அ.தி.மு.க என்ற கட்சி தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டதாம். அதற்காக விழா எடுத்தார்கள். அது அவர்கள் உரிமை. விழா எடுக்கட்டும். அந்தக் கட்சி உருவாக்கம் குறித்த துரோகங்களை எல்லாம் தியாகங்களாகக் காட்டி பொய்யும் புனைசுருட்டும் கொண்ட வரலாற்றுக் கட்டுரைகளை - அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு முனைந்த துரோகசக்தி எல்லாம் எழுதுவதுதான் மாபெரும் துரோகம் ஆகும். அந்தக் கட்சி எப்படி உருவாக்கப்பட்டது என்பதை அந்தக் காலத்து போலீஸ் பெரிய மனிதர்கள் எழுதி இருக்கிறார்கள். அதுதான் உண்மையானதே தவிர, இந்தப் போலி ஐ.ஏ.எஸ் சென்டர் பேர்வழிகள் எழுதுவது அல்ல!
‘பெரிய மீசை’ கே.மோகன்தாஸ் என்ற காவல்துறை அதிகாரியை யாரும் மறந்திருக்க முடியாது. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தமிழக டி.ஜி.பி.யாக இருந்தவர். 1970 முதல் டெல்லி சி.பி.ஐ.யில் பணியாற்றியவர். அவர் ‘எம்.ஜி.ஆர். நிஜமும் நிழலும்’ என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதினார். 1971 இல் தி.மு.க.வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை கே.மோகன்தாஸ் எழுதுகிறார் :
“தி.மு.க அரசைக் கவிழ்க்கும் பணி ஒரு மத்திய அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அது அப்போது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். திட்டம் போட்டுக் காரியம் சாதிப்பதில் கெட்டிக்காரரான அந்த அமைச்சர், அரசைக் கவிழ்க்க வேண்டுமானால் முதலில் கட்சியைப் பிளக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தார்.
எனவே கட்சித் தலைமை மீது அதிருப்தி கொண்டிருந்த எம்.ஜி.ஆரை அவர் பயன்படுத்திக் கொண்டார். ஒருபுறம் அவரை இதற்குச் சம்மதிக்க வைத்தார். மறுபுறம் இதற்கு உடன்படாவிட்டால் எம்.ஜி.ஆர் வருமான வரி பாக்கி, அந்நியச் செலாவணி வரம்பு மீறல் போன்ற குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று மறைமுகமாக எச்சரித்தார். எம்.ஜி.ஆர் பணிந்தார். இதற்கிடையே கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று அவர் தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்டார். உடனே அ.தி.மு.க.வைத் தொடங்கினார்” என்று எழுதும் கே.மோகன் தாஸ், எம்.ஜி.ஆரின் நெருக்கமான நண்பர்தான்.
இதனை இன்னும் விரிவாக 1992ஆம் ஆண்டு ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டது. ‘போலீஸ் மனிதர்கள்’ என்ற தொடரை அந்த இதழ் வெளியிட்டது. 23.3.1992 இதழில் உளவுத்துறை அதிகாரி ஒருவரின் பேட்டி இடம்பெற்றது. அதில் அந்த அதிகாரி சொல்கிறார் : “எம்.ஜி.ஆரைத் தி.மு.க.விலிருந்து வெளியே கொண்டுவர ஒரு பெரிய நாடகம் நடத்தினோம். அந்தப் பொறுப்பு மத்திய உளவுத் துறைக்கு தரப்பட்டது. அதற்கான வேலைகளைச் செய்ய இன்டெலிஜன்ஸ் உயர் அதிகாரிகளின் உதவிக்கு காங்கிரஸ் பிரமுகர் ஒருவரும் அனுப்பப் பட்டிருந்தார். அந்தக் காங்கிரஸ் பிரமுகர் இன்டெலிஜன்ஸ் அதிகாரிகளோடு உட்கார்ந்து திட்டம் போட்டுக் கொடுத்தார். தமிழக அரசியல் தெரியும் என்பதால் எனக்கு ‘ஸ்பெஷல் ட்யூட்டி’ போட்டிருந்தார்கள். தி.மு.க.வில் முக்கியப் புள்ளிகள் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தபோது எம்.ஜி.ஆர் தான் முன்னணியில் இருந்தார். அப்போது ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.! வருமானமும் அவருக்கு அதிகமாக இருந்த நேரம்...
