முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (06-10-2021) வருமாறு:
'நீட்’ எதிர்ப்பு நீண்ட பயணத்தின் அடுத்த கட்டமாக 12 மாநில முதலமைச்சர்களுக்கு நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். ‘நீட்’ தேர்வை ஏன் நிராகரிக்க வேண்டும் என்பது அதன் மையப்புள்ளியாக இருந்தாலும் - கல்வியில் மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதே அதன் அடித்தளமாக உள்ளது.
‘நீட்’ தேர்வை நிராகரிப்பதன் மூலமாகத்தான் கல்வித் துறையில் மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும் என்கிறது முதல்வரின் கடிதம். தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.இராஜன் குழுவினரின் அறிக்கையை இந்தக் கடிதத்துடன் இணைத்து அனுப்பி இருக்கிறார் முதல்வர். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் 2021' உருவாக்கப்பட்டது.
அந்த சட்டமுன் வடிவையும் மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் அனுப்பி இருக்கிறார். ‘நீட்’ தேர்வானது மாநில உரிமைகளை எப்படி எல்லாம் மீறுகிறது என்பதையும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார். இனி இதுதான் அகில இந்தியா முழுமைக்கும் வேலை செய்யப்போகிறது. தி.மு.க நடத்தி வந்த ‘நீட்’ எதிர்ப்பு போராட்டத்தின் அடுத்த கட்டமாகும் இது.
தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடங்கப்பட்டது. ஒன்றிய அரசால் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே.இராஜன் தலைமையில் 10.6.2021 அன்று குழு அமைக்கப்பட்டது. 86 ஆயிரத்து 342 பேர் தங்கள் கருத்தை பதிவு செய்தார்கள். இக்குழு அரசுக்கு 14.7.2021 அன்று அறிக்கை அளித்தது.
இந்த அறிக்கை மீது விரிவான பரிந்துரைகளை செயல்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை முதலமைச்சர் அமைத்தார். அவர்கள் ஒரு சட்டத்தை வடிவமைத்தார்கள். அதுதான் சட்டமன்றத்தில், தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் 2021 ஆகும்.
நீதியரசர் ஏ.கே.இராஜன் ஆணையமே செல்லாது என்று பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்தார்கள். அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரை வைத்தே உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட வைத்தார்கள். தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையையே ரத்து செய்ய கோரிக்கை வைத்தார்கள். ஆனால் இந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஆணையம் அமைக்க அரசுக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பு வந்தது. ‘நீட்’ தேர்வு நிராகரிக்கத்தக்கதே என்பதற்கான கருத்துக்கள் அனைத்துமே நீதியரசர் ஏ.கே.இராஜன் குழுவின் அறிக்கையில் உள்ளது.
சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வியைப் பெறும் கனவிற்கு இடையூறாகவும் சமூகப் பொருளாதாரத்தில் வளமிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து, எம்.பி.பி.எஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை ‘நீட்’ தேர்வானது குறைத்துள்ளது.
அரசுப் பள்ளியின் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5இலட்சத்திற்கும் குறைவாக கொண்டுள்ளவர்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எம்.பி.பி.எஸ் மாணவர்களின் தகுதி அல்லது தரத்தினை ‘நீட்’ தேர்வு உறுதி செய்வதாக தெரியவில்லை. ஒப்பிடுகையில், குறைந்த செயல்திறன் கொண்ட (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மேனிலை மதிப்பெண்களில்) மாணவர்கள் எம்.பி.பி.எஸ்க்கு சேர்க்கை பெறுவதற்கு மட்டுமே தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு புகுத்தியுள்ளது.
‘நீட்’ தேர்வானது மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என்பதும் தவறானதே. 2017 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே அதிக மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள மாநிலங்களுள் தமிழ்நாடு ஒன்றாக இருந்தது. இந்த நிறுவனங்களிடமிருந்து பட்டம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவராக விளங்கினர். எனவே, உயர்நிலைப் பள்ளிப் பாடத்திட்டம் போதுமான தரத்தில் இருக்கும் சூழவில், தகுதித்தேர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சேர்க்கையானது எந்த வகையிலும் கல்வியின் தரத்தைக் குறைத்து விடாது. மருத்துவக் கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையினை இந்திய அரசியலமைப்பின் VII -வது அட்டவணையின் III-வது பட்டியலில் 25வது உள்ளீட்டில் காணலாம். எனவே, மாநில அரசானது அதை முறைப்படுத்த தகுதியுடையது.
சமூக நீதியை உறுதி செய்யவும், சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகளை நிலைநிறுத்தவும், பாதிப்பிற்குள்ளாகக்கூடிய மாணவர்களைப் பாதுகாக்கவும், மாநிலத்தில், முக்கியமாக கிராமப் பகுதிகளில், வலுவான பொது சுகாதார கட்டமைப்பை உறுதி செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை மேற்கொள்ள இச்சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது. - என்று சட்டமுன் வடிவில் தெளிவாக உள்ளது. இந்த சட்டமுன் வடிவை ஆதரித்து சட்டமன்றத்தில் வாக்களித்த புத்திசாலி பழனிசாமி, ‘இந்த சட்டத்தால் என்ன பயன்?' என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார். காபி குடித்துவிட்டு பல் தேய்க்கும் ரகம் அவர். அப்படித்தான் கேட்பார்.
தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டமுன் வடிவை பல்வேறு மாநிலங்கள் தங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் என்ன ஆகும்? ஒன்றிய அரசின் எதேச்சதிகாரத்தில் ஆட்டம் காணும். உச்சநீதிமன்றமும் இதை உன்னிப்பாக கவனிக்கும். அத்தகைய சூழலை உருவாக்கி இருக்கிறது முதலமைச்சரின் கடிதம்!