே போதும் அதிகமாக பரவிவிடும். எனவேதான் அனைத்து வகையிலும் எச்சரிக்கை உணர்வுடன் அரசு செயல்பட்டு வருகிறது. மக்களையும் அதே எச்சரிக்கை உணர்வுடன் தயார்படுத்தியும் வருகிறது.
தடுப்பூசியை இயக்கமாக மாற்றி விட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதுவரை தமிழ்நாட்டில் 17 நாட்கள் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15-18 வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். இந்த வயதில் 33.20 லட்சம் பேர் இருக்கிறார்கள். இதில் 29 லட்சம் பேர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் ஆவார்கள். இவர்கள் அனைவருக்கும் பள்ளிகளிலேயே முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த அரசு முடிவெடுத் துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
60 வயதைக் கடந்தவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் வரும் 10 ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் கடந்தவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கொரோனா தொற்று தொடர்பாக மருத்துவ ஆலோசனைகள் பெற சென்னை மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்கும் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.சென்னையில் மண்டலத்துக்கு 5 பேர் என 15 மண்டலங் களில் தன்னார் வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தினமும் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இப்படிஅனைத்து மாவட்டங்களிலும் துரிதமாக பணிகள் நடந்து வருகிறது.
அரசு தனது கடமையைச் சரிவர, முழுமையாக, துரிதமாகச் செய்து வரும் நிலையில் பொதுமக்கள் தங்கள் கடமையைச் செய்தாக வேண்டும். கடமைஎன்று சொல்வது, கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது தான்.
“தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் நலனும் எனக்கு முக்கியம்” என்றஉருக்கமான அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ளார்கள். கட்டுப்பாடுகளைக் கடைப் பிடியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
* கூட்டமாகக் கூடுவதை தவிர்த்து விடுங்கள்!
* அவசரத் தேவை நீங்கலாக வெளியில் வராதீர்கள்!
* அன்றாடப் பணிகளுக்காக வெளியில் வருபவர்கள் கவனமாக
இருங்கள்!
* இருவர்க்கு இடையே இடைவெளி இருக்கட்டும்!
*கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்!
* முகக்கவசம் போட்டுக் கொள்ளுங்கள்!
* தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்!
* இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளுங்கள்!
- இவைதான் பொதுமக்களிடம் இருந்து அரசு எதிர்பார்ப்பது ஆகும்.
இவை ஏதோ அரசாங்கத்தின் தேவைகள் அல்ல. பொதுமக்களின்தேவைகள்தான். பொது இடங்களில் பொது மக்கள் கவனத்துடன் நடந்து கொண்டாலே போதும்.
மக்களைக் காக்க அரசு இருக்கிறது. அனைத்து மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கி வைத்துவிட்டார் முதலமைச்சர்.அத்தகைய அரசுக்கு மக்கள் தர வேண்டிய ஒத்துழைப்பு என்பது கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதுதான். அரசும், மக்களும் இப்போது இணைந்து இருப்பது போல எப்போதும் இருப்போம்!