300 நாட்கள் கழித்தும் எதற்காக விவசாயிகள் போராடுகிறார்கள் என்பது தெரியவில்லை என்று பா.ஜ.க. அரசு சொல்லுமானால் அது பேசவில்லை, நடிக்கிறது என்று பொருள் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
அதன் விவரம்:-
”ஆங்கில இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிரதமர் மோடி வேளாண் சட்டங்களைப் பற்றி விரிவாகப் பேசி இருக்கிறார். நாடாளுமன்றத்தில் இதுவரை அது குறித்து விரிவாகப் பேசாத அவர், இப்போதாவது பேசி இருப்பது வரவேற்கத்தக்கதுதான். அப்படி பேச முன்வந்தவர், மூன்று வேளாண் சட்டங்கள் மூலமாக ஏற்படப் போகும் நன்மையை அல்லவா விளக்கி இருக்க வேண்டும்? அப்படி ஒன்று இருந்தால்தானே விளக்குவார்? அப்படி ஏதும் இல்லாததால் அரசியல் வேளாண்மையைச் செய்துள்ளார்.
"வேளாண் சட்டங்களை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள்’’ என்று எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டி உள்ளார் பிரதமர். மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள் விவசாயிகள். அவர்கள் அனைவரும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளா? அவர்களுக்கு அவர்களது வாழ்க்கைக் காரணம் நீங்கலாக வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 300 நாட்களைக் கடந்து தங்களது நிலத்தில் இருந்து விலகி இத்தகைய போராட்டத்தை அரசியல் காரணங்களுக்காக யாராவது முன்னெடுப்பார்களா? 300 நாட்கள் கழிந்தும் அவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்பது இன்னுமா புரியவில்லை? எதற்காகப் போராடுகிறார்கள் என்பதே தெரியாமல் எப்படி அதற்கு தீர்வு காண்பீர்கள்? இதைவிடக் கொடுமையாக இன்னொரு பெரிய பொய்யையும் பிரதமர் சொல்லி இருக்கிறார் அந்தப் பேட்டியில்.
அவர் தாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பதை இன்னமும் எங்களிடம் சொல்லவில்லை என்பதுதான் அந்தப் பொய்? போராட்டக்காரர்களையும் அதன் பிரதிநிதிகளையும், அழைத்து வேளாண்துறை அமைச்சர் தோமர் எத்தனையோ முறை பேச்சுவார்த்தை நடத்தினாரே? அது எதுவும் பிரதமருக்குத் தெரியாதா? அது தனிப்பட்ட தோமர் நடத்திய பேச்சுவார்த்தைகளா? இது தோமரின் சொந்தப் பிரச்சினையா? அப்போது இந்த சட்டத்தைப் பற்றி இல்லாமல் இரண்டு தரப்பும் வேறு எதைப் பற்றி பேசியது? "ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகளுடன் உட்கார்ந்து பேசுவதற்கும் அவர்களுக்கு உடன்பாடு இல்லாத குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கவும் தயார் என்று அரசு கூறி வந்துள்ளது. ஆனால் இன்று வரை எந்தக் குறிப்பிட்ட அம்சத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, இதை மாற்றவேண்டும் என்று அவர்கள் தரப்பில் இதுவரை யாரும் சொல்லவில்லை’’ என்றும் பிரதமர் சொல்லி இருக்கிறார்.