எம்.ஜி.ஆர் நாடகத்தின் பின்னணிகள்!
இதைக் கருத்தில் கொண்டு வருமான வரி அதிகாரிகள், அடுத்து வருவாய்க் கண்காணிப்பு அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate) என்று எல்லா அதிகாரிகளும் எம்.ஜி.ஆர். வீட்டை முற்றுகையிட்டு அவரைக் குடைந்தெடுத்தார்கள். அப்போது அவர் ஒரு சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக வெளிநாடு சென்று வந்திருந்தார். அதற்கான கணக்கு வழக்குகளையும் விசாரித்தார்கள். ஆனால் இதற்கெல்லாம் பெரும் பின்னணி இருப்பது அவருக்குத்தெரியாது!
இந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆருடன் பேச என்னை அனுப்பினார்கள். நான் போன போது எம்.ஜி.ஆர். மிகவும் சோர்வாக இருந்தார். நானே வலியப் பேசி “பிரச்சினைகளைச் சமாளிக்க டெல்லிக்குப் போய் அம்மாவை (இந்திரா) பாருங்க... எல்லாம் சரியாகப் போய்விடும்” என்று யோசனை சொன்னேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் எம்.ஜி.ஆர்.!
பிறகு நானே, முக்கியமான காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் மூலமாக ‘அம்மா’வை மீட் பண்ணுங்க என்று கூறி, வழிகாட்டிக் கொடுத்தேன். அதன்படியே எம்.ஜி.ஆர் அந்தக் காங்கிரஸ் பிரமுகர் மற்றும் தன் வழக்கறிஞர், ஆடிட்டருடன் சென்று பிரதமர் இந்திராவைச் சந்தித்தார். சந்திப்பு நடந்து எம்.ஜி.ஆர் உற்சாகமாகத் திரும்பினார். இப்படித்தான் மெதுவாகத் தொடங்கி தி.மு.க.வில் உட்பூசல் உண்டாக்கிக் கடைசியில் 1972ல் எம்.ஜி.ஆரைத் தி.மு.க.விலிருந்தே வெளியேற வைத்தோம்...” என்று அந்த உயர் போலீஸ் அதிகாரி சொல்லி இருக்கிறார். இப்படி போலீஸால் முன்னுரை எழுதப்பட்ட கட்சிதான் அது.
இதற்கான முடிவுரையை பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா எழுதினார். உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகிய இருவரும் இறுதி அத்தியாயத்தை எழுதி முடித்தார்கள். ஜெயலலிதா யோக்கியர் என்றும், சசிகலாதான் அனைத்துக்கும் காரணம் என்றும் சில புல்லுருவிகள் புதிய வியாக்கியானம் சொல்லி வருகிறார்கள். இது தவறானது என்பதை உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது. ஜெயலலிதாவை வைத்து சசிகலா சம்பாதித்தார் என்பதை நீதிமன்றம் நம்பவில்லை. என்ன சொன்னது தெரியுமா? தனது தவறை மறைக்க, சசிகலாவை ஜெயலலிதா உடன் வைத்துக் கொண்டார் என்றது நீதிமன்றம்.
“மனிதர்களை நேசிக்கும் கொடைப்பண்பு காரணமாக சசிகலாவுக்கு போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா இடம் கொடுக்கவில்லை. குற்ற நடவடிக்கையில் இருந்து தான் தப்பித்துக் கொள்ளவே சசிகலாவை தனது வீட்டில் ஜெயலலிதா வைத்துக் கொண்டார். இவர்களது கூட்டுச் சதியால் முறைகேடுகள் நடந்தது” என்று சொல்லப்பட்டது தீர்ப்பில்.