இது பற்றி நூற்றுக்கணக்கான முறை விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் பேட்டிகள் அளித்துள்ளார்கள். குறைந்தபட்ச ஆதார விலை என்பது இந்த சட்டத்தில் இல்லை என்பது அவர்களது மிக முக்கியமான குற்றச்சாட்டு. இது கூடவா இன்னமும் புரியவில்லை? குறைந்தபட்ச ஆதாரவிலை என்ற சொல்லே மூன்று வேளாண் சட்டத்தில் இல்லை என்பதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். குறைந்தபட்சம் இதுகூடவா புரியவில்லை? தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநில அரசுகள் வசம் இருக்கும் வேளாண் விற்பனையை கார்ப்பரேட் நிறுவனங்களின் வசம் இந்த சட்டம் தூக்கிக்கொடுக்கிறது. பல ஆண்டுகளாக விவசாயிகளின் விளை பொருட்களை விற்பனை செய்து கொடுப்பதில் பெரும்பங்கு ஆற்றி வரும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களின் சந்தைப் பகுதியை உள்நோக்கத்துடன் இந்த சட்டம் குறைக்கிறது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு இது பெருமளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். தனியார் கூட்டாண்மை நிறுவனங்களை மாநில அரசின் கண்காணிப்பிலிருத்து விடுவிப்பதற்காகத்தான் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோகம் ஆகப் போகிறது. இலாபகரமான விலை குறித்து விவசாயிகள் பேரம் பேச முடியாத நிலை இதனால் உருவாகும். இந்த சட்டத்தின் நிபந்தனைகள் விவசாயிகளை விட, விளைபொருளை வாங்கும் தனியாருக்கே சாதகமாக இருக்கும். விளைபொருள்களின் சேமிப்புக் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை நிறுத்தப்படும். விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காது. செயற்கையான விலையேற்றம் ஏற்படும். விவசாயிகளும், விவசாயத் தலைவர்களும் கவலைப்படுவது, மண்டிகள் என்ற ஏ.பி.எம்.சி.க்கு வெளியே தனியார்களை கொண்டு வருவதன் மூலம் ஏ.பி.எம்.சி.யில் விவசாயப் பொருட்களை வாங்குபவர்கள் எண்ணிக்கை சரியும் என்பதால்தான்.
விவசாய இயக்கங்களின் தலைவரான யோகேந்திர யாதவ் இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றில் கூறும்போது, "ஏ.பி.எம்.சி. என்று அழைக்கப்படும் கமிட்டிகளுக்கு வெளியே இருக்கும் தனியார்களுக்கு கூடுதல் கட்டணம், வரி இல்லை என்றால் ஏ.பி.எம்.சி. பக்கம் யாரும் வர மாட்டார்கள். வர்த்தகர்கள் எளிதாக வெளியேயிருந்து கொள்முதல் செய்து கொள்வார்கள். அவர்கள் தங்கள் லாபத்தில் ஒரு விகிதத்தை தருவதாகக் கூறி விவசாயிகளை ஆசை காட்டி இழுக்க முடியும். இப்படி செய்தால் ஏ.பி.எம்.சி. முறை முற்றிலும் சரிவடைந்து விடும்" என்கிறார். எனவேதான் யோகேந்திரயாதவ், "ஏ.பி.எம்.சி. முறையை மேம்படுத்துவதற்குப் பதிலாக இவர்கள் தனியார்களுக்கு தாரை வார்த்து மண்டி முறையையே ஒழிக்கப் பார்க்கின்றனர்" என்கிறார். இது நடந்தால் விவசாயிகள் வைக்கும் விலை, விவசாயிகளுக்கு கிடைக்காது. வியாபாரிகள் சொல்லும் விலைக்கு விற்றாக வேண்டும். இதனால் சந்தைப் போட்டி நிச்சயமாக ஏற்படாது. நிறுவனங்கள் தங்களுக்குள் ரகசிய ஒப்பந்தங்களை வைத்துக் கொண்டு விலையை நிர்ணயித்துக் கொள்வார்கள்.
அதிலும் ஏமாறப் போவது விவசாயிதான். இதே போன்ற முறை பீகாரில் 2006 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. பீகார் விவசாயிகளின் பின் தங்கிய நிலைமைக்கு அதுதான் காரணம். இதேபோல் ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்ற நினைக்கிறது பா.ஜ.க. அரசு. 300 நாட்கள் கழித்தும் எதற்காக விவசாயிகள் போராடுகிறார்கள் என்பது தெரியவில்லை என்று பா.ஜ.க. அரசு சொல்லுமானால் அது பேசவில்லை, நடிக்கிறது என்று பொருள்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.